பா.ஜ., முனிரத்னா மீது பாய்ந்தது பலாத்கார வழக்கு பழைய வழக்கில் ஜாமின் கிடைத்தும் நிம்மதி இல்லை
பெங்களூரு: ஒப்பந்ததாரரை மிரட்டிய வழக்கில் கைதான பா.ஜ., - எம்.எல்.ஏ., முனிரத்னா மீது, பலாத்கார வழக்கு பதிவாகி உள்ளது.பெங்களூரு ஆர்.ஆர்.நகர் தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., முனிரத்னா, 60. மாநகராட்சி ஒப்பந்ததாரர் சலுவராஜு, முன்னாள் கவுன்சிலர் வேலு நாயக்கரின் சமுதாய பெயரை சொல்லி திட்டிய வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டாார்.நேற்று தான் இந்த வழக்கில் அவருக்கு ஜாமின் கிடைத்தது. இன்று, சிறையில் இருந்து விடுதலையாவார் என தெரிகிறது.இந்நிலையில், இவர் மீது நேற்று முன்தினம் இரவு, ராம்நகர் மாவட்டம், ககலிபுரா போலீஸ் நிலையத்தில் 40 வயது பெண் ஒருவர், பலாத்கார புகார் அளித்தார். புகாரில் கூறியிருப்பதாவது: நான், சமூக சேவகியாக உள்ளேன். கடந்த 2020ல் கொரோனா பரவல் அதிகமாக இருந்த போது, ஆர்.ஆர்.நகர் தொகுதி மக்களுக்கு இலவசமாக, முக கவசம் வினியோகம் செய்தேன். இதுபற்றி அறிந்த ஆர்.ஆர்.நகர் - எம்.எல்.ஏ., முனிரத்னா எனக்கு, 'வாட்ஸாப்'பில் மெசேஜ் அனுப்பினார். 10 முறை
'ஹலோ லீடர், நான் ஆர்.ஆர்.நகர் எம்.எல்.ஏ., முனிரத்னா. எனது தொகுதி மக்களுக்கு முக கவசம் கொடுத்தது பற்றி அறிந்தேன். உங்களை பற்றி நிறைய கேள்விபட்டு உள்ளேன். நேரில் சந்திக்க வேண்டும்' என தெரிவித்திருந்தார்.'மறுநாள், ஜெ.பி.பார்க்கில் உள்ள முனிரத்னாவுக்கு சொந்தமான குடோனில், அவரை சந்தித்து பேசினேன். பின், இருவரும் அடிக்கடி வாட்ஸாப் காலில் பேசினோம். இரண்டு ஆண்டுகளுக்கு முன், ஒரு நாள் நான் குளிக்க சென்றேன். அப்போது எனக்கு 10 முறை, முனிரத்னா வாட்ஸாப் வீடியோ கால் செய்தார்.குளித்துவிட்டு வந்து அவரிடம், ஆடியோ கால் பேசினேன். 'வீடியோ கால்' செய்கிறேன்; நிர்வாணமாக இருக்க வேண்டும்' என்று என்னிடம் கேட்டார். நான் மறுத்து விட்டேன்.இது நடந்து இரண்டு நாட்களுக்கு பின், முனிரத்னா அவரது குடோனுக்கு வரும்படி என்னை அழைத்தார். நானும் சென்றேன். குடோனின் 2வது மாடியில் உள்ள அறைக்கு அழைத்து சென்றார். என்னை தவறாக தொட்டார். நான் எதிர்ப்பு தெரிவித்தேன்.'அரசியலில் முன்னேற வேண்டும் என்றால், இது எல்லாம் சகஜம்' என்று, என்னிடம் கூறினார். ஆனாலும் நான் சம்மதிக்கவில்லை. அவர் என்னை விடவில்லை. 'உன்னை பற்றி அவதுாறு பரப்புவேன்' என்று என்னை மிரட்டி பலாத்காரம் செய்தார்.'இது பற்றி வெளியே சொல்ல கூடாது. அப்படி சொன்னால் உன்னை பலாத்காரம் செய்த வீடியோவை, எடிட்டிங் செய்து, சமூக வலைதளங்களில் வெளியிடுவேன்' என்றார். அவரது காலில் விழுந்து கெஞ்சினேன். பின், சிலரை மிரட்டி ஹனிடிராப் செய்வதற்கு என்னை பயன்படுத்தினார். 6 பேருக்கு தொடர்பு
ககலிபுராவில் உள்ள சொகுசு விடுதியில் வைத்தும், என்னை பலாத்காரம் செய்தார். என்னை மிரட்டியதில் முனிரத்னா ஆதரவாளர்கள் விஜயகுமார், கிரண்குமார், சுதாகர், லோகித் கவுடா, மஞ்சுநாத், லோகி ஆகிய ஆறு பேருக்கும் தொடர்பு உள்ளது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு புகாரில் கூறப்பட்டு இருந்தது.புகாரின்படி, முனிரத்னா உட்பட ஏழு பேர் மீதும், ஒன்பது பிரிவுகளில் வழக்கு பதிவானது.புகார் அளித்த பெண்ணிடம், ராம்நகர் டி.எஸ்.பி., தினகர் ஷெட்டி நேற்று அதிகாலை 2:00 மணி வரை, விசாரணை நடத்தினார். நேற்று காலை 9:00 மணிக்கு மீண்டும் அப்பெண் விசாரணைக்கு ஆஜரானார்.பின், அவருக்கு ஆர்.ஆர்.நகரில் உள்ள மருத்துவமனையில், மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதன்பின் முனிரத்னாவின் குடோன், ககலிபுராவில் உள்ள விடுதிக்கு, அப்பெண்ணை அழைத்து சென்று போலீசார் விசாரித்தனர்.
மீண்டும் சிறை?
ஏற்கனவே, பெங்களூரு மாநகராட்சி ஒப்பந்ததாரர் சலுவராஜு, முன்னாள் கவுன்சிலர் வேலு நாயக்கரின் சமுதாய பெயரை சொல்லி திட்டிய வழக்கில், முனிரத்னா கைது செய்யப்பட்டு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். சலுவராஜுவை திட்டிய வழக்கில், நேற்று முன்தினம் முனிரத்னாவுக்கு நிபந்தனை ஜாமின் கிடைத்தது.வேலு நாயக்கரை திட்டிய வழக்கில், நேற்று விசாரணை நடந்தது. முனிரத்னா தரப்பில் ஆஜரான வக்கீல் அசோக் ஹாரனஹள்ளி, ''எனது மனுதாரரை கைது செய்ததில் விதிமுறை பின்பற்றவில்லை. திருப்பதிக்கு சென்றவரை வழியில் மடக்கி கைது செய்து உள்ளனர். விசாரணைக்கு ஆஜராக அவருக்கு நோட்டீசும் கொடுக்கவில்லை,'' என்று வாதிட்டார்.அரசு வக்கீல் பிரதீப்குமார் தங்கள் வாதங்களை முன்வைத்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, முனிரத்னாவுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கினார். 'சாட்சிகளை மிரட்ட கூடாது. 2 லட்சம் ரூபாய் பிணைய தொகை செலுத்த வேண்டும்' என்று, நிபந்தனை விதித்தார்.ஜாமின் உத்தரவுப்படி, முனிரத்னா இன்று சிறையில் இருந்து விடுதலையாவார் என எதிர்பார்த்த நிலையில், பலாத்கார வழக்கில் அவரை கைது செய்ய போலீசார் காத்திருக்கின்றனர்.