ஸ்ரீ சத்ய சாய்பாபா நுாற்றாண்டு விழா அன்பு, சேவைக்கான உலகத்திருவிழா புட்டபர்த்தியில் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
புட்டபர்த்தி: “ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் போதனைகளும், சேவையும் உலகம் முழுதும் உள்ள லட்சக்கணக்கானவர்களை தொடர்ந்து வழி நடத்தி வருகிறது,” என, பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டிஉள்ளார். ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் பிறந்த நாள் நுாற்றாண்டு விழா, ஆந்திராவின் புட்டபர்த்தியில் நேற்று விமரிசையாக நடந்தது. இதில், பங்கேற்பதற்காக புட்டபர்த்தி வந்த பிரதமர் மோடி, ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் மகா சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் நடந்த விழாவில், ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் வாழ்க்கை, போதனைகள் மற்றும் பாரம்பரியத்தை கவுரவிக்கும் விதமாக நுாற்றாண்டு நினைவாக, 100 ரூபாய் சிறப்பு நாணயத்தையும், தபால் தலை தொகுப்பையும் பிரதமர் வெளியிட்டார். 140 நாடுகள் அப்போது அவர் பேசியதாவது: ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் இந்த பிறந்த நாள் நுாற்றாண்டு விழா வெறும் கொண்டாட்டம் மட்டுமல்ல; தெய்வீக ஆசீர்வாதம். ஸ்ரீ சத்ய சாய்பாபா இப்போது நம்முடன் இல்லை என்றாலும், அவரது போதனைகள் மற்றும் அன்பு, சேவை மனப்பான்மை ஆகியவை உலகெங்கும் உள்ள கோடிக்கணக்கானவர்களை வழி நடத்துகிறது. உலகில் உள்ள, 140 நாடுகளில், லட்சக்கணக்கான ஸ்ரீ சத்ய சாய்பாபா பக்தர்கள் புதிய ஒளி மற்றும் திசையைப் பெற்று முன்னேறி வருகின்றனர். மனித வாழ்க்கையில் சேவையை மிகவும் முக்கியமாக கருதிய சாய்பாபாவின் வாழ்க்கை, 'வசுதைவ குடும்பகம்' அதாவது உலகமே ஒரு குடும்பம் என்ற லட்சியத்தை நோக்கி இருந்தது. எனவே, இந்த பிறந்த நாள் நுாற்றாண்டு விழா, உலகளாவிய அன்பு, அமைதி மற்றும் சேவையின் ஒரு பெரிய திரு விழாவாக மாறியுள்ளது. 'அனைவரையும் நேசி, அனைவருக்கும் சேவை செய்' என்பது சாய்பாபாவின் வார்த்தைகள். அவரைப் பொறுத்தவரை சேவை என்பது செயலில் உள்ள அன்பு. சான்று சாய்பாபா, எந்த கோட்பாட்டையும், சித்தாந்தத்தையும் திணிக்கவில்லை. மாறாக, ஏழைகளுக்கு உதவவும், அவர்களின் துன்பத்தை குறைக்கவும் பாடுபட்டார். அவரால் உருவாக்கப்பட்ட ஸ்ரீ சத்ய சாய்பாபா அறக்கட்டளை நிர்வாகிகளும், பாபாவின் தொண்டர்களும் அதை பின்பற்றி வருகின்றனர். கல்வி, சுகாதாரம், கிராமப்புற மேம்பாடு மற்றும் பல துறைகளில் சத்ய சாய்பாபாவின் நிறுவனங்கள், பாபாவின் தத்துவத்தின் உயிருள்ள சான்றாக விளங்குகின்றன. குஜராத்தில் பூகம்பம் பாதித்த பகுதியிலும், ஆந்திராவின் ராயலசீமாவில் குடிநீர் தட்டுப்பாட்டின் போதும், ஒடிசா வெள்ளத்தின் போதும், பாபாவின் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆற்றிய பணிகள் அளப்பரியது. ஸ்ரீ சத்ய சாய்பாபா அறக்கட்டளையினர் செல்வமகள் திட்டத்தின் கீழ், 20,000 கணக்குகளை துவங்கியுள்ளனர். இந்தத் திட்டத்தின் கீழ், இதுவரை 4 கோடிக்கும் மேற்பட்ட கணக்குகள் துவங்கப்பட்டு, 3.25 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக 'டிபாசிட்' செய்யப்பட்டுள்ளன. முக்கிய ஆதாரம் உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் பின்பற்றுவது போல், 'கவு தான்' திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு இந்த அறக்கட்டளை வாயிலாக, 100 பசுக்கள் தானமாக வழங்கப்பட்டுள்ளன. இதனால், பசுவின் சந்ததி பெருகி, ஏராளமான விவசாய குடும்பங்கள் செழிப்படைந்து வருகின்றன. கடந்த 2014ல், சமூக பாதுகாப்பு திட்டங்களின் கீழ், 25 கோடி மக்கள் இருந்தனர். இன்று இந்த எண்ணிக்கை 100 கோடியை எட்டியுள்ளது. வளர்ந்த இந்தியாவை நோக்கி நாடு முன்னேறி வருகிறது. ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் நுாற்றாண்டு விழா, இந்த பயணத்தில் உத்வேகத்தின் முக்கிய ஆதாரமாகும். இவ்வாறு அவர் பேசினார். ஸ்ரீ சத்ய சாய்பாபா நுாற்றாண்டு நிகழ்ச்சியில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண், முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், நடிகை ஐஸ்வர்யா ராய், ஸ்ரீ சத்ய சாய் மத்திய அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ரத்னாகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.