உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராஜ்யசபா தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் 72 ஆண்டு வரலாற்றில் முதல்முறை

ராஜ்யசபா தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் 72 ஆண்டு வரலாற்றில் முதல்முறை

ராஜ்யசபா தலைவரும், துணை ஜனாதிபதியுமான ஜக்தீப் தன்கரை பதவியில் இருந்து நீக்கும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை, எதிர்க்கட்சிகளின், 'இண்டி' கூட்டணி கொண்டு வந்துள்ளதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.ராஜ்யசபாவின் தலைவராக, துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் உள்ளார். சபைத் தலைவருக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையே பலமுறை மோதல் ஏற்பட்டுள்ளது. 'தன்கர் ஒருதலைபட்சமாக நடந்து கொள்கிறார்' என, எதிர்க்கட்சிகள் பலமுறை குற்றஞ்சாட்டியுள்ளன.இந்நிலையில், நடப்பு கூட்டத்தொடரில், காங்., - எம்.பி., அபிஷேக் மனு சிங்வி இருக்கையின் கீழ் 500 ரூபாய் கட்டுகள் இருந்ததாக, ஜக்தீப் தன்கர் சமீபத்தில் குற்றஞ்சாட்டினார். விசாரணை நடத்தாமலேயே, எம்.பி.,யின் பெயரைக் குறிப்பிட்டு சபை தலைவர் குற்றஞ்சாட்டியதற்கு, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.அத்துடன் தொழிலதிபர் கவுதம் அதானி மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட விவகாரத்தை காங்., கையில் எடுத்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்தியாவுக்கு எதிரான கொள்கை உள்ள அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸ் நிதியுதவி அளிக்கும் அமைப்புடன், காங்., முன்னாள் தலைவர் சோனியாவுக்கு தொடர்பு இருப்பதாக பா.ஜ., எதிர் பிரசாரம் செய்து வருகிறது.அதானி விவகாரத்தை சபையில் பேசுவதற்கு அனுமதி அளிக்காத சபைத் தலைவர் ஜக்தீப் தன்கர், சோனியா - சோரஸ் விவகாரத்தை பேசுவதற்கு பா.ஜ.,வுக்கு அனுமதி அளித்ததாக, எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன.இதையடுத்தே, ஓரவஞ்சனையுடனும், ஒருதலைபட்சமாகவும் நடந்து கொள்வதாக ஜக்தீப் தன்கருக்கு எதிராக, இண்டி கூட்டணியில் உள்ள சில கட்சிகள், நம்பிக்கையில்லா தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளன. இந்த தீர்மான நோட்டீசில், 60க்கும் மேற்பட்ட எம்.பி.,க்கள் கையெழுத்திட்டுள்ளனர். ஆனால், காங்., தலைவரும், ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே, காங்., பார்லிமென்ட் குழு தலைவர் சோனியா உள்ளிட்ட பல எதிர்க்கட்சி தலைவர்கள் கையெழுத்திடவில்லை.லோக்சபாவில், சபாநாயகருக்கு எதிராக இதற்கு முன் மூன்று முறை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. 1954ல் ஜி.வி.மவலாங்கர், 1987ல் பல்ராம் ஜாக்கர் ஆகியோருக்கு எதிரான அந்த தீர்மானங்கள் தோல்வி அடைந்தன. அதே நேரத்தில், 1966ல், ஹூகும் சிங்குக்கு எதிரான தீர்மானம், போதிய உறுப்பினர் ஆதரவு இல்லாததால் நிராகரிக்கப்பட்டது.ஆனால், ராஜ்யசபா அமைந்ததில் இருந்து, 72 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக சபைத் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு உள்ளது.

சட்ட விதிகள் சொல்வது என்ன?

அரசியல் சட்டத்தின் 67பி பிரிவின்படி, ராஜ்யசபா தலைவராக உள்ள துணை ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடியும். இந்த தீர்மானம், பெரும்பான்மையுடன் இரு சபைகளிலும் நிறைவேற வேண்டும். தீர்மானத்தை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள, குறைந்தபட்சம், 14 நாட்கள் அவகாசம் தர வேண்டும்.மொத்தம், 243 உறுப்பினர்கள் உள்ள ராஜ்யசபாவில், இண்டி கூட்டணியின் பலம், 103 ஆக உள்ளது. இவர்களோடு சுயேச்சை எம்.பி., கபில் சிபலும் உள்ளார்.இவர்கள் அளித்துள்ள நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் ஏற்கப்பட வேண்டுமெனில், 14 நாட்களுக்கு முன்பாக வழங்கப்பட்டிருக்க வேண்டும். இந்த குளிர்கால கூட்டத்தொடர், வரும் 20ம் தேதியுடன், முடிவடைய உள்ளது. இதனால், இந்த நோட்டீசால் எந்த ஒரு பலனும் இருக்காது.மேலும், ராஜ்யசபா மற்றும் லோக்சபாவில், எதிர்க்கட்சிகளுக்கு பெரும்பான்மை பலம் இல்லை. அதனால், தீர்மானம் எடுத்துக் கொள்ளப்பட்டாலும் அது நிறைவேறுவதற்கு வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது. - நமது டில்லி நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை