உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மக்காச்சோள உற்பத்தியை அதிகரிக்க உதய்ப்பூர் வேளாண் பல்கலை போட்ட ‛சூப்பர் திட்டம்

மக்காச்சோள உற்பத்தியை அதிகரிக்க உதய்ப்பூர் வேளாண் பல்கலை போட்ட ‛சூப்பர் திட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மக்காச்சோள உற்பத்தியை அதிகரிப்பதற்காக தனி்யார் வீரிய விதை உற்பத்தி நிறுவனங்களுடன் உதய்ப்பூர் வேளாண்மை பல்கலைக்கழகம் ஒப்பந்தம் செய்து மற்ற மாநிலங்களுக்கு முன் உதாரணத்தை ஏற்படுத்தி உள்ளது.உதய்ப்பூரைச் சேர்ந்த மஹாராணா பிரதாப் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் 'பிரதாப் சங்கரா மக்கா-6' என்ற வீரிய வகை (ஹைபிரிட்) மக்காச்சோளத்தின் உற்பத்திக்காக ஆறு விதை நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. குஜராத்தை சேர்ந்த இந்தோ யு.எஸ் பயோடெக், ஆந்திராவை சேர்ந்த சக்ரா சீட்ஸ், சம்பூர்ணா சீட்ஸ், ஸ்ரீ லக்ஷமி வெங்கடேஸ்வரா சீட்ஸ், முரளிதர் சீட்ஸ் கார்பரேசன், தெலுங்கானாவை சேர்ந்த மஹாங்கலேஷ்வரா அக்ரிடெக் ஆகிய ஆறு நிறுவனங்களுடன் இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.பல்கலைக்கழக வரலாற்றில் ஒரே நேரத்தில் இத்தனை நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது இதுவே முதல் முறை.பல்கலை துணை வேந்தர் டாக்டர்.அஜித் குமார் கூறுகையில், பிரதாப் சங்கரா மக்கா-6 வகை விதைகள் மூலம் ஒரு ஹெக்டேருக்கு 62 முதல் 65 குவிண்டால் வரை மக்காச்சோளம் உற்பத்தி செய்ய முடியும் என்றும், வளம்மிக்க இடங்களில் இன்னும் அதிக மகசூல் பெற முடியும் என்றும், ஸ்டார்ச் உற்பத்தி மற்றும் எத்தனால் உற்பத்தி ஆகியவற்றில் மக்காச்சோளத்தின் பயன்பாடு அதிகரித்து வருகிறது எனவும் குறிப்பிட்டார்.இந்த வகை மக்காச்சோளத்தை தானியமாகவும், தீவனமாகவும் பயன்படுத்த முடியும். ஒரு குவிண்டால் விதைகளை ரூ.40 ஆயிரத்திற்கு விநியோகிக்கும் இப்பல்கலை, அதற்கு ஈடாக நிறுவனங்களிடம் இருந்து ரூ.2.5 லட்சமும், 4 சதவீதம் காப்புரிமை தொகையும் பெறுகிறது.பெட்ரோல் மற்றும் டீசலுடன் எத்தனால் கலக்கப்பட்டு, பசுமை எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. எத்தனால் தான் இனிவரும் காலத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் எரிபொருளாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.விதைகள் ஆராய்ச்சி இயக்குனர் அரவிந்த் வர்மா கூறுகையில், ''பிரதாப் சங்கரா மக்கா-6 வகை விதைகள் நாடு முழுவதும் 22 மையங்களில் சோதனை செய்யப்பட்டபோது, சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தியது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், குஜராத் ஆகிய மாநிலங்களில் இவ்வகை மக்காச்சோள விதைகளை பயிரிட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.உதய்ப்பூர் வேளாண் கல்லூரி டீனாக இருக்கும் பேராசிரியர் ஆர்.பி.துபே கூறுகையில், ''இந்த விதைகள் நீர்ப்பாசனம் இல்லாத பகுதிகளுக்கும் பொருத்தமானது. தண்டு அழுகல், நூற்புழுக்கள் மற்றும் தண்டு துளைப்பான் போன்ற நோய்களால் பாதிக்கப்படாது.இந்தியாவில் எத்தனால் உற்பத்திக்கு மக்காச்சோளம் இன்றியமையாதது,'' என்றார்.எத்தனால் போன்ற உயிரி எரிபொருள் உற்பத்தியை அதிகரிப்பதற்காக, பயிர் உற்பத்தியை பெருக்க மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகமும் இதுபோல மற்ற நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து மக்காச்சோள உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை