பெலகாவி காங்., மாநாடு ராகுல் பங்கேற்பதாக தகவல்
பெலகாவி: ''பெலகாவியில் வரும் 21ம் தேதி நடக்கும், காங்கிரஸ் மாநாட்டில் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பங்கேற்கிறார்,'' என்று, பொதுப்பணி அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி கூறினார்.பெலகாவியில் நேற்று அவர் அளித்த பேட்டி:பெலகாவியில் ஜெய் பாபு, ஜெய் பீம், ஜெய் அரசியலமைப்பு என்ற தலைப்பில் வரும் 21ம் தேதி காங்கிரஸ் மாநாடு நடக்கிறது. கடந்த மாதமே இந்த மாநாட்டை நடத்தி இருக்க வேண்டும். முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மறைவால், ஒத்திவைக்கப்பட்டு தற்போது நடக்க உள்ளது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் 2 லட்சம் பேர் கலந்து கொள்வர். எங்கள் கட்சியின் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் பங்கேற்கின்றனர்.தலைவர் பதவியில் இருந்து சிவகுமாரை மாற்ற வேண்டும் என்று நான் சொல்லவில்லை. இதுதொடர்பாக முடிவு எடுக்க வேண்டியது கட்சி மேலிடம். பொது இடத்தில் கட்சி தொடர்பான விஷயங்களை பேச கூடாது என்று எங்களுக்கு நோட்டீஸ் எதுவும் கொடுக்கப்படவில்லை.எங்கள் அறிக்கையால் கட்சிக்கு தர்மசங்கடம் ஏற்படாதவாறு பார்த்து கொள்வோம். பெலகாவி காங்கிரஸ் பவன் கட்ட ஒருவர் மட்டும் பணம் கொடுக்கவில்லை. பல தலைவர்கள் தங்களின் பங்களிப்பு அளித்து உள்ளனர். நாம் எவ்வளவு மென்மையாக இருக்கிறோமோ அந்த அளவு நமக்கு நல்லது. வன்முறையில் ஈடுபடுவது சரியல்ல. திறமையை பார்த்து கட்சி பதவி வழங்கப்படுகிறது என்று சிவகுமார் கூறியது உண்மை தான்.இவ்வாறு அவர் கூறினார்.