உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நவீன் பட்நாயக்கின் விசுவாசி பாண்டியன் அரசியலுக்கு முழுக்கு!: தேர்தல் தோல்விக்கு மக்களிடம் மன்னிப்பு

நவீன் பட்நாயக்கின் விசுவாசி பாண்டியன் அரசியலுக்கு முழுக்கு!: தேர்தல் தோல்விக்கு மக்களிடம் மன்னிப்பு

ஒடிசா சட்டசபை தேர்தலில் பிஜு ஜனதா தளம் படுதோல்வி அடைந்ததை அடுத்து, தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி பாண்டியன் அறிவித்துள்ளார். ''ஒடிசாவை என் இதயத்திலும், குரு நவீன் பட்நாயக்கை என் சுவாசத்திலும் என்றும் சுமந்திருப்பேன்,'' என உருக்கமாக பேசி, 'வீடியோ' வெளியிட்டுள்ளார்.புவனேஸ்வர்: ஒடிசா சட்டசபை மற்றும் லோக்சபாவுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடந்து முடிந்தது. மொத்தமுள்ள 147 சட்டசபை தொகுதிகளில் பா.ஜ., 78 இடங்களில் வென்று ஆட்சியை கைப்பற்றியது. கடந்த 24 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பிஜு ஜனதா தளம், 51 இடங்களில் மட்டுமே வென்றது.லோக்சபா தேர்தலில், பா.ஜ., 20 இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும் வென்றன.

விருப்ப ஓய்வு

பிஜு ஜனதா தள தலைவர் நவீன் பட்நாயக், தொடர்ந்து ஆறாவது முறையாக முதல்வராக பொறுப்பேற்கும் வாய்ப்பை இழந்தார். கடந்த 12 ஆண்டுகளாக முதல்வரின் தனிச் செயலராக இருந்த தமிழகத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி பாண்டியன், விருப்ப ஓய்வு பெற்று முழு நேர அரசியலில் இறங்கினார். நவீன் பட்நாயக்கிற்கு உதவியாக பிஜு ஜனதா தளத்தில் இணைந்தார். பாண்டியனின் பிடியில் பட்நாயக் இருப்பதாக பா.ஜ., பிரசாரம் செய்தது. 'ஒடிசா மக்களை தமிழகத்தை சேர்ந்தவர் ஆள்வதா' என்ற கேள்வி தேர்தல் பிரசாரத்தில் விவாதப் பொருளானது. 'நவீன் பட்நாயக் மீண்டும் முதல்வர் ஆகாவிட்டால் அரசியலில் இருந்தே விலகி விடுகிறேன்' என, பிரசாரத்தின் போது பாண்டியன் சவால் விட்டார். இறுதியில் பிஜு ஜனதா தளம் படுதோல்வியை சந்தித்துள்ளது.இந்த தோல்விக்கு பாண்டியன் தான் பொறுப்பு என, கட்சிக்குள் முணுமுணுப்புகள் எழ துவங்கியுள்ளன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நேற்று முன் தினம் பேசிய நவீன் பட்நாயக், 'பாண்டியன் குறித்து தற்போது எழும் விமர்சனங்கள் துரதிருஷ்ட வசமானவை. அவர் தேர்தல் வெற்றிக்காக மிகவும் கடினமாக உழைத்தார்' என, தெரிவித்தார்.இந்நிலையில், பாண்டியன் நேற்று வெளியிட்டு உள்ள வீடியோ செய்தியில் கூறியிருப்பதாவது:நான் மிக சிறிய கிராமத்தை சேர்ந்த சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவன். ஐ.ஏ.எஸ்., பணியில் சேர்ந்து மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்பதே என் சிறு வயது கனவு. கடவுள் ஜெகன்நாதரின் ஆசியால் அது சாத்தியமானது.

மறக்க முடியாத அனுபவம்

என் மனைவி ஒடிசாவின் கேந்திரபாராவை சேர்ந்தவர். அதன் காரணமாக தான், இந்த மாநிலத்திற்கு வந்தேன். இந்த மண்ணில் காலடி வைத்த நாள் முதல் ஒடிசா மக்கள் என்னை அன்புடன் அரவணைத்து வருகின்றனர். மக்களுக்காக முடிந்த வரை சிறப்பாக பணியாற்றி உள்ளேன். கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் ஒடிசா முதல்வரின் அலுவலகத்தில் பணியை துவங்கினேன். நவீன் பட்நாயக் கீழ் பணியாற்றியது மிகப் பெரிய பெருமை. என் வாழ்நாளுக்கும் மறக்க முடியாத அனுபவம். ஒடிசாவின் வளர்ச்சிக்கான தன் தொலைநோக்கு பார்வையை நான் செயல்படுத்த வேண்டும் என்று பட்நாயக் எதிர்பார்த்தார். அதை நான் மிகுந்த ஈடுபாட்டுடன் செய்து முடித்தேன். நவீன் பட்நாயக்கிற்கு உதவுவதற்காகவே, ஐ.ஏ.எஸ்., பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று கட்சியில் இணைந்தேன். மற்றபடி பதவியில் எனக்கு விருப்பம் இல்லை. எனவே தான் கட்சியில் எந்த பொறுப்பையும் நான் ஏற்கவில்லை. தேர்தலிலும் போட்டியிடவில்லை. கடந்த 24 ஆண்டு களுக்கு முன் நான் ஐ.ஏ.எஸ்., பணியில் சேர்ந்தபோது என்னிடம் என்ன சொத்துகள் இருந்ததோ, அவை மட்டுமே தற்போதும் உள்ளன. அவை என் குடும்ப சொத்துகள்.தேர்தல் நேரத்தில் என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை முறையாக எதிர்கொள்ளாமல் இருந்தது என் தவறு தான்.இந்த தேர்தலில் பிஜு ஜனதா தளம் தோல்வி அடைந்ததற்காக கட்சி தொண்டர்கள், ஒடிசா மக்களிடம் மன்னிப்பு கோருகிறன். ஒடிசாவை என் இதயத்திலும், குரு நவீன் பட்நாயக்கை என் சுவாசத்திலும் என்றும் சுமந்திருப்பேன். இந்த தோல்விக்கு பொறுப்பேற்று தீவிர அரசியலில் இருந்து விலகுகிறேன்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை