நவக்கிரக பிரதிஷ்டை: சபரிமலை நடை திறப்பு
சபரிமலை:நவக்கிரக பிரதிஷ்டைக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. நாளை காலை 11:30 மணிக்கு நவக்கிரக பிரதிஷ்டை நடைபெறுகிறது.நேற்று மாலை தந்திரி கண்டரரு ராஜீவரரு தலைமையில் மேல் சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றினார். தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். மாலை 6:30 க்கு தந்திரி சுத்திகிரியை பூஜைகள் நடத்தினார். இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.இன்று அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்த பின் வழக்கமான நெய்யபிஷேகம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெறும். நவக்கிரக பிரதிஷ்டைக்கான முன்னோடி சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.நாளை காலை 11:00 முதல் மதியம் 12:00 மணிக்கு இடையிலான கன்னி ராசி முகூர்த்தத்தில் நவகிரக பிரதிஷ்டை நடைபெறும். காலை கணபதி ஹோமம், உஷ பூஜை, மரப்பாணி போன்றவற்றுக்கு பின் பிரதிஷ்டை நடைபெறும். தற்போதுள்ள நவகிரக கோயிலை மேலும் வசதியான இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று தேவப்பிரசன்னத்தில் கூறப்பட்டதை தொடர்ந்து மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.பிரதிஷ்டை பூஜைகளுக்கு பின் நாளை இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.