உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நேஹா கொலை வழக்கு சி.ஐ.டி.,க்கு மாற்றம் மாநிலம் முழுவதும் பா.ஜ.,வினர் போராட்டம்

நேஹா கொலை வழக்கு சி.ஐ.டி.,க்கு மாற்றம் மாநிலம் முழுவதும் பா.ஜ.,வினர் போராட்டம்

ஹூப்பள்ளி : ஹூப்பள்ளி கல்லுாரி மாணவி நேஹா கொலை வழக்கை, சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றி, கர்நாடக அரசு உத்தரவிட்டு உள்ளது. காங்கிரஸ் அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் பா.ஜ.,வினர் போராட்டம் நடத்தினர். தார்வாடில் அரை நாள் முழு அடைப்பு நடந்தது.ஹூப்பள்ளி - தார்வாட் மாநகராட்சி காங்கிரஸ் கவுன்சிலர் நிரஞ்சன் ஹிரேமத். இவரது மகள் நேஹா, 22. ஹூப்பள்ளி வித்யாநகரில் உள்ள கல்லுாரியில், எம்.சி.ஏ., முதலாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 18ம் தேதி கல்லுாரி வளாகத்தில் நேஹாவை, பயாஸ், 22 என்பவர் கத்தியால் குத்தி கொன்றார். வித்யாநகர் போலீசார் அவரை கைது செய்தனர்.

விரைவு நீதிமன்றம்

'லவ் ஜிகாத்'திற்கு மறுத்ததால், நேஹா கொலை செய்யப்பட்டார் என்று பா.ஜ.,வினர் குற்றம் சாட்டினர். ஆனால், மாநில அரசு மறுத்தது. முதல்வர் சித்தராமையா ஷிவமொகாவில் நேற்று அளித்த பேட்டியில், ''2019 முதல் 2023 வரை, கர்நாடகாவில் பா.ஜ., ஆட்சி இருந்தது. ஒவ்வொரு ஆண்டும் குற்றச்சம்பவங்கள் அதிகரித்தன. நாங்கள் ஆட்சிக்கு வந்ததும், குற்றங்கள் குறைந்துள்ளன. மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு சீராக உள்ளது. ஹூப்பள்ளி கல்லுாரி மாணவி நேஹா கொலையை கண்டிக்கிறேன்.''நேஹா கொலை வழக்கு விசாரணையை, சி.ஐ.டி.,யிடம் ஒப்படைத்து உள்ளோம். விரைவு நீதிமன்றத்தில், இந்த வழக்கு விசாரணை நடக்கும். நேஹா கொலையில் மேலும் நான்கு பேருக்கு தொடர்பு இருப்பதாக, அவரது தந்தை நிரஞ்சன் கூறி உள்ளார். அது பற்றியும் விசாரணை நடக்கும். எங்கள் ஆட்சியில் அனைத்து சமூகத்தினருக்கும் பாதுகாப்பு கொடுப்போம்,'' என்றார்.உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் கூறுகையில், ''நேஹா கொலை வழக்கு தொடர்பாக, சமூக வலைதளங்களில் சில பதிவுகளை பார்த்தேன். நேஹாவுக்காக பா.ஜ.,வுக்கு ஓட்டு போடுங்கள் என்று இருந்தது. நேஹாவின் மரணத்தில் அரசியல் செய்கின்றனர். ''நேஹா கொலையில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கிறோம். கொலையாளியை காப்பாற்ற முயற்சி செய்யவில்லை. அவரை பாதுகாக்கும் அவசியம் என்ன? கொலை நடந்த ஒரு மணி நேரத்தில், பயாஸை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கை சி.ஐ.டி., விசாரணைக்கு ஒப்படைத்து உள்ளோம். கொலையாளியை பிடிக்க முடியவில்லை. அவர் வெளிநாட்டிற்கு தப்பி சென்று இருந்தால், சி.பி.ஐ.,யிடம் கொடுப்பது பற்றி யோசித்து இருப்போம்,'' என்றார்.

5வது நாள் சடங்கு

நேஹா இறந்து நேற்றுடன் ஐந்தாவது நாள் ஆகும். வீரசைவ லிங்காயத் முறைப்படி அவரது வீட்டில் சடங்குகள் நடந்தன. லிங்காயத் சமூக மடாதிபதிகள், உறவினர்கள் கலந்து கொண்டு, நேஹா உருவப்படத்திற்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தினர்.நேஹாவின் தந்தை நிரஞ்சன் கூறுகையில், ''என் மகளை இழந்து, ஐந்து நாட்கள் ஆகிவிட்டது. அவரது நினைவுகள் எங்களை விட்டு நீங்கவில்லை. அவரை மறந்து விட்டு, அடுத்த வேலையை பார்ப்பது கஷ்டம். நேஹா கொலையை சி.ஐ.டி., விசாரணைக்கு ஒப்படைத்ததற்கு, முதல்வர் சித்தராமையாவுக்கு நன்றி தெரிவிக்கிறேன். ''சி.ஐ.டி., விசாரணையில் நியாயம் கிடைக்கும் என்று நம்பிக்கை உள்ளது. முதல்வர் வக்கீலாக இருந்தவர். அவருக்கு இந்த வழக்கு பற்றி உண்மையான தகவல் கிடைத்து இருக்கும் என்று நினைக்கிறேன்,'' என்றார்.

டயருக்கு தீ

நேஹா கொலையில் கர்நாடக அரசை கண்டித்து, மாநிலம் முழுதும் நேற்று பா.ஜ., போராட்டம் நடத்தியது. மைசூரில் பா.ஜ., தலைவர் விஜயேந்திரா தலைமையில் நடந்த போராட்டத்தில், பா.ஜ., தொண்டர்கள், ஹிந்து அமைப்பினர் கலந்து கொண்டனர். நேஹா மரணத்திற்கு நியாயம் கிடைக்கவும், அரசுக்கு எதிராகவும் கோஷம் எழுப்பினர்.ஹூப்பள்ளியில் பா.ஜ., ஹிந்து அமைப்பினர் நடத்திய போராட்டத்தில், சாலையில் டயர்களை தீ வைத்து எரித்தனர். தார்வாட் அஞ்சுமான் முஸ்லிம் அமைப்பும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து இருந்தது. ஏராளமான முஸ்லிம்கள் பேரணியாக சென்று, நேஹாவுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று கோஷமிட்டனர். தார்வாடில் முஸ்லிம் வியாபாரிகள் அரை நாள், முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பெலகாவியில் பெண்கள் பிரமாண்ட பேரணி நடத்தினர். மனித சங்கிலியும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி