மஹா கும்பமேளா 2வது நாளில் மக்கள் கடல்! சாதுக்கள், பொதுமக்கள் புனித நீராடல்
பிரயாக்ராஜ்; மஹா கும்பமேளாவின் முதல், 'அமிர்த ஸ்னான்' எனப்படும் புதிய நீராடல் நேற்று நடந்தது. பல்வேறு மடங்களைச் சேர்ந்த மடாதிபதிகள், சாதுக்கள், சன்னியாசிகள் இதில் பங்கேற்றனர். திரிவேணி சங்கமத்தில், பக்தர்கள் கடல்போல் சூழந்து புனித நீராடினர்.உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, 144 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் மஹா கும்பமேளா, நேற்று முன்தினம் துவங்கியது. வரும், பிப்., 26ம் தேதி வரை, 45 நாட்களுக்கு கும்பமேளா நடக்க உள்ளது. இதில், 40 கோடி பேர் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.கும்பமேளா துவங்கிய நேற்று முன்தினம் மட்டும், 1.75 கோடி பேர், கங்கை, யமுனை மற்றும் புராணங்களில் கூறப்படும் சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர்.கும்பமேளாவின், 45 நாட்களும் மக்கள் புனித நீராடுவர். அதே நேரத்தில், சில முக்கிய தினங்களில் மடாதிபதிபதிகள், சாதுக்கள், சன்னியாசிகள் உள்ளிட்டோர் புனித நீராடுவர். இந்த முக்கிய புனித நீராடும் நாட்கள், அமிர்த ஸ்னான் எப்படும் அமிர்த புனித நீராடல் என்று அழைக்கப்படுகின்றன. அதன்படி, மகர சங்கராந்தி தினமான நேற்று, முதல் அமிர்த ஸ்னான் நடந்தது.அதிகாலை 3:00 மணிக்கு பிரம்ம முகூர்த்தத்தில் புனித நீராடல் துவங்கியது. ஸ்ரீ பஞ்சயடி அகாரா மஹாநிர்வானி, ஸ்ரீ சம்பு பஞ்சயடி அடல் அகாரா ஆகிய மடங்களைச் சேர்ந்தவர்கள் முதலில் புனித நீராடினர். இந்த மஹா கும்பமேளாவில், 13 அகாரா எனப்படும் மடங்களைச் சேர்ந்த மடாதிபதிகள், சாதுக்கள், சன்னியாசிகள், பக்தர்கள் பங்கேற்கின்றனர்.கடும் குளிர், பனிப்பொழிவுக்கு இடையே, நேற்று அதிகாலையில் துவங்கிய புனித நீராடலில், மடாதிபதிகள் புடை சூழ, பக்தர்களும் புனித நீராடினர். முன்னதாக, உடல் முழுதும் திருநீர் அணிந்த நாக சாதுக்கள், அவர்களை வழிநடத்திச் சென்றனர். திரிசூலம் உட்பட பல விதமான ஆயுதங்களை வைத்திருந்த அவர்கள், உடுக்கைகளை அடித்தும், சங்குகளை முழங்கியபடியும் சென்றனர்.பக்தி பாடல்கள், கோஷங்களுக்கு இடையே இந்த ஊர்வலம் நடந்தது. திரிவேணி சங்கமத்தில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து படித்துறைகளிலும் மடாதிபதிகள் மற்றும் மக்கள் புனித நீராடினர். நேற்று காலை 8:30 மணிக்குள்ளாகவே, 1.38 கோடி பேர் புனித நீராடியதாக, உத்தர பிரதேச அரசு தெரிவித்துள்ளது.அடுத்ததாக, ஜன., 29ல் மவுனி அமாவாசை, பிப்., 3ல் பசந்த பஞ்சமி, 12ல் மாகி பூர்ணிமா, 26ல் மகா சிவராத்திரி ஆகியவையும், அமிர்த ஸ்னான் நடக்கும் முக்கிய நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.'நம் புனித கலாசாராம் மற்றும் நம்பிக்கை மிகவும் உயிர்ப்புடன் உள்ளதை காட்டும் வகையில் கும்பமேளா நடக்கிறது. மகர சிவராத்திரி பண்டிகையின்போது, அமிர்த புனித நீராடிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்' என, முதல்வர் யோகி ஆதித்யநாத், சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.'