பதற்றம் நிலவும் பரேலிக்கு செல்ல எதிர்க்கட்சியினருக்கு தடை
பரேலி: உத்தர பிரதேசத்தின் பரேலியில், 'ஐ லவ் முகமது' போஸ்டருக்கு எதிரான போராட்டத்தால் பதற்றம் நீடித்து வரும் நிலையில், நேற்று அங்கு செல்ல முயன்ற எதிர்க்கட்சித் தலைவரும், சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்தவருமான மாதா பிரசாத் பாண்டேவை போலீசார் தடுத்து நிறுத்தினர். உத்தர பிரதேசத்தின் கான்பூரில் உள்ள சுவர்களில் மிலாடி நபியான செப்., 4 அன்று, 'ஐ லவ் முகமது' என்ற போஸ்டர் ஒட்டப்பட்டது. இது பெரும் சர்ச்சையானது. இதற்கு, ஹிந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால், ஹிந்து -- முஸ்லிம்கள் இடையே மோதல் வெடித்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து உத்தர பிரதேசத்தின் பரேலி உள்ளிட்ட பல பகுதிகளிலும், வெளி மாநிலங்களிலும் இதே வாசகத்துடன் ஊர்வலங்கள், போராட்டங்கள் நடந்தன. பரேலியின் கோட் வாலியில் செப்.,26ல் நடந்த போராட்டத்தின் போது, போலீசார் மீது முஸ்லிம்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக, 80 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அங்கு பதற்றமும் நீடிக்கிறது. இந்நிலையில், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், தங்கள் கட்சியைச் சேர்ந்த எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் அடங்கிய, 14 பேர் குழுவை பரேலிக்கு அனுப்ப முடிவு செய்தார். அந்த குழுவினர் நேற்று பரேலி புறப்பட்ட நிலையில், அவர்களை போலீசார் லக்னோவிலேயே தடுத்து நிறுத்தினர். எதிர்க்கட்சியினர் தற்போது பரேலி வந்தால் அது நிலைமையை மேலும் மோசமாக்கும் என, மாவட்ட நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.