மஹோபா: 'உங்களுக்கு ஓட்டுஅளித்து எம்.எல்.ஏ., ஆக்கிய எனக்கு, நீங்கள் தான் பெண் பார்த்து திருமணம் செய்து வைக்க வேண்டும்' என, பா.ஜ., -- எம்.எல்.ஏ.,விடம் பெட்ரோல் பங்க் ஊழியர் அடம்பிடித்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் அரங்கேறிஉள்ளது. உத்தர பிரதேசத்தின் மஹோபா மாவட்டத்தில் உள்ள சர்க்காரிசட்டசபை தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ.,வாக இருப்பவர் பிரிஜ்பூஷன் ராஜ்புத். இவர், காரில் பெட்ரோல் நிரப்புவதற்காக பெட்ரோல் பங்க் சென்றார். அகிலேந்திர கரே, 44, என்ற ஊழியர், எம்.எல்.ஏ.,வின் காரில் பெட்ரோல் நிரப்பினார்.பின் எம்.எல்.ஏ., விடம் மெல்ல பேச்சு கொடுத்தார்.கரே: வணக்கம் சார்... எனக்கு 44 வயதாகியும் இன்னும் திருமணம் ஆகவில்லை. நீங்கள் தான் பெண் பார்த்து திருமணம் செய்து வைக்க வேண்டும்.ராஜ்புத்: அந்த வேலைக்கு ஏன் என்னை தேர்ந்தெடுத்தீர்கள்?கரே: ஏனென்றால், நான் உங்களுக்கு ஓட்டளித்து எம்.எல்.ஏ., ஆக்கியுள்ளேன்.ராஜ்புத்: (வியப்படைந்த எம்.எல்.ஏ.,) இது சம்பந்தமாக வேறு யாரையாவது அணுகினீர்களா?கரே: மஹோபா எம்.எல்.ஏ., ராகேஷ் குமார் கோஸ்வாமியிடம் கேட்டேன். ஒன்றும் நடக்கவில்லை.ராஜ்புத்: பெண் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும்?கரே: (ஒரு குறிப்பிட்ட ஜாதி பெயரை சொல்லி) அந்த ஜாதியைச் சேர்ந்த பெண் மட்டும் வேண்டாம்.ராஜ்புத்: நீங்கள் எனக்கு ஓட்டளித்ததால், உங்களுக்கு பெண் பார்க்கிறேன். ஆனால், ஜாதி பாகுபாடு பார்ப்பது சரியில்லை. எவ்வளவு சம்பாதிக்கிறீர்கள்?கரே: மாதம் 6,000 ரூபாய் சம்பளம் கிடைக்கிறது; 8 ஏக்கர் நிலம் உள்ளது. ராஜ்புத்: அப்படியானால் நீங்கள் கோடீஸ்வரர் என, கரேவுக்கு கைகொடுத்து விடைபெற்ற எம்.எல்.ஏ., பிரிஜ்பூஷன் ராஜ்புத், இந்த உரையாடலை படம் பிடித்து அதை தன் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.