மகா கும்பமேளாவில் பக்தி, ஆன்மிகம் ஆகியவற்றின் அற்புதமான சங்கமம் நடக்கிறது. மகர சங்கராந்தியை முன்னிட்டு மகா கும்பமேளாவில் முதல் அமிர்த புனிதநீராடலில் பங்கேற்ற அனைத்து பக்தர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்' என, பிரதமர் நரேந்திர மோடி, சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவிக்கு அலர்ஜி
மொபைல் போன் உள்ளிட்டவை தயாரிக்கும் அமெரிக்காவைச் சேர்ந்த, 'ஆப்பிள்' நிறுவனத்தின் நிறுவனரான மறைந்த ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி லாரன்ஸ் பாவெல் ஜாப்ஸ், ஹிந்து மதத்தின் மீது அதிக பற்று உள்ளவர். நீண்ட காலமாக யோகா பயிற்சி செய்து வரும் அவர், நிரஞ்சன் அகாரா தலைவர் ஸ்வாமி கைலாசனந்தாவின் சீடராக சேர்ந்தார். லாரன்ஸ் பாவெல் ஜாப்ஸ்க்கு, கமலா என்று பெயரிட்டு, தன் கோத்திரத்தை, கைலாசனந்தா வழங்கியுள்ளார்.மஹா கும்பமேளாவில் பங்கேற்க வந்துள்ள கமலா, திரிவேணி சங்கமத்தில் நேற்று புனித நீராடுவதாக இருந்தார். ஆனால், திடீர் உடல்நலக் குறைவால், அவர் நேற்று புனித நீராடவில்லை.''மிகப் பெரும் பணக்கார குடும்பத்தில் பிறந்தவர் கமலா. தற்போது எளிமையான வாழ்க்கைக்கு மாறியுள்ளார். அவர் இவ்வளவு அதிகமான மக்கள் கூட்டத்தில் இதுவரை பங்கேற்றதில்லை. அவருக்கு அலர்ஜி ஏற்பட்டுள்ளதால் புனித நீராடவில்லை. அதே நேரத்தில் தொடர்ந்து இங்கு தங்கியிருந்து மற்றொரு நாளில் புனித நீராடுவார்,'' என, ஸ்வாமி கைலாசனந்தா கூறியுள்ளார்.
பெயர் மாற்றம் ஏன்?
கும்பமேளா நிகழ்வுடன் தொடர்புடைய சிலவற்றின் பெயர்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. உதாரணத்துக்கு, புனித நீராடுவது, 'ஷாஹி ஸ்னான்' என்று அழைக்கப்பட்டது; இது, அமிர்த ஸ்னான் என்று மாற்றப்பட்டுள்ளது.அதுபோல, ஒரு அகாரா எனப்படும் மடத்தை பின்பற்றுவோர், கும்பமேளாவுக்கு வரும்போது, பேரணியாக வருவர். இது, 'பேஷ்வாய்' என்று அழைக்கப்பட்டது. அது, 'சாவ்னி பிரவேஷ்' என்று மாற்றப்பட்டுள்ளது.இது குறித்து, அகில பாரதிய அகாரா பரிஷத் தலைவர் மஹந்த் ரவீந்திர புரி கூறியதாவது:கும்பமேளா என்பது ஹிந்து மதத்துடன் தொடர்புடையது. இது தொடர்புடைய சிலவற்றுக்கு ஹிந்தியிலும், உருதுவிலும் பெயர் வைத்திருந்தனர். உருதுவில் உள்ள பெயர்கள், ஹிந்திக்கு மாற்றப்பட்டுள்ளன. நம் கடவுள்கள் தொடர்புடையவற்றை, சமஸ்கிருதத்தில் அல்லது சனாதனத்துடன் தொடர்புடைய மொழியிலேயே அழைக்க வேண்டும். ஹிந்து, முஸ்லிம் என்று வேறுபடுத்தி பார்ப்பது நோக்கமல்ல. அதே நேரத்தில் ஹிந்து மதத்துக்குள், உருது மொழி கலப்பதை தடுப்பதே நோக்கம்.இதையடுத்து, முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு, இந்தப் பெயர்களை மாற்றியுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.