வாசகர்கள் கருத்துகள் ( 1 )
பத்திரிகை சுதந்திரத்தை தடுக்கக்கூடாது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
சண்டிகர்: பஞ்சாபில் தினசரி பத்திரிகை கொண்டு செல்லும் வாகனங்களில் போலீசார் சோதனை நடத்தினர். இதனால், பத்திரிகை விநியோகம் தாமதமானது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள எதிர்க்கட்சிகள், ' மாநிலத்தில் அறிவிக்கப்படாத அவசர நிலை நிலவுகிறது. பத்திரிகைகள் சென்சாருக்கு உள்ளாவதாக குற்றம்சாட்டியுள்ளன.
குற்றச்சாட்டு
டில்லி முன்னாள் முதல்வரான அரவிந்த் கெஜ்ரிவால், டில்லி சட்டசபைத் தேர்தலில் தோல்வி அடைந்த பின், பஞ்சாப் மாநிலத்திலேயே முகாமிட்டுள்ளார். தற்போது அங்கு நடக்கும் இடைத்தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். அவருக்கு ஏழு நட்சத்திர அந்தஸ்து கொண்ட ஆடம்பர பங்களாவை பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஒதுக்கியுள்ளார். பஞ்சாப் மக்களின் வரிப்பணத்தில் கெஜ்ரிவால் ஆடம்பர பங்களாவில் வசிக்கிறார் என பாஜ குற்றம்சாட்டியது. இதனை பகவந்த் மான் மறுத்துவிட்டார். ஆதாரமில்லாத குற்றச்சாட்டு எனத் தெரிவித்துள்ளார்.சோதனை
இந்நிலையில் நேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை தினசரி பத்திரிகை நாளிதழ்களை கொண்டு வந்த வாகனங்களை போலீசார் சோதனை நடத்தினர். இதனால், நாளிதழ்கள் விநியோகம் தாமதமானது. இதனையடுத்து மாநிலத்தில் அறிவிக்கப்படாத அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. பத்திரிகைகள் சென்சாருக்கு உள்ளாவதாக பாஜ, காங்கிரஸ், சிரோன்மணி அகாலிதளம் கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் அம்ரீந்தர் சிங் ராஜா வெளியிட்ட அறிக்கையில், ' பஞ்சாப் முழுவதும் பத்திரிகைகளை கொண்டு சென்ற வாகனங்களை குறிவைத்து நடத்தப்பட்ட சோதனை பத்திரிகை சுதந்திரம் மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது' எனக்கூறியுள்ளார்.சிரோன்மணி அகாலிதளம் வெளியிட்ட அறிக்கையில், ' மீடியா சுதந்திரத்துக்கு நாங்கள் எப்போதும் ஆதரவாக இருப்போம். இன்று நடந்ததை போல் தினமும் நாளிதழ்களை பறித்து மீடியா குரல்களை ஒடுக்க நினைக்கின்றனர். உண்மை மக்களிடம் சென்றடைவதை தடுக்கும் இத்தகைய முயற்சியை நாங்கள் கடுமையாக எதிர்ப்போம் எனக்கூறியுள்ளார்.பாஜ., செயல் தலைவர் அஸ்வினி சர்மா கூறுகையில், பஞ்சாபில் அறிவிக்கப்படாத அவசர நிலையை முதல்வர் பக்வந்த் மான் அமல்படுத்தியுள்ளார். கெஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்ட ஏழு நட்சத்திர அந்தஸ்து கொண்ட பங்களா குறித்த செய்தி வெளியானதும், ஆம் ஆத்மி அரசு மீடியாக்கள் மீது தாக்குதல் நடத்துகிறது எனக்கூறியுள்ளார்.கண்டனம்
தினசரி பத்திரிகைகளுடன் சென்ற வாகனங்களை போலீசார் நிறுத்தியதற்கு மாநில பிரஸ் கவுன்சில் கண்டனம் தெரிவித்தது. குருதாஸ்பூர், பாட்டியாலா, அமிர்தசரஸ், ஹோஷியாப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நாளிதழ்கள் தாமதமானது அல்லது தடைபட்டது என தகவல் தெரிவித்தது. இது போன்ற நடவடிக்கைகள் பத்திரிகை சுதந்திரம் மீதான தாக்குதல் என தெரிவித்துள்ளது. விளக்கம்
எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சிக்க துவங்கியதை தொடர்ந்து மாநில போலீசார் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பாகிஸ்தானின் உளவுத்துறையான ஐஎஸ்ஐ, இந்தியாவுக்கு எதிராக மறைமுகப் போரை துவக்கியுள்ளது. இதன் தாக்கம் பஞ்சாபில் உள்ளது. போதைமருந்துகள், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் சர்வதேச எல்லையில் இருந்து டிரோன் உள்ளிட்ட பல வகைகளில் கடத்தி வரப்படுகின்றன. ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு, தேச விரோத சக்திகள் தங்களின் நடவடிக்கையை மாற்றி யுள்ளன. பொது மக்களுக்கு குறைந்தபட்ச சிரமம் ஏற்படுவதை உறுதி செய்ய, மாநிலத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் கவனத்துடன் மேற்கொள்ளப்படும். உளவுத்துறை தகவலின் பேரில் இச்சோதனை நடந்தது. குறிப்பிட்ட பகுதிகளில், கெசடட் அதிகாரி மேற்பார்வையில் சோதனை நடத்தப்பட்டது எனத் தெரிவித்துள்ளது.
பத்திரிகை சுதந்திரத்தை தடுக்கக்கூடாது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.