உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்திய ராணுவத்திடம் பாகிஸ்தான் உதவி கேட்கலாம்: ராஜ்நாத் சிங் பேச்சு

இந்திய ராணுவத்திடம் பாகிஸ்தான் உதவி கேட்கலாம்: ராஜ்நாத் சிங் பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டேராடூன் :'' பயங்கரவாதத்தை தனது மண்ணில் ஒழிக்க முடியவில்லை என்றால், இந்திய ராணுவத்திடம் பாகிஸ்தான் உதவி கோரலாம்,'' என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார்.உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் ' தேசிய பாதுகாப்பு மற்றும் பயங்கரவாதம் ' என்ற தலைப்பில் நடந்த மாநாட்டில் ராஜ்நாத் சிங் பேசியதாவது: கடந்த 11 ஆண்டுகளில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஒவ்வொரு பிரச்னையிலும், அணுகுமுறை மற்றும் செயல்பாட்டு முறையை மாற்றியது. இதன் மூலம், இந்தியாவின் பாதுகாப்பு எந்திரத்தையும் மாற்றி உள்ளது. இந்த மாற்றத்தை ' ஆபரேஷன் சிந்தூர் ' நடவடிக்கையில் உலக நாடுகள் பார்த்தன.காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 வது சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பிறகு, மாநிலம் , அமைதியுடன் வளர்ச்சிப் பாதையில் சென்றது. இதனை பொறுத்துக் கொள்ள முடியாத நமது அண்டைநாடு, பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் எவ்வளவுமுயற்சி செய்தாலும், ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சியை தடுக்க முடியவில்லை.அரசின் தொடர் முயற்சி காரணமாக மாநிலம் வளர்ச்சி பெறுகிறது என்பதற்கு உதம்பூர் - ஸ்ரீநகர் ரயில் சேவை மிகச்சிறந்த உதாரணம். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரும் விரைவில் இந்தியாவுடன் சேரும்.பயங்கரவாதிகளுக்கு இந்திய ராணுவம் உரிய பதிலடி கொடுத்துள்ளது.நாம் அவர்களின் ' தர்மா'வைக் கேட்கவில்லை. மாறாக, அவர்களின் 'கர்மா'வை (செயல்) பார்த்து பதிலடி கொடுத்தோம். இனி வரும் காலங்களில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அரசு அளவில் மட்டும் அல்லாமல், மக்கள் மத்தியிலும் உஷாராக இருக்க வேண்டும்.பயங்கரவாதம் என்பது மனித நேயத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பதுடன், அமைதி மற்றும் வளர்ச்சிக்கு எதிரானதாக இருக்கிறது. பயங்கரவாதத்திற்கான போர் என்பது பாதுகாப்புக்காக மட்டும் அல்லாமல், மனித நேயத்திற்கானதாகவும் இருக்க வேண்டும்.பயங்கரவாதம் என்பது ஒழிக்கப்பட வேண்டிய ஒரு தொற்று வியாதி. அமைதி, வளர்ச்சி ஆகியவற்றுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ள இதனை, இயற்கையாக அழிய விடக்கூடாது. பயங்கரவாதத்துக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும்.பயங்கரவாதிகள் நோக்கத்துக்காக போராடுபவர்கள் அல்ல. அவர்களுக்கு எந்த மதமும், கொள்கையும், அரசியல் காரணங்களை சொல்லியும் நியாயப்படுத்த முடியாது. வன்முறை மற்றும் ரத்தக்கறையுடன் எதையும் சாதிக்க முடியாது. அவர்கள் மதத்தை கேட்டு கொன்றனர். இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே நேரத்தில் சுதந்திரம் பெற்றன. இன்று, ஜனநாயகத்தின் தாயாக இந்தியா அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆனால், பயங்கரவாதத்தின் தந்தையாக பாகிஸ்தான் உருவெடுத்து உள்ளது. அந்நாடு பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளிப்பதுடன், பயிற்சி அளித்து, நிதியுதவி செய்கிறது. அவர்களுக்கு ஆதரவு வழங்குவது அவர்களின் வாடிக்கை. பயங்கரவாதிகளையும், பயங்கரவாத உள்கட்டமைப்புகளையும் ஒழிக்க வேண்டியது முக்கியம். பாகிஸ்தானுக்கு நிதியுதவி அளிப்பது என்பது பயங்கரவாத உள்கட்டமைப்புக்கு வழங்குவதற்கு சமம். பயங்கரவாதிகளை உருவாக்கும் அந்நாட்டிற்கு ஆதரவு அளிக்கக் கூடாது.பயங்கரவாதத்தில் இருந்து நாம் விடுதலை பெறும்போது தான், உலக அமைதி, வளர்ச்சி என்ற இலக்கை நோக்கி முன்னேறி செல்ல முடியும். பாகிஸ்தான் மக்களும் இந்த கருத்தை கொண்டு உள்ளனர். ஆனால், அந்நாட்டை ஆளும் அரசுஅழிவுப்பாதையை தேர்வு செய்துள்ளது. பயங்கரவாதத்தை ஒழிக்க முடியவில்லை என்றால், பாகிஸ்தான் இந்தியாவின் உதவியை கோரலாம்.பயங்கரவாதிகளை ஒழிக்கும் திறன் இந்தியாவுக்கு உள்ளது. எல்லையை தாண்டியும் தாக்கும் திறன் இந்தியா ராணுவத்துக்கு உண்டு. இதனை 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையிலும் பாகிஸ்தான் பார்த்தது. தனது மண்ணில் இருந்து பயங்கரவாதத்தை ஒழிக்க பாகிஸ்தானுக்கு உலக நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும். ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை. இது ஒரு இடைநிறுத்தம் ஒரு எச்சரிக்கை மட்டுமே. பாகிஸ்தான் மீண்டும் அதே தவறைச் செய்தால், பதில் இன்னும் கடுமையாக இருக்கும். இந்த முறை அது மீள்வதற்கு வாய்ப்பு இருக்காது. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Kasimani Baskaran
ஜூன் 11, 2025 04:10

தீவிரவாதிகளுக்கு பயிற்சி கொடுப்பதில் நிபுணர்கள் அவர்கள். தயவு பார்ப்பது இந்தியாவுக்குத்தான் ஆபத்து.


ஈசன்
ஜூன் 10, 2025 22:05

அய்யா ராணுவ அமைச்சரே, பக்கி நாட்டு ராணுவமும் தீவிரவாதிகளும் வேறு வேறு அல்ல. இவர்கள் சீருடை அணியாத ராணுவத்தினர் அல்லது அவர்கள் சீருடை அணிந்த, அரசு பணியில் உள்ள தீவிரவாதிகள். ஒரு தீவிரவாத தலைவன் இறந்ததற்கு அரசு மரியாதை செய்கிறது என்றால் என்ன அர்த்தம். அந்த நாட்டு மக்கள் தேர்ந்தெடுத்த அரசு, அதன் ராணுவம், ராணுவத்தின் ஒரு பிரிவு தீவிரவாதிகள். ஆக மொத்தம் அந்த நாடே தீவிரவாத நாடு.


தஞ்சை மன்னர்
ஜூன் 10, 2025 21:26

"" அவர்கள் மதத்தை கேட்டு கொன்றனர்."" திரும்ப திரும்ப ஒரு பொய்யயை உண்மையாக்க முயலுவது இப்படித்தான் இவர்களின் காமெடி தோலுரித்த போதும் இப்படித்தான் இப்படி பேச முடியுது என்று தெரியவில்லை


ஆரூர் ரங்
ஜூன் 11, 2025 11:15

37 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான காஷ்மீர் பண்டிட் ஹிந்துக்கள் இனப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் . 3 லட்சம் ஹிந்துக்கள் அகதிகளாக வேறு மாநிலங்களில் தஞ்சமடைந்துள்ளனர். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு சலுகைகள் மறுக்கப்பட்டது .மதரசாவில் மட்டும் படித்தால் இதெல்லாம் தெரிய வாய்ப்பில்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை