| ADDED : அக் 26, 2024 11:46 PM
லக்னோ: உத்தர பிரதேசத்தில் பயணியர் ரயிலை கவிழ்க்கும் நோக்கில், தண்டவாளத்தில் 6 கிலோ எடையிலான மரக்கட்டையை வைத்து மர்ம நபர்கள் சதிச் செயலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.சமீபகாலமாக, பயணியர் ரயில்களை குறிவைத்து பல்வேறு இடங்களில் மர்ம நபர்கள், தண்டவாளங்களில் சமையல் எரிவாயு சிலிண்டர், டெட்டனேட்டர்கள் வைத்து சதிச்செயலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், டில்லியில் இருந்து உத்தர பிரதேச தலைநகர் லக்னோ நோக்கி விரைவு ரயில், கடந்த 24ம் தேதி சென்றது. இந்த ரயில், உத்தர பிரதேசத்தின் மலிஹாபாத் பகுதி அருகே சென்ற போது தண்டவாளத்தில் பயங்கர சத்தம் கேட்டது. அதிர்ச்சி அடைந்த இன்ஜின் டிரைவர், உடனே ரயிலை நிறுத்தி தண்டவாளத்தில் சோதனையிட்டார். அங்கு 2 அடி நீளம் உள்ள மரக்கட்டை கிடந்தது. இதன் எடை 6 கிலோ என கூறப்படுகிறது. இதுகுறித்து ரயில் டிரைவர் அருகில் உள்ள ரயில் நிலையத்திற்கு தகவல் அளித்தார். இதையடுத்து, அந்த வழித்தடத்தில் வந்த ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதுகுறித்து வடக்கு ரயில்வே செய்தித் தொடர்பாளர் ஹிமான்சு சேகர் கூறுகையில், “ரயில் டிரைவர் அளித்த தகவலின்படி தண்டவாளத்தில் கிடந்த 6 கிலோ எடையிலான மரக்கட்டையை அகற்றினோம். ''ஏற்கனவே, பல்வேறு இடங்களில் ரயில்களை கவிழ்க்க சதித்திட்டம் தீட்டிய வழக்குகளை விசாரித்து வரும் என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு இந்த வழக்கையும் விசாரிக்கும்,” என்றார்.