உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெங்களூரில் ஆட்டோவில் கலக்கும் கள்ளக்குறிச்சி தமிழர் சூப்பர் மேன் என பட்டம் சூட்டிய பயணியர்

பெங்களூரில் ஆட்டோவில் கலக்கும் கள்ளக்குறிச்சி தமிழர் சூப்பர் மேன் என பட்டம் சூட்டிய பயணியர்

பெங்களூரில் சாதாரண ஆட்டோவை, ஸ்மார்ட் ஆட்டோவாக மாற்றி, 'சூப்பர்மேன்' என்ற அடைமொழியுடன், பெங்களூரில் வலம் வருகிறார் தமிழகத்தின் கடலுாரின் கள்ளக்குறிச்சியை சேர்ந்த மணிவேல், 33. பெங்களூரு விஜயநகரில் மனைவி இந்துமதி, மூன்றரை வயது மகன் லோகித்துடன் வசித்து வருகிறார்.நில பிரச்னையால் இவரின் பெற்றோர், உடன் பிறந்த சகோதரர்களுடன் விபரீத முடிவை எடுத்தனர். மணிவேல், அப்போது மூன்று மாத குழந்தையாக இருந்துள்ளார்.

பாட்டி வளர்ப்பு

இவரை, அம்மா வழி பாட்டி தான் எடுத்து வளர்த்து வந்துள்ளார். ஐந்தாம் வகுப்பு வரை துவக்க பள்ளியிலும், அதன் பின், 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை அசகலத்துாரில் விடுதியில் தங்கி உயர்நிலைப் பள்ளியிலும் படித்துள்ளார்.படிப்பு முடித்த பின், கட்டடவேலை உட்பட பல வேலைகளுக்கு கள்ளக்குறிச்சியிலிருந்து பெங்களூரு வந்தார். கிடைக்கும் வேலையை செய்து, ஆங்காங்கே தங்கி வந்தார். இப்படியே ஆண்டுகள் பல ஓடியது.எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, திருமணத்துக்கு பெண் பார்க்க முடிவு செய்தார். ஒரு இடத்தில் பெண்ணுக்கு அவரை பிடித்துவிட்டது. ஆனால், அவரின் குடும்பத்தினரோ, பையனுக்கு பெற்றோர் இல்லை என்று மறுத்துவிட்டனர்.ஆனால், அப்பெண்ணோ, திருமணம் செய்தால், அவரை தான் திருமணம் செய்துகொள்வேன் என்று உறுதியாக கூறினார். குடும்பத்தினரும் சரி என்றதால், எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இருவருக்கும் திருமணம் நடந்தது.இந்த வேளையில், டிரைவிங் லைசென்ஸ் எடுத்து வைத்துக் கொண்டார். இவர், குடும்பத்தினருடன் விஜயநகரில் வசித்து வந்தார். ஒரு இடத்தில் டிரைவராக பணிக்கு சேர்ந்தார். சம்பளம் ஒரு நாள் 550 ரூபாய், டிப்சாக, தினமும் 100 முதல் 200 ரூபாய் வரை கிடைத்து வந்தது. இது குடும்பத்திற்கு பற்றாக்குறையாக இருந்தது.இதனால், சொந்தமாக ஆட்டோ ஓட்ட முடிவு செய்தார். கடன் பெற்று ஆட்டோ வாங்கினார். மற்ற ஆட்டோக்கள் போன்று இல்லாமல், வித்தியாசமாக இருக்க வேண்டும் என கருதினார்.ஆட்டோவில் செல்வோரை ஈர்க்க தமிழில் 'தினமலர்', கன்னடத்தில் 'விஜயவாணி', ஆங்கிலத்தில் 'டைம்ஸ் ஆப் இந்தியா' என மூன்று மொழி நாளிதழ்கள், மொபைல் போன் சார்ஜர், குடிக்க பிசிலரி தண்ணீர், இலவச வைஃபை, பாட்டு கேட்க ஹெட்போன், பேன், புளூடூத் வசதிகள் வைத்துள்ளார்.சிலர், பணிக்கு செல்லும் அவசரத்தில் காலை உணவை, டிபன் பாக்சில் வைத்து கொண்டு, ஆட்டோவில் அமர்ந்தபடி சாப்பிட்டு சென்று உள்ளனர். இவர்களுக்கு வசதியாக மடக்கும் வகையில் டைனிங் டேபிள் வைத்துள்ளார்.

