| ADDED : ஆக 24, 2025 11:51 PM
பாலக்காடு: 'கருக்கலைப்பு செய்யாவிட்டால் உன்னை சில நிமிடங்களில் என்னால் கொல்ல முடியும்' என, இளம்பெண்ணுக்கு பாலக்காடு காங்கிரஸ் எம்.எல்.ஏ., ராகுல் மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் பாலக்காடு சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருப்பவர் ராகுல் மம்கூட்டத்தில், 38. காங்கிரசைச் சேர்ந்த இவர், தன்னை ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு அழைத்ததாக மலையாள நடிகை ரினி ஜார்ஜ் குற்றம் சாட்டியிருந்தார். மேலும், சில பெண்களும் ராகுல் தங்களிடம் தவறாக நடந்து கொண்டதாக புகார் கூறியிருந்தனர். இதையடுத்து, இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். எம்.எல்.ஏ., பதவியையும் ராஜினாமா செய்ய எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், நான்கு நிமிடம் ஓடக்கூடிய 'ஆடியோ' ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், கர்ப்பிணியாக உள்ள இளம்பெண் ஒருவருடன் போனில் ராகுல் பேசுகிறார். அந்த பெண்ணை கருக்கலைப்பு செய்யுமாறு ராகுல் மிரட்டுகிறார். இந்த கர்ப்பத்தால் என் எதிர்காலமே அழிந்துவிடும். எனவே, கருக்கலைப்பு செய் என தொடர்ந்து ராகுல் அழுத்தம் கொடுக்கிறார். அவ்வாறு செய்யாவிட்டால், உன்னை கொலை செய்ய எனக்கு சில நிமிடங்கள் போதும் எனவும் மிரட்டுகிறார். இந்த ஆடியோ வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.