சென்னப்பட்டணாவில் ம.ஜ.த., போட்டி; எடியூரப்பா முடிவால் யோகேஸ்வர் அதிர்ச்சி
பெங்களூரு : ''இடைத்தேர்தல் நடக்கவுள்ள சென்னப்பட்டணா தொகுதியில், வேட்பாளர் யார் என்பதை ம.ஜ.த., அறிவிக்கட்டும்,'' என பா.ஜ., முன்னாள் முதல்வர் எடியூரப்பா தெரிவித்து உள்ளதால், யோகேஸ்வர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.பெங்களூரில் நேற்று எடியூரப்பா அளித்த பேட்டி:ஏற்கனவே ஷிகாவி, சண்டூர் தொகுதிகளுக்கு, பா.ஜ., வேட்பாளர்களை அறிவித்துள்ளது. சென்னப்பட்டணா ம.ஜ.த.,வின் தொகுதி. எனவே அக்கட்சியினர் யாருக்கு வேண்டுமானாலும் சீட் அறிவிக்கட்டும்.பா.ஜ., மேலிட தலைவர் அமித்ஷாவும், சென்னப்பட்டணா ம.ஜ.த.,வின் தொகுதி. அக்கட்சியினரே வேட்பாளரை அறிவிக்கட்டும் என, கூறியுள்ளார். எனவே யாரை வேட்பாளராக்க விரும்புகின்றனரோ, அவர்களுக்கு சீட் தரட்டும்.சென்னப்பட்டணா, சண்டூர், ஷிகாவி என மூன்று தொகுதிகளிலும் பா.ஜ., - ம.ஜ.த., ஒற்றுமையாக தேர்தலை எதிர்கொள்வோம். மூன்று தொகுதிகளையும் கைப்பற்றுவது, எங்களின் குறிக்கோளாகும்.யோகேஸ்வர் குறித்து, எங்கள் கட்சி மேலிட தலைவர்கள் முடிவு செய்வர். மேலிடம் என்ன சொல்கிறதோ, அதுவே நடக்கும். ம.ஜ.த., சின்னத்தில் பா.ஜ.,வினரை களமிறக்குவதற்கு, நாங்கள் ஆலோசிக்கவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.எடியூரப்பா அறவிப்பால், சென்னப்பட்டணாவில் பா.ஜ.,வில் போட்டியிட ஆசைப்பட்ட யோகேஸ்வர் அதிர்ச்சி அடைந்து உள்ளார்.