உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எட்டு ஆண்டுகளாக அவதிபட்டவருக்கு நவீன மூட்டு மாற்று அறுவை சிகிச்சை

எட்டு ஆண்டுகளாக அவதிபட்டவருக்கு நவீன மூட்டு மாற்று அறுவை சிகிச்சை

புதுடில்லி:எட்டு ஆண்டுகளாக கடுமையான முழங்கால் வலியால் அவதிப்பட்ட ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 54 வயது நபருக்கு, டில்லியில் ரோபோ உதவியுடன் சிமென்ட் இல்லாத மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. அன்றே அவர் நடக்கவும் துவங்கினார்.ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் நகரைச் சேர்ந்தவர் பிரிஜ் கிஷோர், 54. எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக முழங்கால் வலி மற்றும் மூட்டு சேதத்தால் அவதிப்பட்டார். ஜார்க்கண்ட் மாநிலத்திலேயே பல டாக்டர்களிடம் சிகிச்சை பெற்றார். ஹோமியோபதி மருந்தும் சாப்பிட்டுப் பார்த்தார். பிரச்னை தீராத நிலையில், மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் சில டாக்டர்களிடம் சிகிச்சை பெற்றார். அங்கும் தீர்வு கிடைக்காமல் தலைநகர் டில்லி வந்தார். புதுடில்லி சாகேத்தில் உள்ள மேக்ஸ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் கடந்த மாதம், 23ம் தேதி அவருக்கு, ரோபோ உதவியுடன் சிமென்ட் பயன்படுத்தாமல் மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. சிகிச்சை முடிந்த அடுத்த சில மணி நேரத்திலேயே, கிஷோர் நடக்கத் துவங்கினார்.இதுகுறித்து, டாக்டர் சுஜோய் பட்டாச்சார்யா கூறியதாவது:பிரிஜ் கிஷோருக்கு இரண்டு முழங்கால்களிலும் கடுமையான கீல்வாதம் இருந்தது. மேலும், வராகஸ் மற்றும் நெகிழ்வு ஏற்பட்டு இருந்தது. அதனால், கிஷோர் நடக்க மிகவும் சிரமப்பட்டது மட்டுமின்றி கடும் வலியையும் அனுபவித்து வந்தார்.அதிநவீன ரோபோடிக் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சிமென்ட் இல்லாத மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சை செய்தோம். இந்த இம்பிளான்ட்டின் வடிவமைப்பு, அதைச் சுற்றி இயற்கையான எலும்பு வளர்ச்சியைத் துாண்டும். சிகிச்சைக்கு முன் கிஷோரால் கொஞ்சம் கூட நடக்க முடியவில்லை. ஆனால், சிகிச்சை செய்த அடுத்த சில மணி நேரத்திலேயே எந்த உதவியும் இல்லாமல் நடந்தார்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி