புதுடில்லி : '' மஹாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் மூலம் எதிர்மறை அரசியலையும், வாரிசு அரசியலையும் மக்கள் தோற்கடித்து உள்ளனர்,'' என பிரதமர் மோடி கூறினார்.மஹாராஷ்டிரா மாநிலத்தில் பா.ஜ., கூட்டணி ஆட்சியை தக்க வைத்து கொண்டது. பல மாநிலங்களில் நடந்த இடைத்தேர்தலில் ஏராளமான இடங்களில் அக்கட்சி வெற்றி பெற்றுள்ளது.இதனையடுத்து டில்லியில் உள்ள பா.ஜ., தலைமை அலுவலகத்தில் நடந்த கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: இன்று எதிர்மறை அரசியல் தோற்கடிக்கப்பட்டு உள்ளது. வாரிசு அரசியல்வாதிகள் தோல்வி அடைந்துள்ளனர். வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான தீர்மானத்தை மஹாராஷ்டிரா உறுதிப்படுத்தி உள்ளது. பா.ஜ., மற்றும் தே.ஜ., தொண்டர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.உ.பி., உத்தரகண்ட், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் பா.ஜ.,விற்கு வலிமையான ஆதரவை கொடுத்து உள்ளன. அசாம் மக்கள் மீண்டும் ஒரு முறை பா.ஜ, மீதான நம்பிக்கையை வெளிப்படுத்தி உள்ளனர். ம.பி.,யிலும் வெற்றி கிடைத்துள்ளது. பீஹாரில் தே.ஜ,வுக்கான ஆதரவு அதிகரித்து உள்ளது. இது நாடு வளர்ச்சியை மட்டும் விரும்புவதை காட்டுகிறது.மஹாராஷ்டிராவில் பா.ஜ., தனிப்பெரும் கட்சியாக உருவெடுப்பது இது மூன்றாவது முறை. இது வரலாறு. பா.ஜ.வின் நிர்வாக முறைக்கு கிடைத்த சான்றிதழ் ஆகும். மஹாராஷ்டிராவில் பா.ஜ.,விற்கு கிடைத்த வெற்றி வளர்ச்சி, நல்லாட்சி மற்றும் சமூக நீதிக்கு கிடைத்த வெற்றி. அம்மாநிலத்தில் அனைத்து சாதனைகளையும் பா.ஜ., முறியடித்து உள்ளது. சமரச அரசியலுக்காக காங்கிரஸ் சட்டத்தை கொண்டது. சுப்ரீம் கோர்ட் உத்தரவையும் அக்கட்சி மதிக்கவில்லை. வக்பு வாரியம் இதற்கு சிறந்த உதாரணம். 2014 ல் ஆட்சியில் இருந்து வெளியேறுவதற்கு முன்னர், அவர்கள் டில்லி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் பல பகுதிகளை வக்பு வாரியத்திடம் அளித்தனர். அம்பேத்கர் கொடுத்த அரசியல்சாசனத்தில் வக்புவாரிய சட்டத்திற்கு இடமில்லை. ஆனால், ஓட்டு வங்கியை அதிகரிக்க காங்கிரஸ் அதனை செய்தது.இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.நட்டா பெருமிதம்
முன்னதாக பா.ஜ., தலைவர் நட்டா பேசியதாவது: இந்த வரலாற்று சிறப்பு மிக்க நாளில் இந்திய மக்களும், மஹாராஷ்டிரா மக்களும், மீண்டும் பிரதமரின் கொள்கையை அங்கீகரிக்கிறோம் என்ற செய்தியை நாடு முழுதும் அனுப்பி உள்ளனர். இதற்காக நான் மஹாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மற்ற மாநில மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.2019 லும் பா.ஜ., கூட்டணி ஆட்சி அமைக்க மக்கள் விரும்பினர். ஆனால் அதிகாரத்திற்காக உத்தவ் தாக்கரே நம்மை ஏமாற்றினார். ஆனால், பிரதமர் மோடி, மஹாயுதி, பா.ஜ., மற்றும் சிவசேனா ஆகிய கட்சிக்கு ஆதரவாக உள்ளதாக மஹாராஷ்டிரா மக்கள் காட்டி உள்ளனர்.பிரதமர் மோடிக்கு கயானா மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகள், உயர்ந்த விருதை அளித்தது நமக்கு கிடைத்த பெருமை ஆகும். இவ்வாறு நட்டா பேசினார்.