மாவட்ட தலைவர்கள் மாற்றத்தால் ம.பி., - காங்.,கில் பலர் ராஜினாமா
போபால்: மத்திய பிரதேச காங்கிரசில் மாவட்ட தலைவர்கள் அறிவிக்கப்பட்டது, அதிருப்தியை ஏற்படுத்தியதால், பல்வேறு பகுதிகளில் அக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பலரும் கட்சியில் இருந்து விலகி ராஜினாமா செய்துள்ளனர். மத்திய பிரதேசத்தில், காங்கிரசின் மாவட்ட தலைவர்கள் மாற்றப்பட்டு, புதிய நிர்வாகிகள் பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. அதன்படி, 71 மாவட்டங்களுக்கான தலைவர்கள் அறிவிக்கப்பட்டனர். ஆறு எம்.எல்.ஏ.,க்களுக்கும், எட்டு முன்னாள் எம்.எல்.ஏ.,க்களுக்கும், மூன்று முன்னாள் அமைச்சர்களுக்கும் மாவட்டத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய நிர்வாகிகள் பட்டியல், மத்திய பிரதேச காங்கிரசார் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, தலைவராக இருந்தவர்களுக்கும், தலைமைக்கு நெருக்கமானவர்களுக்கும் மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளதாக கூறி, பல பகுதிகளில் கட்சித் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். பதவியை எதிர்பார்த்து காத்திருந்த பலரும் ஏமாற்றம் அடைந்தனர். இதைத் தொடர்ந்து, அவர்களுடைய ஆதரவாளர்கள், கட்சித் தலைமைக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டனர். இதைத் தவிர, பல நிர்வாகிகள், கட்சித் தொண்டர்கள், கட்சியில் இருந்து விலகுவதாக, ராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்துள்ளனர். பல நிர்வாகிகள், சமூக வலைதளங்களிலும், தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.