உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ.7,200 கோடி நலத்திட்டங்கள் பீஹாரில் துவக்கினார் பிரதமர்

ரூ.7,200 கோடி நலத்திட்டங்கள் பீஹாரில் துவக்கினார் பிரதமர்

மோதிஹாரி: பீஹாரில், அம்ரித் பாரத் ரயில் சேவை உட்பட 7,200 கோடி ரூபாய் மதிப்பிலான நலத் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி நேற்று துவக்கி வைத்தார். பீஹாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, இந்தாண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில், அரசு நலத் திட்டங்களை துவக்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று பீஹார் சென்றார். மோதிஹாரி பகுதியில் நடந்த பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற மோடி, 7,200 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை துவக்கி வைத்தார்.அப்போது, பாட்னாவின் ராஜேந்திர நகர் - டில்லி, பாபுதம் மோதிஹாரி - டில்லி, தர்பங்கா - லக்னோ, மால்டா டவுன் - லக்னோ வழித்தடங்களில் செல்லும் நான்கு அமிர்த பாரத் ரயில் சேவையை பிரதமர் கொடியசைத்து துவக்கி வைத்தார். வடக்கு பீஹார் மற்றும் நாட்டின் பிற பகுதிகளுக்கு இடையேயான இணைப்பை வலுப்படுத்தவும், 4,080 கோடி ரூபாய் மதிப்பிலான தர்பங்கா- - நர்கதியாகஞ்ச் ரயில் பாதை திட்டத்தை இரட்டிப்பாக்கும் பணியும் துவக்கி வைக்கப்பட்டது. தேசிய கிராமப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ், பீஹாரில் உள்ள, 61,500 சுய உதவி குழுக்களுக்கான, 400 கோடி ரூபாய் நிதியை பிரதமர் வழங்கினார். பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டிய, 12,000 பயனாளர்களிடம், வீட்டு சாவியை மோடி ஒப்படைத்தார். அந்த திட்டத்தின் வாயிலாக, 40,000 பேர் பயன்பெறும் வகையில், 400 கோடி ரூபாய் நிதியுதவியையும் அவர் வழங்கினார். நிகழ்ச்சியில் பீஹார் கவர்னர் ஆரிப் முஹமது கான், முதல்வர் நிதிஷ்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பின், மேற்கு வங்கம் சென்ற பிரதமர் மோடி, 5,400 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களை துவங்கி வைத்தார்.

அரசியல் மட்டுமே செய்தனர்

நாடு முழுதும் வேலைவாய்ப்புகளை வழங்குவதற்காக மத்திய அரசு 1 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய தயாராக உள்ளது. ஆனால், ஏழை மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது பற்றி ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியால் நினைத்துப் பார்க்க முடியாது. அவர்கள் ஏழை மக்களின் நிலத்தை அபகரித்தனர். பீஹாரில், காங்கிரசுடன் இணைந்து அக்கட்சி நடத்திய ஆட்சியில், மாநிலத்தின் வளர்ச்சியில் மிகப்பெரிய குறைபாடு இருந்தது. ஏழைகளின் முன்னேற்றம் பற்றி அக்கட்சியினர் ஒருபோதும் சிந்திக்கவில்லை. ஏழைகள் மற்றும் சமூக ரீதியாக ஒதுக்கப்பட்டவர்களின் பெயரில் அவர்கள் அரசியல் மட்டுமே செய்தனர்.

நரேந்திர மோடி, பிரதமர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி