பயங்கரவாதிகளை ஆதரித்துவிட்டு அண்டை நாடுகளை குறைகூறும் பாக்.,: ஆப்கானுக்கு இந்தியா ஆதரவு
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: '' பயங்கரவாதிகளை ஆதரிக்கும் பாகிஸ்தான், தனது தோல்விகளுக்கு அண்டை நாடுகள் மீது குறை சொல்கிறது,'' என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே திடீரென துவங்கியுள்ள மோதல் தீவிரமடைந்து உள்ளது. இரு தரப்பினரும் மாறி மாறி தாக்குதல்களில் ஈடுபட்டு வருவதால், எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இரு நாடுகளிலும் பலர் கொல்லப்பட்டு உள்ளனர். இந்நிலையில் டில்லியில் நிருபர்களை சந்தித்த மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெயிஸ்வால் கூறியதாவது: இரு நாடுகளின் மோதல் குறித்து இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது. பயங்கரவாதிகளை ஆதரித்து தூண்டிவிடும் பாகிஸ்தான், தனது சொந்தத் தோல்விகளுக்கு மற்ற நாடுகளை குறை சொல்கிறது. ஆப்கானிஸ்தான் தனது இறையாண்மையை வலியுறுத்துவதால் பாகிஸ்தான் கோபப்படுகிறது. ஆப்கானிஸ்தானின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் சுதந்திரம் ஆகியவற்றுக்கு இந்தியா உறுதிபூண்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். மேலும் அவர் ஆப்கானில் இந்திய தூதரகம் செயல்பாடு குறித்து கூறுகையில், '' ஆப்கானில், தற்போது இந்தியா சார்பில் தொழில்நுட்ப மையம் செயல்படுகிறது. இது விரைவில் முழு அளவிலான இந்தியத் தூதரகமாக செயல்பட வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.