வயநாடு : கேரளாவில் வனவிலங்குகள் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்க சென்ற காங்கிரஸ் எம்.பி., ராகுலை சந்தித்த அப்பகுதி மக்கள், காட்டு விலங்குகளிடம் இருந்து காப்பாற்றும்படி கதறி அழுதனர்.கேரளாவின் வயநாட்டில், கடந்த சில மாதங்களாக குடியிருப்பு பகுதி களில் புகுந்து மனித வேட்டையாடி வரும் வன விலங்குகளால், அப்பகுதியினர் அச்சத்தில் உறைந்துள்ளனர். இங்கு, கடந்த ஒரு மாதத்தில் மட்டும், யானை மற்றும் புலிகள் தாக்கி, நான்கு பேர் உயிரிழந்துஉள்ளனர்.கடந்த மாதம் 31-ம் தேதி, யானை தாக்கியதில் லட்சுமணன், 65, என்பவரும், கடந்த 10ல் மானந்தவாடியில் அஜீஷ், 42, என்பவரும் உயிரிழந்தனர். கிராமங்களில் புகுந்த யானையை விரட்டும் பணியில் இருந்த வன ஊழியரும், சுற்றுலா வழிகாட்டியுமான பால், 50, என்பவரும் யானை தாக்கி உயிரிழந்தார்.சமீபத்தில், புலி தாக்கி பிரதீஷ் என்பவர் பலியானார். இதையடுத்து, வன விலங்குகளை காட்டுக்குள் விரட்ட உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, வயநாடு மக்கள் முழு அடைப்பு உள்ளிட்ட போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது.இந்நிலையில், வயநாடு தொகுதியின் எம்.பி.,யாக உள்ள ராகுல், உத்தர பிரதேசத்தில் சென்று கொண்டிருந்த பாரத் ஒற்றுமை நியாய யாத்திரையை தற்காலிகமாக நிறுத்திவிட்டு, நேற்று முன்தினம் கேரளா விரைந்தார்.வயநாட்டில் விலங்குகள் தாக்கி உயிரிழந்த அஜீஷ், பால், பிரதீஷ் ஆகியோரின் வீடுகளுக்கு சென்ற அவர், அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.பல இடங்களில், வழியில் அவர் காரை வழிமறித்த வயநாடு மக்கள், வன விலங்குகளால் நாளுக்கு நாள் ஆபத்து அதிகரித்து வருவதால், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி கதறி அழுதனர்.