UPDATED : மார் 20, 2019 02:45 PM | ADDED : மார் 20, 2019 02:44 PM
புதுடில்லி : பிரதமர் மோடி குறித்து டில்லி முதல்வரும், ஆம்ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் பதிவிட்டுள்ள டுவிட்டர் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.நான் நாட்டின் காவலாளி என சமீபத்தில் பிரதமர் மோடி தேர்தல் பிரசார வீடியோவில் குறிப்பிட்டிருந்தார். இது சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஆனது. இதனையடுத்து டுவிட்டரில் தனது பெயரை காவலாளி நரேந்திர மோடி எனவும் மோடி மாற்றினார். மோடியை தொடர்ந்து பா.ஜ., தலைவர்களும் தங்கள் பெயருக்கு முன் காவலாளி என சேர்த்து, டுவிட்டரில் பெயர் மாற்றம் செய்தனர். இதற்கிடையில் எதிர்க்கட்சிகளும் இதை வைத்து பிரதமரை கடுமையாக விமர்சித்து வருகின்றன.இதில் தற்போது கெஜ்ரிவாலும் இணைந்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், மோடி, ஒட்டுமொத்த நாட்டையும் காவலாளியாக்க விரும்புகிறார். நீங்களும் உங்கள் குழந்தைகளை காவலாளி ஆக்க விரும்பினால் மோடிக்கு ஓட்டளியுங்கள். ஆனால் உங்கள் குழந்தைகளுக்கு நல்ல கல்வி அளிக்க விரும்பினால், அவர்களை டாக்டர்கள், இன்ஜினியர்கள், வழக்கறிஞர்கள் ஆக்க விரும்பினால் நேர்மையான மற்றும் கல்வி அறிவு பெற்ற ஆம்ஆத்மி வேட்பாளர்களுக்கு ஓட்டளியுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.