‘எங்கள் உரிமை!’
பெங்களூரு: ‘‘மேகதாது அணை விஷயத்தில் யாருடைய கண்டனத்துக்கும் கவலைப்பட மாட்டேன். இது என் மாநிலம்; அணை கட்டுவது எங்கள் உரிமை. தமிழகத்துக்கு வழங்கப்படும் தண்ணீரையும் பாதுகாப்பேன்,’’ என, முதல்வர் சிவகுமார் கூறியுள்ளார். இதற்கு, ‘அணை கட்ட ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்’ என, தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதை, ‘வெறும் பெயரளவுக்கான எதிர்ப்பு’ என, பா.ஜ., விமர்சித்துள்ளது. கர்நாடகா ராம்நகர் மாவட்டம், கனகபுரா தாலுகா மேகதாது என்ற இடத்தில், காவிரி ஆற்றின் குறுக்கே 16,745 கோடி ரூபாய் செலவில், அணை கட்ட, கர்நாடக அரசு தீவிரமாக பணிகளை மேற்கொண்டு வருகிறது. ‘மேகதாதுவில் அணை கட்டினால் எங்களுக்கு காவிரியில் தண்ணீர் கிடைக்காது’ என்று தமிழக அரசியல் தலைவர்கள் கடும் எதர்ப்பு தெரிவிக்கின்றனர். இருப்பினும், அணையை கட்டியே தீருவோம் என்பதில் முதல்வர் சிவகுமாரும், நீர் பாசன துறை அமைச்சர் செலுவராயசாமியும் பிடிவாதமாக உள்ளனர். மைசூரில் புதிதாக கட்டப்பட்ட கோளரங்க திறப்பு நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. இதில், பிரதமர் மோடி முன்னிலையில், ‘மேகதாதுவில் அணை கட்டுவதை யாராலும் தடுக்கு முடியாது’ என, சிவகுமார் பேசினார். இதற்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் கண்டனம் தெரிவித்தார். இதை மேற்கொள் காண்பித்து காங்கிரசுக்குள்ளேயே சண்டை எனக் கூறிய பா.ஜ., ‘இது வெறும் பெயரளவிலான எதிர்ப்பு’ என, விமர்சித்துள்ளது. இவ்விவகாரம் குறித்து, பெங்களூரு விதான் சவுதாவில் முதல்வர் சிவகுமார் நேற்று அளித்த பேட்டி: மேகதாது திட்டம் என்பது கர்நாடகாவின் உரிமை. உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி அணை கட்டுவது எங்கள் கடமை. இத்திட்டத்திற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிப்பதற்கு பதிலாக, அரசு சார்பில் ஒரு குழுவை அனுப்பி வைக்கட்டும். அக்குழு அணை கட்டும் இடத்திற்கு அழைத்து செல்லப்படும். அணை கட்டுவதால் தமிழகத்துக்கு ஏற்படவுள்ள நன்மைகளை நானே விளக்குகிறேன். கர்நாடகாவின் நலன்களை பாதுகாக்கும் விஷயத்தில் எக்காரணம் கொண்டும் பின்வாங்க மாட்டேன். இத்திட்டத்தை யார் வேண்டுமானாலும் எதிர்க்கலாம். யாருடைய கண்டனங்களுக்கும் கவலைப்பட மாட்டேன். இது என்னுடைய மாநிலம். அணை கட்டுவது எங்கள் உரிமை. மேகதாது அணை விஷயத்தில் தமிழக அரசியல் தலைவர்கள் அரசியல் செய்கின்றனர். இத்திட்டத்தை தமிழக காங்கிரஸ் எதிர்க்கவில்லையென்றால், தி.மு.க., எதிர்க்கும். தி.மு.க., எதிர்க்கவில்லையென்றால் அ.தி.மு.க., எதிர்க்கும். இது அரசியல் சார்ந்த விவகாரம் இல்லை. உச்ச நீதிமன்ற தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும். காவிரியிலிருந்து 177 டி.எம்.சி., தண்ணீரை பெறுவது தமிழகத்தின் உரிமை. அதை நாங்கள் மதிப்போம். எங்கள் உரிமைகளை பாதுகாக்கும் வேளையில், தமிழகத்தின் நலன்களையும் பாதுகாப்போம். அணை கட்டுவதும், தண்ணீர் திறந்துவிடுவதும் எங்கள் உரிமை. தமிழகத்துக்கு சேர வேண்டிய தண்ணீர் நிச்சயம் கிடைக்கும். தமிழக அரசு பேச்சுக்கு முன்வந்தால், இத்திட்டத்தால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்குவோம். இது குறித்த, முழு விபரங்களை வரும் நாட்களில் விரிவாக பேசுவேன். அணை கட்டுவதற்கு தேவையான வன, சுற்றுச்சூழல் அனுமதிகளை வழங்குமாறு மத்திய அரசிடம் வலியுறுத்தி உள்ளேன். மாநிலத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் அணை கட்டுவதற்கு ஆதரவாக உள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.
