புதுடில்லி: நம் கடற்படைக்கு, 26 ரபேல் கடற்படை போர் விமானங்கள் வாங்குவதற்காக, பிரான்ஸ் அரசுடன், 63,000 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.ஐரோப்பிய நாடான பிரான்சைச் சேர்ந்த, 'டசால்ட் ஏவியேஷன்' நிறுவனத்திடம் இருந்து, நம் விமானப் படைக்காக, 36 ரபேல் போர் விமானங்களை மத்திய அரசு ஏற்கனவே வாங்கி உள்ளது.இந்நிலையில், நம் கடற்படைக்காக, பிரான்சிடம் இருந்து, 63,000 கோடி ரூபாய் மதிப்பில், 26 ரபேல் கடற்படை போர் விமானங்களை வாங்க மத்திய அரசு சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.கையெழுத்துஇதற்கான ஒப்பந்தம் டில்லியில் நேற்று கையெழுத்தானது. இரு நாடுகளுக்கான இந்த ஒப்பந்தத்தில், நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரான்ஸ் ராணுவ அமைச்சர் செபாஸ்டின் லெகோர்னு கையெழுத்திட்டனர்.நம் அதிகாரிகளுக்கு தேவையான பயிற்சி, ஆயுதங்கள் உள்ளிட்டவை இதில் அடங்கும். மேலும், ஏற்கனவே, விமானப் படைக்காக வாங்கப்பட்டுள்ள ரபேல் போர் விமானங்களுக்கு தேவையான கூடுதல் இயந்திரங்களும் இந்த ஒப்பந்தத்தில் அடங்கும்.இதைத் தவிர, தற்சார்பு இந்தியா திட்டத்தின்கீழ், இந்திய ஆயுதங்களை இந்த போர் விமானங்களில் பயன்படுத்துவதற்கு தேவையான தொழில்நுட்பங்கள் பகிர்ந்து கொள்ளப்பட உள்ளன.இந்த போர் விமானங்களின் பராமரிப்பு போன்றவற்றுக்கான ஆலையை இந்தியாவில் அமைக்கவும், ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.இதன்படி, தேவையான உதிரி பாகங்கள் உள்ளிட்டவை, இந்தியாவிலேயே தயாரிக்கப்படும். இதன் வாயிலாக பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.வரும் 2030க்குள், அனைத்து விமானங்களும் வழங்கப்படும். இவற்றில், 22 ஒற்றை இருக்கை மற்றும் நான்கு இரட்டை இருக்கை வகையாக இருக்கும்.முக்கிய அம்சங்கள்இதற்கிடையே, டி.ஆர்.டி.ஓ., எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு வரும், உள்நாட்டு ஐந்தாவது தலைமுறை போர் விமானங்களை இணைக்கவும் கடற்படை திட்டமிட்டுஉள்ளது. ரபேல் விமானங்கள், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கிக் கப்பலான ஐ.என்.எஸ்., விக்ராந்த், ஐ.என்.எஸ்., விக்ரமாதித்யா போன்ற போர்க்கப்பல்களில் பயன்படுத்தப்படும். மேலும், சூழ்நிலைக்கேற்ப விமானப் படையிலும் பயன்படுத்தப்படும். ரபேல் கடற்படை போர் விமானம் வலுவூட்டப்பட்ட தரையிறங்கும் கியர்கள், மடிப்பு இறக்கைகள் போன்ற பல அம்சங்களை கொண்டுள்ளது. எந்த சூழ்நிலையையும் சமாளிக்கக் கூடிய வகையில் இந்த விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வகை போர் விமானங்களில் உலகளவில் மிகவும் திறன் வாய்ந்ததாக, ரபேல் கருதப்படுகிறது. தற்போதைக்கு, பிரான்ஸ் கடற்படையிடம் மட்டுமே, ரபேல் கடற்படை போர் விமானங்கள் உள்ளன.
பாக்.,கை விட 9 மடங்கு அதிகம்!
ஐரோப்பிய நாடான ஸ்வீடனைச் சேர்ந்த, 'சிப்ரி' எனப்படும் ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி மையம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:சர்வதேச அளவில் ராணுவத்துக்காக அதிகம் செலவிடும் நாடுகளில், ஐந்தாவது இடத்தில் இந்தியா உள்ளது. கடந்தாண்டு மட்டும், முந்தைய ஆண்டைவிட 1.6 சதவீதம் அதிகம் செலவிட்டு உள்ளது.கடந்த ஆண்டில் மட்டும், 7.32 லட்சம் கோடி ரூபாய் இந்தியா செலவிட்டுள்ளது. அதே நேரத்தில் பாகிஸ்தான், 86,007 கோடி ரூபாய் மட்டுமே செலவிட்டுள்ளது. அதனுடன் ஒப்பிடுகையில், இந்தியா, 9 மடங்கு அதிகம் செலவிட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.