பார்லிமென்ட் அமளியால் மக்கள் வரிப்பணம் வீணடிப்பு !: சண்டை, சச்சரவுடன் கூட்டத்தொடர் முடிந்தது
அதானி லஞ்ச விவகாரத்தை மையமாக வைத்து அமளியுடன் துவங்கிய பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர், அம்பேத்கர் விவகாரம் தொடர்பான அமளியுடன் நேற்று முடிந்தது. லோக்சபா மற்றும் ராஜ்யசபா என இரு சபைகளும் மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டன. எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக, மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டது. பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் நவ., 25ல் துவங்கியது. முதல் நாளன்றே, தங்கள் நாட்டு பங்குச்சந்தை முதலீட்டாளர்களின் நிதியை இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சமாக தந்ததாக, அதானி குழுமத்தின் மீது அமெரிக்கா சுமத்திய குற்றச்சாட்டு பெரிதாக வெடித்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=0cmqr1yw&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0எதிர்க்கட்சிகள் அரசுக்கு எதிராக கேள்விகளை எழுப்பி கடும் அமளியில் ஈடுபட்டதால் இரு சபைகளுமே ஒத்தி வைக்கப்பட்டன. அன்று துவங்கிய ஒத்திவைப்பு ஊர்வலம் தடையின்றி நேற்று வரை தொடர்ந்தது.திடீர் திருப்பமாக எதிர்க்கட்சிகளுக்கும், அரசுக்கும் இடையே தற்காலிக உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி, அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டு, 75 ஆண்டுகள் ஆகிவிட்டதைக் கொண்டாடும் விதமாக சிறப்பு விவாதம் நடத்த வேண்டுமென எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. அரசும் அதை ஏற்றுக் கொண்டது.இந்த உடன்படிக்கை இடைவேளையில், 'ஒரே நாடு; ஒரே தேர்தல்' மசோதாவை அதிரடியாக லோக்சபாவில் மத்திய அரசு தாக்கல் செய்தது. கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் அந்த மசோதா, பார்லிமென்ட் கூட்டுக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.இந்நிலையில் தான், இருதரப்பும் செய்து கொண்ட உடன்படிக்கையின்படி அரசியலமைப்புச் சட்டம் குறித்த விவாதம் நடந்தது. லோக்சபாவில் பிரதமர் பதிலுரையுடன் அமைதியாக நடந்து முடிந்தது. ராஜ்யசபாவிலும் விவாதம் நடந்தது. அப்போது இறுதியாக உள்துறை அமைச்சர் அமித் ஷா அளித்த பதிலுரை சர்ச்சையை ஏற்படுத்தியது. பதற்றம்
விவாதத்தின்போது, அம்பேத்கர் குறித்து அவர் பேசிய கருத்துக்கள் சர்ச்சையாகின. இதனால், அதானி விவகாரம் பின்னுக்குத் தள்ளப்பட்டு அம்பேத்கர் சர்ச்சை பெரிதாக வெடித்து, கடந்த மூன்று நாட்களாக பார்லிமென்டில் பதற்றம் நிலவியது.உச்சகட்டமாக, பா.ஜ., மற்றும் காங்கிரஸ் எம்.பி.,க்கள் நேற்று முன்தினம் நேருக்கு நேர் மோதி, கைகலப்பில் ஈடுபட்டனர். இதில், இரண்டு பா.ஜ., எம்.பி.,க்களின் மண்டை உடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த தாக்குதல் தொடர்பாக லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த களேபரங்களுக்கு மத்தியில் குளிர்கால கூட்டத் தொடரின் கடைசி நாள் கூட்டம் நேற்று கூடியது. பார்லிமென்ட் வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன், பா.ஜ., - எம்.பி.,க்கள் நேற்று காலை கூடினர். அங்கிருந்து, 'மகர் துவார்' என்றழைக்கப்படும் பிரதான வாயிலை நோக்கி ஊர்வலமாக வந்தடைந்தனர்.அதற்கு நேர் எதிர் திசையில் உள்ள விஜய் சவுக்கில் இருந்து பேரணியாக புறப்பட்ட எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் அம்பேத்கர் புகைப்படத்தை ஏந்தியபடி, 'ஜெய்பீம்' முழக்கமிட்டபடி மகர் துவார் பகுதியை நெருங்கினர்.