3 குட்டிகளை ஈன்றெடுத்த நமீபியா சிவிங்கி புலி
போபால் மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் பராமரிக்கப்படும் நமீபியா சிவிங்கி புலி, மூன்று குட்டிகளை ஈன்றெடுத்துள்ளது. நம் நாட்டில் வாழ்ந்து வந்த சிவிங்கி புலிகள் இனம் அழிந்ததை அடுத்து, அவற்றை மீண்டும் கொண்டு வரும் முயற்சியை 2022ல் மத்திய அரசு முன்னெடுத்தது. தென் ஆப்ரிக்க நாடான நமீபியா மற்றும் தென் ஆப்ரிக்காவில் இருந்து, 20 சிவிங்கி புலிகள் மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டன. இவை முறையாக பராமரிக்கப்பட்ட நிலையில், கடந்த மார்ச்சில் நமீபியாவில் இருந்து எடுத்து வரப்பட்ட ஜுவாலா என்ற சிவிங்கி புலி நான்கு குட்டிகளை ஈன்றது. இதில் மூன்று குட்டிகள் பரிதாபமாக உயிரிழந்ததை அடுத்து, மீதமுள்ள குட்டி பத்திரமாக பராமரிக்கப்பட்டு வருகிறது. அதேபோல், ஆறு பெரிய சிவிங்கி புலிகளும் அடுத்தடுத்து இறந்தன. இந்நிலையில், நமீபியாவில் எடுத்து வரப்பட்ட ஆஷா என்ற சிவிங்கி புலி சமீபத்தில் மூன்று குட்டிகளை ஈன்றெடுத்துள்ளது. இதை தன் சமூக வலைதள பக்கத்தில் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் உறுதிப்படுத்தியுள்ளார்.