விஜய் அரசு சமரசமா?
தி.மு.க., முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அறிக்கை.காவிரியில் ஒவ்வொரு ஆண்டும், நம் உரிமையை பெற படாதபாடுபடும் நிலையில், கர்நாடக காங்கிரஸ் அரசு, மேகதாது அணையை கட்ட தீவிர காட்டுகிறது. ‘அணை கட்ட நாங்கள் அனுமதி கேட்க தேவையில்லை’ என, கொக்கரிக்கிறார் கர்நாடக முதல்வர் சிவகுமார். காங்கிரஸ் தயவில்தான் தமிழகத்தில் ஆட்சி நடக்கிறது என்ற துணிச்சல்தான், அவரை இப்படி பேச வைக்கிறது. திமு.க., ஆட்சியில், கடுமையான சட்ட முன்னெடுப்புகள் வழியே, கர்நாடக அரசுக்கு கடிவாளம் போடப்பட்டது. ஆட்சி மாறியதும், காட்சிகள் மாறிவிட்டன. உக்கிரமாக எதிர்க்க வேண்டிய இந்த விஷயத்தை, தமிழக அரசு வேடிக்கை பார்க்கிறது.கூட்டணி தர்மத்துக்காக, தமிழகத்தின் நீர் உரிமையில் விஜய் அரசு சமரசம் செய்து கொண்டிருக்கிறதா. கர்நாடக காங்கிரஸ் மனம் புண்பட்டுவிடக் கூடாது என்பதால், விஜய் மென்மையான போக்கோடு நடந்து கொள்கிறாரா?- டி.ஆர்.பி.ராஜாதமிழக முன்னாள் அமைச்சர், தி.மு.க.,
மாநில உரிமையை பறிக்கும்
கட்சியுடன் கூட்டணியா?கர்நாடகா முதல்வர், காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டியே தீருவேன் என்று கூறும் போது, என்ன பதில் வைத்திருக்கிறீர்கள் என்று இந்த மாநில முதல்வரிடம் கேட்க வேண்டும். ‘மேகதாதுவில் அணை கட்டிய தீருவேன்; தண்ணீர் தர மாட்டேன்’ என்று கூறும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து, ஆட்சி அமைத்திருப்பது யார்? அவர்களுடன் எப்படி உங்களால் கூட்டு வைக்க முடிந்தது?மாநில உரிமையை பறிக்கும் கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொண்டு, மக்களை எப்படி காப்பாற்றப் போகிறீர்கள். அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைமை, இதில் என்ன முடிவு எடுக்கும்? இதில், என்னிடம் கேட்டால், என்ன சொல்லமுடியும்? நான் ஜீரோ. என்னிடம் கேட்பதற்கு பதிலாக, ஹீரோவிடம் போய் கேளுங்கள்.- சீமான்நாம் தமிழர் கட்சி, தலைமை ஒருங்கிணைப்பாளர்
அணை கட்ட அனுமதிக்க மாட்டோம்
தமிழக காங்., தலைவர் ஆவேசம்காங்., தமிழக தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்ட அறிக்கை:கர்நாடக முதல்வர் சிவகுமார், உச்ச நீதிமன்ற தீர்ப்பையும், காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையையும், அப்பட்டமாக மீறும் வகையில், தொடர்ந்து பிடிவாத போக்கை கையாண்டு வருகிறார். கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராகவும், தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையிலும் அவர் பேசியதை ஏற்க முடியாது.