மேலும் செய்திகள்
யானைத்தந்தம் விற்க முயற்சி; ஜமீன் வாரிசு தப்பி ஓட்டம்
2 hour(s) ago
புதுடில்லி;''மதவாதமும், பயங்கரவாதமும் நாட்டின் ஒற்றுமைக்கு, மிகப்பெரிய சவால்களாக உள்ளன. தவறாக வழிநடத்தப்படும் நபர்களால், நாட்டிற்கு கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது. அதனால், பயங்கரவாதம் மற்றும் மதவாதத்திற்கு எதிராக, நாட்டு மக்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும்,'' என, பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.டில்லியில் தேசிய மத நல்லிணக்க விருதுகள் வழங்கும் விழாவில், அவர் பேசியதாவது:நம் சமூகத்தில், தவறாக வழிநடத்தப்படும் சிலர், பயங்கரவாதத்தையும், மதவாதத்தையும் ஊக்கப்படுத்துகின்றனர். இதனால், நமது ஒட்டுமொத்த சமூகத்திற்கும், நாட்டிற்கும் கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது. இந்த சவால்களை எதிர்கொள்ள, நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அனைத்து நேரங்களிலும், நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்.நமது நாடு பரஸ்பர சகிப்புத்தன்மை மற்றும் மத சகோதரத்துவத்தை, பாரம்பரியமாகப் பின்பற்றி வரும் நாடு. நமது ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் மதிப்பு அளிப்பதே, நமது கலாசாரத்தின் முக்கிய அங்கமாகும்.பல்வேறு மதத்தினரிடையே, சமூக உறவுகளை மேம்படுத்துவதில், நாம் அக்கறை காட்ட வேண்டும். இந்த நடவடிக்கைகளில், நமது மக்கள் தீவிரமாகப் பங்கேற்றால் மட்டுமே, நாட்டில் அமைதி மற்றும் மத நல்லிணக்கம் உருவாகும். சகிப்புத் தன்மை, சகோதரத்துவம் என்ற செய்தியை நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பரவச் செய்ய வேண்டும்.இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.கறுப்புப் பணம் : பார்லிமென்டில் அறிக்கை:வெளிநாடுகளில் குவிக்கப்பட்டுள்ள, இந்தியர்களின் கறுப்புப் பணத்தை மீட்க, எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக, பிரதமர் மன்மோகன் சிங் அடுத்த வாரம், பார்லிமென்டில் அறிக்கை தாக்கல் செய்கிறார்.பார்லிமென்டின் மழைக்கால கூட்டத் தொடர், வரும் திங்களன்று துவங்குகிறது. இந்தக் கூட்டத் தொடரின் போது, கறுப்புப் பண பிரச்னையை பெரிய அளவில் எழுப்பி, பார்லிமென்டில் அமளியில் ஈடுபட, எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. அதனால், இந்த விவகாரம் தொடர்பாக, பிரதமர் மன்மோகன் சிங் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளார். இத்தகவலை மத்திய அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
2 hour(s) ago