உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எத்தனை தேர்தலில் தோற்றாலும் கவலையில்லை; பாஜவுக்கு எதிராக போராடுவோம்: பிரியங்கா

எத்தனை தேர்தலில் தோற்றாலும் கவலையில்லை; பாஜவுக்கு எதிராக போராடுவோம்: பிரியங்கா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ''எத்தனை தேர்தலில் தோற்றாலும் கவலையில்லை. பாஜவுக்கு எதிராகவும், அதன் கொள்கைக்கு எதிராகவும் தொடர்ந்து போராடுவோம்,'' என லோக்சபாவில் காங்கிரஸ் எம்பி பிரியங்கா பேசினார்.

இரண்டு காரணங்கள்

வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு நிறைவு குறித்து லோக்சபாவில் நடந்த சிறப்பு விவாதத்தில் காங்கிரஸ் எம்பி பிரியங்கா பேசியதாவது: பாஜ தேர்தலுக்காக பணியாற்றுகிறது. நாங்கள் நாட்டுக்காக பணியாற்றுகிறோம். எத்தனை தேர்தலில் தோற்றோம் என்பது பிரச்னையில்லை. இங்கு அமர்ந்து, உங்களுக்கு எதிராகவும், உங்களது கொள்கைக்கு எதிராகவும் போராடுவோம். நாட்டுக்காக போராடுவோம்.எங்களை உங்களால் தடுக்க முடியாது. வந்தே மாதரம் பாடல் குறித்து இன்று விவாதம் நடப்பதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று மேற்கு வங்கத்தில் தேர்தல் வருகிறது. இதுபோன்ற சூழ்நிலையில் பிரதமர் தனது பங்கை விரிவுபடுத்த விரும்புகிறார். இரண்டாவது, நாட்டின் விடுதலைக்காக போராடியவர்கள், தங்களது உயிரை தியாகம் செய்துள்ளனர். அவர்கள் மீது குற்றம் சாட்டுவதற்கான வாய்ப்புகளை உருவாக்க மத்திய அரசு விரும்புகிறது. இதன் மூலம் பொது மக்கள் தொடர்புடைய பிரச்னைகளில் இருந்து திசைதிருப்ப, மக்களின் கவனத்தை திசைதிருப்ப அரசு விரும்புகிறது.

மக்களின் பிரதிநிதி

பிரதமர் மோடியின் தன்னம்பிக்கை குறைகிறது. அவரின் கொள்கைகளால் நாடு பலவீனம் அடைகிறது. இதனால், வெட்கப்பட்டுக் கொண்டு, அதிகாரத்தில் உள்ள எனது நண்பர்கள் அமைதியாக இருக்கிறார்கள். மக்கள் மகிழ்ச்சியற்றவர்களாகவும், துயரத்திலும் உள்ளனர். மக்கள் பிரச்னைகளால் சூழப்பட்டுள்ளனர். நீங்கள் அவற்றை தீர்க்கவில்லை. பொது மக்களின் கவனத்தை திசைதிருப்பவே விரும்புகின்றனர். இதனால், வந்தே மாதரம் குறித்து இன்று விவாதிக்கின்றனர். வந்தே மாதரம் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் நிறைந்துள்ளது. அது குறித்து விவாதிக்கப்படவில்லை. இன்று பிரதமர் விவாதத்தை துவக்கியுள்ளார். அவர் பேச்சு சிறப்பானதாக இருந்தது என்பதை சொல்வதற்கு தயக்கமில்லை. ஆனால், உண்மையை பற்றி பேசும்போது அவர் பலவீனமாகிவிடுகிறார். உண்மையை மக்கள் எப்படி சொல்ல வேண்டும் என்பதும் ஒரு கலை. நான் இந்த அவைக்கு புதியவர். நான் மக்களின் பிரதிநிதி. நடிகை கிடையாது.

ஆணவம்

மஹாத்மா காந்தி, ரவீந்திரநாத் தாகூர், ராஜேந்திர பிரசாத், அம்பேத்கர், மவுலானா ஆசாத், சர்தார் வல்லபாய் படேல், நேதாஜி ஆகியோரை காட்டிலும் தாங்கள் உயர்ந்தவர்கள் என்ற எண்ணத்தில் உள்ளதால், ஆளுங்கட்சியில் உள்ள எனது நண்பர்கள் ஆணவத்தில் உள்ளனர். தேசிய பாடலில் உள்ள ஒரு பகுதி நீக்கப்பட்டது, நாட்டின் விடுதலைக்காக போராடி உயிரை நீத்தவர்களுக்கு செய்யப்பட்ட அவமானம் என பிரதமர் மோடி தனது பேச்சில் குறிப்பிட்டார்.

நேரு இல்லாவிட்டால்...

முன்னாள் பிரதமர் நேரு தற்போது விமர்சிக்கப்படுகிறார். நாட்டின் விடுதலைக்காக அவர் 12 ஆண்டுகள் சிறையில் இருந்துள்ளார். நாடு விடுதலை பெற்ற பிறகு, 17 ஆண்டுகள் அவர் பிரதமர் ஆக இருந்துள்ளார். நீங்கள் எவ்வளவு விமர்சனம் செய்தாலும், அவர் இஸ்ரோவை உருவாக்காவிட்டால், இன்று மங்கள்யான் திட்டம் சாத்தியம் இல்லை. டிஆர்டிஓ அமைப்பை அவர் உருவாக்கவிட்டால், தேஜஸ் விமானம் சாத்தியம் ஆகி இருக்காது. எய்ம்ஸ் மருத்துவமனை உருவாக்கப்படாவிட்டால், கோவிட் என்ற சவாலை எப்படி சமாளித்து இருப்பீர்கள். ஜவஹர்லால் நேரு, இந்த நாட்டுக்காக வாழ்ந்தார். இந்த நாட்டிற்காக சேவை செய்யும்போது உயிரிழந்தார். இவ்வாறு பிரியங்கா பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Naga Subramanian
டிச 08, 2025 17:47

தெரியுங்க க்கா அதைத்தானே செய்யுறீங்க மேடம் நல்லா செய்யுங்க செஞ்சுக்கிட்டே இருங்க


karthik
டிச 08, 2025 17:46

அப்போ சாகும் வரைக்கும் போராடிக்கொண்டே இருங்கள்


மேலும் செய்திகள்









புதிய வீடியோ