உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உத்தேச வேட்பாளர் பட்டியலை தாக்கல் செய்ய உத்தரவு!: கர்நாடக அமைச்சர்களுக்கு காங்., மேலிடம் கெடு

உத்தேச வேட்பாளர் பட்டியலை தாக்கல் செய்ய உத்தரவு!: கர்நாடக அமைச்சர்களுக்கு காங்., மேலிடம் கெடு

பெங்களூரு: லோக்சபா தேர்தலுக்கு, உத்தேச வேட்பாளர் பட்டியல் தயாரித்து அனுப்புவதில், அமைச்சர்கள் தாமதம் செய்வதால், காங்கிரஸ் மேலிடம் அதிருப்தி அடைந்துள்ளது. விரைவில் பட்டியலை அனுப்பும்படி, அவர்களுக்கு, 'கெடு' விதித்துள்ளது.தலைமை தேர்தல் ஆணையம், எந்த நேரத்திலும் லோக்சபா தேர்தல் அறிவிப்பை வெளியிட வாய்ப்புள்ளது. எப்போது வெளியாகும் என, அரசியல் கட்சிகள் காத்திருக்கின்றன. ஆளுங்கட்சியான காங்கிரஸ், எதிர்க்கட்சிகளான பா.ஜ., - ம.ஜ.த., ஆகியவை, லோக்சபா தேர்தலுக்கு தயாராகின்றன.

இலக்கு

தேசிய கட்சிகளான பா.ஜ., - காங்கிரஸ் இடையே நேரடி போட்டி உள்ளது. இம்முறை பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி வைத்து லோக்சபா தேர்தலுக்கு தயாராகின்றன. இது ஆளுங்கட்சியான காங்கிரசுக்கு கிலியை ஏற்படுத்தியுள்ளது. 20 தொகுதிகளை கைப்பற்ற, காங்கிரஸ் இலக்கு நிர்ணயித்துள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் திறன் வாய்ந்த வேட்பாளர்களை களமிறக்க திட்டமிட்டுள்ளது.பெரும்பாலான தொகுதிகளில், இத்தகைய வேட்பாளர்கள் இல்லை. சீட் எதிர்பார்ப்போர் அதிக எண்ணிக்கையில் இருந்தாலும், அவர்களுக்கு வெற்றி பெறும் திறன் இருக்குமா என்பது சந்தேகம். எனவே, தகுதியான வேட்பாளர்களை தேடி அலைகிறது. வேட்பாளர்கள் இல்லாத தொகுதிகளில், அமைச்சர்களை களமிறங்கும்படி மேலிடம் கூறியும், அவர்கள் போட்டியிட மறுக்கின்றனர்.இதனால், வேட்பாளர் பட்டியல் தயாரிப்பதில், சிக்கல் ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளிடம் உள்ள சுறுசுறுப்பு, ஆளுங்கட்சியிடம் தென்படவில்லை. வேட்பாளர்களை அறிவித்தால்தான், தொண்டர்கள் உற்சாகத்துடன் பணியாற்றுவர். வேட்பாளர் யார் என தெரியாததால், தொண்டர்கள் குழப்பத்தில் உள்ளனர்.எப்போது வேண்டுமானாலும், லோக்சபா தேர்தல் அறிவிப்பு வெளியாகலாம். முன்னேற்பாடுகளை துரிதப்படுத்த வேண்டும். பொதுக்கூட்டம், பேரணி, ஊர்வலம் என, பிரசார திட்டங்களை வகுக்க வேண்டும். ஆனால், இதுவரை வேட்பாளர் பட்டியலே தயாராகவில்லை.மாநிலத்தின் 28 தொகுதிகளிலும், உத்தேச வேட்பாளர்கள் பட்டியலை தயாரித்து அனுப்பும்படி, காங்கிரஸ் மேலிடம் உத்தரவிட்டுள்ளது.

'கெடு'

இதன்படி முதல்வர் சித்தராமையா, அந்தந்த மாவட்ட பொறுப்பு அமைச்சர்களிடம் பட்டியல் கேட்டிருந்தார். சிலர் மட்டுமே பட்டியலை கொடுத்தனர். பலர் கொடுக்காமல், தாமதம் செய்கின்றனர். இதனால் அதிருப்தி அடைந்த காங்., மேலிடம், விரைவில் உத்தேச வேட்பாளர் பட்டியலை, டில்லிக்கு அனுப்பும்படி உத்தரவிட்டுள்ளது.லோக்சபா தேர்தலுக்கு, காங்கிரஸ் வேட்பாளர்களை தேர்வு செய்வது தொடர்பாக, மாநில காங்., அலுவலகத்தில், நேற்று முன்தினம் தேர்தல் கமிட்டி கூட்டம் நடந்தது. மற்றொரு சுற்று ஆய்வு நடத்தி, வேட்பாளர்களை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது.முதல் கட்டமாக சீட் உறுதியானவர்களுக்கு, தகவல் கொடுத்து பிரசாரத்தை துவக்கும்படி உத்தரவிட வேண்டும். எனவே அவரவர் பொறுப்பு மாவட்டத்தில், உத்தேச வேட்பாளர்களின் பெயர்களை சிபாரிசு செய்யும்படி, மாநில காங்., தலைவருமான, துணை முதல்வர் சிவகுமார் உத்தரவிட்டுள்ளார்.அதேபோன்று, நேற்று முன்தினம் நடந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்திலும், முதல்வர் சித்தராமையா, இன்னும் இரண்டு நாட்களுக்குள், உத்தேச வேட்பாளர்கள் பட்டியலை அனுப்பும்படி, அமைச்சர்களுக்கு, 'கெடு' விதித்துள்ளார்.காங்., மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது:மக்களிடம் கருத்து சேகரித்து, தொகுதியில் ஆய்வு நடத்தி வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவர். விரைவில் வேட்பாளர்களை அறிவித்தால், பிரசாரம் செய்ய போதுமான நேரம் கிடைக்கும். வேட்பாளர்களுக்கு வெற்றி வாய்ப்பும் அதிகரிக்கும்.இதை மனதில் கொண்டே, உத்தேச வேட்பாளர் பட்டியலை அனுப்பும்படி, மேலிடம் உத்தரவிட்டுள்ளது. பட்டியல் டில்லிக்கு சென்ற பின், வேட்பாளர்கள் யார் என்பதை, மேலிடம் முடிவு செய்து, இறுதி பட்டியலை வெளியிடும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை