மெஹபூபாவுக்கு பாக்., மீது குருட்டு காதல்: ஒமர் விமர்சனம்
புதுடில்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தான் உடன் கடந்த 1960ல் மேற்கொண்ட சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை மத்திய அரசு நிறுத்தி வைத்தது. ஒப்பந்தப்படி, சிந்து, ஜீலம் செனாப் ஆகிய நதிகளில் பாகிஸ்தானுக்கும்; ரவி, பியாஸ், சட்லெஜ் ஆகிய நதிகளின் உரிமை இந்தியாவுக்கும் வழங்கப்பட்டது.ஆனால், இந்த நதிகளில் தடுப்பணை கட்டி பாசன வசதிகளை மேற்கொள்வது, நீர்மின் உற்பத்தி போன்ற புதிய திட்டங்களை செயல்படுத்துவதற்கு பாக்., எதிர்ப்பு தெரிவிக்கிறது. அதில் ஒரு திட்டம் தான், துல்புல் நீர்வழி தடுப்பணை திட்டம். இதன்படி, காஷ்மீரின் வடக்கு பகுதியில் உள்ள உலுர் ஏரிக்கு ஜீலம் நதிநீரை பெறும் வகையில் சிறிய தடுப்பணை அமைப்பதோடு, நீர்மின் உற்பத்தி செய்யவும் முடிவு செய்யப்பட்டது.ஜம்மு - காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தின் உலுர் ஏரியில், 1987ல் இதற்கான பணிகள் துவங்கின. ஆனால், சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை கூறி பாக்., எதிர்த்ததால், 2007ல் திட்டம் நிறுத்தப்பட்டது. தற்போது, இந்த திட்டத்தை மீண்டும் துவங்குவோம் என, ஜம்மு- -காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா அறிவித்தார். இது, ஜீலம் நதியை வழிப்படுத்தி, நீர்ப்பாசன வசதிகளை வழங்கும். குறிப்பாக, குளிர் காலத்தில், கீழ்நிலை மின் உற்பத்தி நிலையங்களில், மின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும் என தெரிவித்தார்.இதற்கு, பாக்.,கிடம் இருந்து கூட எதிர்ப்பு வராத நிலையில், மக்கள் ஜனநாயக கட்சி தலைவரும் முன்னாள் முதல்வருமான மெஹபூபா முப்தி கடும் கண்டனம் தெரிவித்தார். 'போர் விளிம்பில் இருந்து பின்வாங்கியுள்ள நேரத்தில், இதுபோன்ற அறிவிப்புகள், ஆபத்தானவை; ஆத்திரமூட்டுபவை. தண்ணீர் போன்ற அத்தியாவசிய பொருளை ஆயுதமாக்குவது மனிதாபிமானமற்றது' என சமூக வலைதளத்தில் அவர் பதிவிட்டார்.இதற்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஒமர் அப்துல்லா, 'சிந்து நதிநீர் ஒப்பந்தம் என்பது, காஷ்மீர் மக்கள் மீதான வரலாற்று துரோகங்களில் ஓன்று. 'ஆனால், மலிவான விளம்பர வெளிச்சம் பெறவும், எல்லையை தாண்டி இருக்கும் சிலரை திருப்திப்படுத்தவும், அவர்கள் மீதான குருட்டுத்தனமான காதல் காரணமாகவும், இந்த உண்மையை ஒப்புக்கொள்ள மறுக்கிறீர்கள். சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை எப்போதும் எதிர்க்கிறேன்; தொடர்ந்து எதிர்ப்பேன்' என குறிப்பிட்டார்.