பிராண்ட் அம்பாசிடர்

தனது வாழ்க்கை குறித்து மணி வேல் பெருமையுடன் கூறியதாவது:ஆட்டோ ஓட்டும்போது காக்கி சட்டை, பேன்ட், பெயர் பேட்ஜ் அணிந்து கொள்வேன். இதை பார்த்த இப்பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள், காக்கி சட்டை, பெயர் பேட்ச் அணிந்துள்ளனர்.என்னை பற்றி அறிந்த 'நகர மீட்டர் ஆட்டோ' என்ற செயலி நிறுவனம், அந்நிறுவனத்தின் 'பிராண்ட் அம்பாசிடராக' என்னை நியமித்தனர். இந்த செயலியை இதுவரை 7,000 பேர், பதிவிறக்கம் செய்துள்ளனர். தினமும் 700 - 800 பேர் செயலியை பயன்படுத்துகின்றனர்.எனக்கு ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற உபாதைகள் இருப்பதால், ரத்த அழுத்தம் அளவிடும் கருவி வைத்துள்ளேன். இதை எனக்கு மட்டுமல்ல, என் ஆட்டோவில் பயணம் செய்யும் வயதானவர்கள், நடுத்தர வயதுடையவர்களிடம் கூறுவேன். அவர்கள் சரி என்றால், இலவசமாக ரத்த அழுத்தமும் சரிபார்க்கிறேன்.எனக்கு சிறுநீரகத்தில் கல் இருந்ததால், சரி செய்ய டயாலிசிஸ் மையத்துக்கு சிகிச்சைக்கு சென்று வருவேன். அப்போது டயாலிசிஸ் செய்தவர்கள், ஆட்டோவுக்காக நீண்ட நேரம் காத்திருப்பர். அவர்களுக்கு உதவி செய்வேன். கர்ப்பிணியரையும் இலவசமாக ஆட்டோவில் அழைத்துச் செல்வேன்.ஆட்டோ, மருத்துவ செலவுக்காக, பல வங்கிககள், லோன் செயலி மூலம், இதுவரை ஏழு லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கி உள்ளேன். இதில், ஒரு லட்சம் ரூபாய் கடன் செலுத்திவிட்டேன்.கடனை அடைக்க, தினமும் காலை 8:00 முதல் மதியம் 3:00 மணி வரை ஆட்டோ ஓட்டுவேன். நான்கு மணி நேரம் ஓய்வு எடுத்த பின், மீண்டும் இரவு 7:00 மணிக்கு துவங்கி, 11:00 மணி வரை ஆட்டோ ஓட்டுவேன்.எனது ஓய்வு நேரத்திலும் கூட, இன்ஸ்டாகிராமில் எனது என்ற கணக்கில், எனது ஆட்டோவில் பயணம் செய்த பயணியர் கூறிய கருத்துகள், ஆட்டோ குறித்த தகவல்களை பதிவேற்றம் செய்கிறேன். என் கணக்கை இதுவரை 10 லட்சம் பேர் பார்த்துள்ளனர்; 29,400 பேர் பின் தொடருகின்றனர்.வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்கள், பண்டிகை நாட்களில் நல்ல வருமானம் கிடைக்கும். மழை காலத்தில் சிறிது சிரமமாக இருக்கும். எனது தினசரி இலக்கு குறைந்தபட்சம் 1,000 ரூபாய் சம்பாதிக்க வேண்டும். இதன் மூலம், கடன், குடும்பத்தை நடத்துவதை பார்த்துக் கொள்ள வேண்டும்.பயணியரிடம் அதிக கட்டணம் வசூலிக்க மாட்டேன். இதற்காக பலரும், என் செயலை பாராட்டி உள்ளனர். பலரும் 'சூப்பர் மேன்' மணிவேல் என மகிழ்ச்சியுடன் கூறுவர்.இவ்வாறு அவர் கூறினார்.மணிவேலை பாராட்ட நினைப்போர், உதவ முன் வருவோர் 99025 22341 என்ற மொபைல் போனில் தொடர்பு கொள்ளலாம்.� மணிவேல் ஓட்டும் 'ஸ்மார்ட்' ஆட்டோ.� வாசகர்கள் படிக்க தமிழ், கன்னடம், ஆங்கில நாளிதழ்கள். � ரத்த அழுத்தம் பரிசோதிக்க கருவி, புளூடூத் ஹெட்போன், பிசிலரி தண்ணீர் பாட்டில்கள். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