| ADDED : பிப் 02, 2025 03:25 PM
புதுடில்லி; ரயில்வேயின் அனைத்து சேவைகளையும் ஒரே செயலியில் பெறும் வகையில் புதிய ஆப்(app) ஒன்றை ரயில்வே நிர்வாகம் அறிமுகப்படுத்தி உள்ளது.நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் ஏராளமான வழித்தடங்களில் ரயில்கள் இயங்கி வருகின்றன. அவற்றில் டிக்கெட் முன்பதிவு செய்ய ஐ.ஆர்.சி.டி.சி., தளத்தை மக்கள் பயன்படுத்துகின்றனர். இந் நிலையில், ரயில்வே துறையின் அனைத்து சேவைகளையும் ஒரே செயலியில் பெற புதிய செயலி ஒன்றை ரயில்வே நிர்வாகம் அறிமுகப்படுத்தி உள்ளது. அந்த ஆப் பெயர் SwaRail. இந்த செயலியை பயன்படுத்தி டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். முன்பதிவில்லாத மற்றும் பிளாட்பார்ம் டிக்கெட்டுகளை பதிவு செய்து கொள்ளவும் முடியும். பார்சல்கள் பற்றிய விவரங்கள், சீசன் பாஸ், ரயில் பயணத்தின் போது உணவு ஆர்டர் செய்து கொள்வது என சேவைகளை பெறலாம்.மத்திய ரயில்வே அமைப்பு உருவாக்கி இருக்கும் இந்த செயலி, தற்போது பீட்டா சோதனையில் உள்ளது. கூகுள் ப்ளே ஸ்டோர், ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கூடிய விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு செயலி கொண்டு வரப்படும் என்று தெரிகிறது.