காவிரி நீர் பங்கீட்டில், தமிழகம் ஒரு கீழ் படுகை மாநிலம் என்பதால், நம் உரிமைகளை பாதுகாக்கும் எந்த திட்டத்தையும், கர்நாடகா தன்னிச்சையாக செயல்படுத்த முடியாது. கீழ் படுகை மாநிலங்களின் முழு ஒப்புதலின்றி, மேகதாது அணை கட்ட, மத்திய அரசு எவ்வித அனுமதியும் வழங்கக் கூடாது. அப்படி ஒப்புதல் அளிப்பது சட்ட விரோதம்.மேகதாதுவில் கர்நாடகாவால், ஒரு செங்கலை கூட எடுத்து வைக்க விடாமல் தடுப்பது, மத்திய அரசின் கடமை. தமிழக காங்., சார்பில், இந்த திட்டத்தை, நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். தமிழக உரிமைகளை பாதுகாக்க, எந்த எல்லைக்கும் சென்று போராடுவோம்.இவ்வாறு, அதில் கூறியுள்ளார்.
முதல்வர் விஜய்க்கு ஸ்டாலின் கடிதம்
‘காவிரி விவகாரத்தில், அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி, தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்’ என, முதல்வர் விஜய்க்கு, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். அதன் விபரம்:மைசூரில் நடந்த அரசு விழாவில், கர்நாடக முதல்வர் சிவகுமார், பிரதமர் மோடி முன்னிலையில், ‘கர்நாடகாவில் மேகதாது அணை கட்ட வேண்டுமென உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது’ என, பேசி உள்ளார். இது, தமிழக விவசாயிகள் மத்தியில், பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.கடந்த கால படிப்பினைகளின் அடிப்படையில், காவிரி நீர் உரிமை தொடர்பாக, கர்நாடகாவுடன் எவ்வித பேச்சுக்கும் இடமில்லை. சட்டப்பூர்வமாகத்தான், நம் உரிமையை பெறுவோம் என்பதே, தமிழகத்தின் நிலைப்பாடாக இருந்து வந்தது.இதனை மீறும் வகையில், தாங்கள் முதல்வராக பொறுப்பேற்றதும், கர்நாடகா சென்று, அம்மாநில அரசுடன் பேச்சு நடத்த போவதாக செய்திகள் வெளியாகின. அதுசார்ந்த நிகழ்வுகள் எதுவுமே, தமிழக மக்களுக்கு உவப்பானதாக இல்லை.கர்நாடக முதல்வர், மேகதாது அணை கட்டுவது குறித்து, மீண்டும் தீவிரமாக பேச தொடங்கி உள்ள சூழலில், இனியும் தமிழக அரசு மவுனம் காக்கக் கூடாது. நம் ஒற்றுமையையும், கர்நாடக முதல்வரின் பேச்சுக்கு எதிர்ப்பையும், வெளிப்படுத்தும் வகையில், அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்.அதில் நிறைவேற்றும் தீர்மானங்களையும், மேகதாது அணைக்கு எதிராக, தமிழக சட்டசபையில், கடந்த ஜூன் மாதம் நிறைவேற்றி அரசின் தனித் தீர்மானத்தையும், தமிழக சட்டசபை கட்சி தலைவர்களும், அனைத்து கட்சி எம்.பி.க்களும் இணைந்து, பிரதமர் மோடியில் நேரில் அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.