கணவர் குடி பழக்கத்தால் விபரீதம் குழந்தைகளுடன் தாய் தற்கொலை
தங்கவயல்: தன் இரண்டு குழந்தைகளை கொலை செய்து விட்டு, தாய் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.கோலார் தங்கவயலின் கம்மசந்திராவில் வசிப்பவர் மணி, 42. இவரது மனைவி திப்பம்மா திரிவேணி, 38. தம்பதிக்கு 7 வயதில் மகளும், 4 வயதில் ஒரு மகனும் இருந்தனர். மணி சரியாக வேலைக்குச் செல்வதில்லை. குடி பழக்கத்துக்கு அடிமையான இவர், தினமும் போதையில் வீட்டுக்கு வந்து, மனைவியுடன் தகராறு செய்வார்.திப்பம்மா திரிவேணி கூலி வேலை செய்து, குழந்தைகளை காப்பாற்றி, குடும்பத்தையும் நிர்வகித்து வந்தார். கிடைக்கும் வருவாய் குடும்பம் நடத்த போதுமானதாக இல்லை. பெரியவர்கள் பல முறை புத்திமதி கூறியும், மணி திருந்தவில்லை. திப்பம்மா திரிவேணி வருத்தம் அடைந்தார்.பிள்ளைகள் படிக்கும் பள்ளியில் நேற்று முன்தினம் ஆண்டு விழா நடந்தது. அவர்களை பள்ளிக்கு அழைத்துச் சென்றிருந்தார். நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பினார். இரவில் தாய், பிள்ளைகள் ஒரு அறையிலும், மணி வேறு ஒரு அறையிலும் உறங்கினர்.நள்ளிரவு மகனும், மகளும் உறங்கியதும், அவர்களின் கழுத்தை நெரித்துக் கொலை செய்த திப்பம்மா திரிவேணி, தானும் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று காலை, மணி அறைக்குள் சென்று பார்த்தபோது, மனைவியும், குழந்தைகளும் இறந்து கிடந்தது தெரிந்தது.அக்கம், பக்கத்தினரிடம் நடந்ததை கூறி, போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார். அங்கு வந்த பெமல் நகர் போலீசார், உடல்களை மீட்டனர். விசாரணை நடக்கிறது.