முல்லைபெரியாறு அணை திறப்பு
மூணாறு: முல்லைபெரியாறு அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரால், இடுக்கி அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. கேரளாவில் தென்மேற்கு பருவ மழை அக்.16ல் முடிவுக்கு வந்த பிறகும் மழை தொடர்கிறது. இடுக்கி, எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களுக்கு நேற்று கன மழைக்கான 'ஆரஞ்ச் அலர்ட்', திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான 'எல்லோ அலர்ட்' எச்சரிக்கைகள் விடப்பட்டுள்ளன. இடுக்கி, பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று (அக்.21) 'எல்லோ அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. பாலக்காடு மாவட்டத்தில் மீங்கரா, வாளையாறு, மலம்புழா, போத்துண்டி, சுள்ளியாறு, மங்கலம் ஆகிய அணைகள், இடுக்கி மாவட்டத்தில் ஆனயிறங்கல், குண்டளை, கல்லார்குட்டி, இரட்டையாறு, லோயர் பெரியாறு, கல்லார் ஆகிய அணைகள் ஆகியவற்றில் நீர்மட்டம் முழு கொள்ளளவை நெருங்குவதால் 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டது. துண்டிப்பு: நெடுங்கண்டம் அருகே கல்லாறு, கூட்டாறு ஆகிய ஆறுகளில் அதிக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. கூட்டாறு ஆற்றின் குறுக்கே கருணாபுரம், பாம்பாடும்பாறை ஆகிய ஊராட்சிகளை இணைக்கும் பழமையான பாலம் சேதமடைந்தது. முல்லைப்பெரியாறு அணையில் 13 ஷட்டர்கள் வழியாக திறந்து விடப்படும் தண்ணீர் பெரியாற்றில் கலந்து இடுக்கி அணையை வந்தடையும். அதனால் இடுக்கி அணையில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று மதியம் 1:00 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 434 அடியாக இருந்தது. இதே கால அளவில் கடந்தாண்டு நீர்மட்டம் 372.78 அடியாக இருந்தது. இது கடந்தாண்டை விட 61.22 அடி அதிகமாகும். அணையின் மொத்த உயரம் 554 அடி. கேரளாவில் பரவும் வதந்தி: கடந்த 3 நாட்களாக அணையில் இருந்து கேரள பகுதி வழியாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இவ்வாறு திறக்கப்பட்ட தண்ணீரால் இடுக்கி மாவட்டத்தில் உள்ள வள்ளக்கடவு, வண்டிப்பெரியாறு, ஐயப்பன் கோயில், சப்பாத்து உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து விட்டதாக கேரளாவில் செய்திகள் பரவுகின்றன. நீர்வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை கேரள அரசு கண்டுகொள்ளாததே இதற்கு காரணம் என தமிழக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.