அப்போது மீண்டும் கலவரம் வெடிக்குமோ என்ற அச்சம் எழுந்தது. முன்னெச்சரிக்கையாக கூடுதல் பாதுகாப்பு அதிகாரிகள் நிறுத்தப்பட்டு இருந்தனர். பார்லிமென்டின் மூலைமுடுக்கெல்லாம் வழக்கத்திற்கு மாறாக போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.மகர் துவார் பகுதியில் பா.ஜ., - எம்.பி.,க்கள் இருப்பதை அறிந்தவுடன், காங்கிரஸ் எம்.பி.,க்கள் அந்த பகுதிக்கு செல்லாமல், எதிரே உள்ள பழைய பார்லிமென்ட் கட்டடத்தின் படிக்கட்டுகளுக்கு சென்று கோஷங்களை எழுப்பினர்.பா.ஜ., - எம்.பி.,க்கள் பார்லிமென்ட் உள்ளே சென்றதை அறிந்ததும், மகர் துவார் பகுதிக்கு வந்து சற்று நேரம் கோஷமிட்டுவிட்டு எதிர்க்கட்சி எம்.பி.,க்களும் பார்லிமென்ட் உள்ளே சென்றுவிட்டனர்.லோக்சபா கடும் கூச்சல் குழப்பத்துடனேயே துவங்கியது. நிறைவு நாள் என்பதால் பிரதமர் நரேந்திர மோடி, சபைக்கு வந்திருந்தார். அவர் இருப்பதை அறிந்த எதிர்க்கட்சியினர் கூடுதலாக கூச்சலிட்டனர். ஒத்திவைப்பு
கூச்சலுக்கு மத்தியில் தன் இருக்கைக்கு வந்தமர்ந்த சபாநாயகர் ஓம் பிர்லா, உடனடியாக, 'ஒரே நாடு; ஒரே தேர்தல்' குறித்த இரண்டு சட்டத்திருத்த மசோதாக்களையும் பார்லிமென்ட் கூட்டு குழுவுக்கு அனுப்புவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.பின், சற்றும் தாமதிக்காமல் வந்தே மாதரம் இசைக்கப்பட்டது. உடனே அமளி செய்து கொண்டிருந்த எம்.பி.,க்கள் அனைவரும் அவரவர் இடங்களிலேயே அமைதியாக நின்றனர். இறுதியாக மறுதேதி குறிப்பிடாமல் லோக்சபா ஒத்திவைக்கப்பட்டது.ராஜ்யசபா காலையில் கூடியதும் அமளி துவங்கியது. சபை தலைவர் ஜக்தீப் தன்கர் பேச துவங்கியதும், எதிர்க்கட்சி எம்.பி.,க்கள், கடும் வாக்குவாதத்தில் இறங்கினர். எனவே, 12:00 மணி வரை சபை ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் 12:00 மணிக்கு மீண்டும் கூடியதும் அமளி தொடர்ந்தது. உடனடியாக ராஜ்யசபாவும் மறு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.சபை அலுவல்களுக்காக ஒரு நிமிடத்துக்கு, 2.5 லட்சம் ரூபாய் செலவிடப்படுகிறது. குளிர்கால கூட்டத் தொடரில் ராஜ்யசபாவில் எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக, 65 மணி நேரம், 15 நிமிடங்கள் சபை நடவடிக்கைகள் முடக்கப்பட்டன. இதன்படி சராசரியாக, 97.80 கோடி ரூபாய் வீணாகியுள்ளது. ராஜ்யசபாவில், 40 சதவீத அலுவல்கள் மட்டுமே நடந்துள்ளன.
எண்ணிக்கை அதிகரிப்பு
'ஒரே நாடு; ஒரே தேர்தல்' மசோதா தொடர்பான இரண்டு சட்ட திருத்தங்களை பார்லிமென்ட் கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பும் தீர்மானத்தை நிறைவேற்றும்படி, சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேஹ்வாலை நேற்று சபாநாயகர் ஓம்பிர்லா கேட்டுக் கொண்டார். அமளிக்கு மத்தியில் குரல் ஓட்டெடுப்பு வாயிலாக இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டுக் குழுவின் தலைவராக பா.ஜ., - எம்.பி., சவுத்ரி தேர்வு செய்யப்பட்டார். கூட்டுக் குழுவில் இடம்பெறும் உறுப்பினர்களின் எண்ணிக்கை 31ல் இருந்து 39 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 27 லோக்சபா எம்.பி.,க்கள், 12 ராஜ்யசபா எம்.பி.,க்கள் இதில் இடம் பெற்றுள்ளனர். அதிக கட்சிகளுக்கு பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்பதால் எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளது.
சபாநாயகர் எச்சரிக்கை
'பார்லிமென்ட் வளாகத்திற்குள் உறுப்பினர்கள் எவ்வித போராட்டங்களிலும், ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபடக்கூடாது. 'விதிகளை மதித்து நடக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்க நேரிடும்' என, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா நேற்று உறுப்பினர்களை எச்சரித்தார்.- நமது டில்லி நிருபர் -