பிரதமர் மோடி 22ம் தேதி சவுதி அரேபியா பயணம்
புதுடில்லி: பிரதமர் மோடி வரும், 22ம் தேதி சவுதி அரேபியாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். இரண்டு நாட்கள் பயணமாக செல்லும் அவர், பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுகிறார்.மேற்காசிய நாடான சவுதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மான், 2023 செப்டம்பரில் நடந்த, 'ஜி - 20' மாநாட்டில் பங்கேற்க டில்லி வந்தார். அப்போது சவுதிக்கு வருமாறு பிரதமர் மோடிக்கு அவர் அழைப்பு விடுத்திருந்தார். இதையடுத்து வரும் 22ம் தேதி பிரதமர் சவுதி செல்ல உள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன் விபரம்:பிரதமர் மோடி சவுதி அரேபியாவில், 22 மற்றும் 23ம் தேதி என இருநாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பின், மோடி சவுதி செல்வது இது முதல் முறை. முன்னதாக, 2016 மற்றும் 2019ல் அந்நாட்டுக்கு சென்றுள்ளார்.சமூக - கலாசாரம் மற்றும் வர்த்தகத்தில் நீண்ட கால நட்பு நாடுகளான இந்தியாவும் சவுதி அரேபியாவும் அரசியல், வர்த்தகம், சுகாதாரம், எரிசக்தி போன்ற பல்வேறு துறைகளில் உறவுகளை வலுப்படுத்த இந்த பயணம் உதவும். இரு நாட்டு தலைவர்கள் சந்திப்பின்போது முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.