கோல்கட்டா: “வரும் 2026 சட்டசபை தேர்தலில் மேற்கு வங்கத்தில், திரிணமுல் காங்., தலைவர் மம்தா பானர்ஜியை தோற்கடிப்பதே நம் குறிக்கோள்; இதன் வாயிலாக மாநிலத்தில் பயங்கரவாத ஊடுருவலை தடுத்து அமைதியை நிலைநாட்டுவோம்,” என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி அமைந்துள்ளது.இங்கு, வடக்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில், இந்தியா - வங்கதேச எல்லையில் அமைந்துள்ள பெட்ராபோல் சோதனைச்சாவடியில், புதிதாக கட்டப்பட்டுள்ள பயணியர் முனைய கட்டடம் மற்றும் சரக்கு போக்குவரத்துக்கான நுழைவாயில் ஆகியவற்றை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று துவக்கி வைத்தார். தொடர்ந்து, கோல்கட்டாவில் நடந்த பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை கூட்டத்தில் அவர் பங்கேற்றார். குறிக்கோள்இந்த நிகழ்ச்சியில் அமித் ஷா பேசியதாவது: மேற்கு வங்கத்தில், வங்கதேச எல்லையில் சட்டவிரோத நடமாட்டம் அதிகரித்துள்ளது. இது நாட்டின் அமைதியை பாதிக்கிறது.இதன் வாயிலாக பயங்கரவாதிகள் நம் நாட்டில் ஊடுருவும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. அதை தடுப்பதே மத்திய அரசின் குறிக்கோள். ஊடுருவலை நிறுத்தினால் தான் மேற்கு வங்கத்தில் அமைதி நிலவும். கடந்த 2014ல் ஆட்சிக்கு வந்தது முதல், சுகாதாரம் உள்ளிட்ட முக்கிய துறைகளை மேம்படுத்த பல்வேறு முயற்சிகளை பிரதமர் நரேந்திர மோடி முன்னெடுத்து வருகிறார். ஆனால், மேற்கு வங்க மக்கள் மத்திய அரசு வழங்கும் சுகாதார சேவைகளை, மாநில அரசின் பிடிவாதத்தால் இழந்துள்ளனர். இதற்கு மேற்கு வங்க ஆட்சியாளர்கள் தான் காரணம். காங்., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு ஆட்சியின் போது, மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மேற்கு வங்கத்துக்கு 15,000 கோடி ரூபாய் கிடைத்தது. ஆனால், பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில், இது 54,000 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.இது மட்டுமின்றி மத்திய அரசின் பல்வேறு திட்டங்களில், மேற்கு வங்கத்துக்கு அதிக நிதி வழங்கப்படுகிறது. ஆனால், அவை அனைத்தும் பயனாளிகளுக்கு செல்லாமல் திரிணாமுல் காங்., தலைவர்களுக்கு செல்கின்றன. அரசு அனுப்பும் நிதியின் பெரும்பகுதி ஊழல் காரணமாக பறிக்கப்படுகிறது. வரும் 2026ம் ஆண்டில் இந்த நிலை மாறும். சந்தேஷ்காலியில் பெண்கள் மீதான தாக்குதல் மற்றும் பலாத்கார சம்பவங்கள், சமீபத்தில் நடந்த ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனை பெண் பயிற்சி டாக்டர் கொலை போன்றவை, மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டுள்ளதற்கான சான்று.ஆட்சி மாற்றம்இங்கு பெண்களுக்கு, தாய்மார்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை இந்த சம்பவங்கள் உறுதிப்படுத்துகின்றன. மாநிலத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை செய்ய மம்தா அரசு தவறி வருகிறது. மேற்கு வங்கத்தில் பயங்கரவாத ஊடுருவலை தடுக்கவும், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் ஆட்சி மாற்றம் அவசியம். வரும் 2026ல் மேற்கு வங்கத்தில் மாற்றத்தை கொண்டு வாருங்கள்; நாங்கள் ஊடுருவலுக்கு முற்றுப்புள்ளி வைத்து மாநிலத்தில் அமைதியை உறுதி செய்வோம்.இந்த மாநிலத்தின் வளர்ச்சியை மேம்படுத்த பிரதமர் மோடி உறுதிபூண்டுள்ளார். அதை நிறைவேற்றுவோம். வரும் 2026ல், மேற்கு வங்கத்தில் நல்ல நாள் துவங்கும். இவ்வாறு அவர் பேசினார்.