| ADDED : நவ 02, 2025 12:10 AM
பத்தனம்திட்டா: சபரிமலையில் தங்கம் மாயமான வழக்கில், தங்க தகடுகளை செப்பு தகடு என மாற்றி ஆவணப்படுத்தியதாக தேவசம்போர்டு முன்னாள் நிர்வாக அதிகாரியை சிறப்பு புலனாய்வு குழு கைது செய்துள்ளது. கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியை சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. கடந்த, 2019ல் கோவில் கருவறை முன்பாக இருந்த இரு துவாரபாலகர்கள் சிலைகளில் இருந்து, பராமரிப்பு பணிக்காக தங்க தகடுகள் கழற்றப்பட்டன. குற்றச்சாட்டு இதற்கான செலவை ஏற்ற பெங்களூரைச் சேர்ந்த உன்னிகிருஷ்ணன் போத்தி என்பவர், தங்கத் தகடுகளை சென்னைக்கு எடுத்து வந்து முலாம் பூசியதாக கூறப்படுகிறது. பின்னர் மீண்டும் அவர் தங்கத் த கடுகளை ஒப்படைத்த போது, அதில் இருந்து 4 கிலோ அளவுக்கு தங்கம் திருடப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து திருடப்பட்ட தங்கத்தை கண்டுபிடிக்க, சிறப்பு புலனாய்வு குழுவை கேரள உயர் நீதிமன்றம் நியமித்தது. முதற்கட்ட விசாரணையில் உன்னிகிருஷ்ணன் போத்தி தங்கத்தை திருடியது தெரியவந்ததால், சிறப்பு புலனாய்வு குழுவினர் அவரை கைது செய்தனர். மேலும், இந்த திருட்டுக்கு உடந்தையாக செயல்பட்டதாக தேவசம் போர்டு முன்னாள் நிர்வாக அதிகாரி முராரி பாபுவும் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், இவ்வழக்கில் மூன்றாவது நபராக தேவசம் போர்டின் மற்றொரு முன்னாள் நிர்வாக அதிகாரி சுதீஷ்குமார் என்பவரையும் சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். கடந்த, 2019ல் பராமரிப்பு பணிக்காக துவாரபாலகர்கள் சிலையில் இருந்து தங்கத் தகடுகள் கழற்றப்பட்ட போது, அவற்றை செப்பு தகடுகள் என சுதீஷ் குமார் மாற்றி ஆவணப்படுத்தியதாக தெரியவந்துள்ளது. துவாரபாலகர்கள் சிலைகளின் தங்கபீடத்தை தனியாக பதுக்கி வைத்திருந்த உன்னிகிருஷ்ணன் போத்தியின் உதவியாளர் வாசுதேவனிடமும் விசாரணை தீவிரமடைந்து உள்ளது. விசாரணை திருவனந்தபுரத்தில் உள்ள உன்னிகிருஷ்ணன் போத்தியின் உறவினர் வீட்டில் இருந்து அந்த தங்க பீடங்கள் கடந்த மாதம் மீட்கப்பட்டன. துவாரபாலகர்கள் சிலைகள் மற்றும் கோவில் கருவறை கதவுகளில் இருந்த தங்கம் திருடப்பட்டது என, இரு வழக்குகளை சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது. கடந்த, 2019-ல் திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவராக இருந்த பத்மகுமார், உறுப்பினர்கள் உட்பட 10 பேர், இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களிடமும் விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவினர் முடிவு செய்துள்ளனர்.