உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பண்டிப்பூரில் இரவு நேர போக்குவரத்து கட்டுப்பாடு தொடரும் என்கிறார் அமைச்சர்

பண்டிப்பூரில் இரவு நேர போக்குவரத்து கட்டுப்பாடு தொடரும் என்கிறார் அமைச்சர்

மைசூரு : ''பண்டிப்பூர் வனப்பகுதி, வனவிலங்குகளின் வாழ்விடமாக உள்ளதால் இங்கு, இரவு நேர வாகனத்தை கட்டுப்படுத்த, போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு தொடரும்,'' என வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே தெரிவித்தார்.மைசூரு வன மண்டல செயல்பாடுகள் குறித்து, நகரின் அரண்ய பவனில், வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே உயர் அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.மண்டல தலைமை வனப்பாதுகாப்பு அதிகாரி மாலதி பிரியா, செயல்பாடுகள் குறித்து, அமைச்சருக்கு விளக்கினார்.பின், அவர் கூறியதாவது:பண்டிப்பூர் வனப்பகுதிக்குள் உள்ள சாலையில், காலை 6:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை செல்ல அனுமதி உள்ளது. இரவு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. வன விலங்குகள் பாதுகாப்பு கருதி, இந்த கட்டுப்பாடு தொடரும்.

வாகன ஆய்வு

இருப்பினும், மருத்துவம் போன்ற சில சிறப்பு சந்தர்ப்பங்களில், ஆய்வுக்கு பின் வாகன போக்குவரத்து அனுமதிக்கப்படுகிறது. பண்டிப்பூரில் ரயில் பாதை அல்லது மேம்பாலம் அமைப்பதற்கான ஆய்வு எதுவும் நடைபெறவில்லை.மனித - வனவிலங்கு மோதலை தடுக்க நடவடிக்கை எடுப்பது அவசியம். ஒவ்வொரு உயிரும் விலைமதிப்பற்றது. இதனால், பயிர்கள் சேதமடையாத வகையிலும், உயிர் சேதம் ஏற்படாத வகையிலும் ரயில்வே தடுப்புகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.வன விரிவாக்கத்துக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். சுதந்திரத்திற்கு முன், 7,500 ஏக்கர் வன நிலம், சில எஸ்டேட் நிறுவனங்களுக்கு நீண்ட காலத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டது.

நடமாட்டம் தடை

இதனால் விலங்குகளின் சீரான நடமாட்டம் தடைபட்டுள்ளது. எனவே, இந்த நிலத்தை மீண்டும் வனத்துறையிடம் இருந்து பெறவும், வனத்தை விரிவுபடுத்தவும் சட்டப் போராட்டம் தொடரும். குத்தகை பணத்தை செலுத்தவில்லை என்று நோட்டீஸ் வழங்கியதால், அவர்கள் நீதிமன்றம் சென்றுள்ளனர்.வரும் கோடை காலத்தில், காட்டுத் தீயால் வனப்பகுதிகள் சேதமடையாத வகையில், கவனம் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.மாநிலத்தில் 2 லட்சம் ஏக்கர் வன நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிக்கை உள்ளது. தகவல் பெற்று, ஆக்கிரமித்துள்ளவர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும். ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்.இவ்வாறு அவர்கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்