உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நண்பருக்காக மனம் உருகிய ரெட்டி பா.ஜ., வலைக்குள் இழுத்த அமித் ஷா

நண்பருக்காக மனம் உருகிய ரெட்டி பா.ஜ., வலைக்குள் இழுத்த அமித் ஷா

கல்யாண ராஜ்ய பிரகதி கட்சி எம்.எல்.ஏ., ஜனார்த்தன ரெட்டி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியதால், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.பா.ஜ.,வில் செல்வாக்கு மிக்க தலைவராக வலம் வந்தவர் ஜனார்த்தன ரெட்டி. கர்நாடகாவில் முதன் முறையாக பா.ஜ.,வை ஆட்சியில் அமர்த்தியதில், இவரது பங்களிப்பு அதிகம். பா.ஜ., அரசில் அமைச்சராகவும் இருந்தார்.

பல ஆண்டு சிறை

சட்டவிரோத சுரங்க தொழில் வழக்கில் கைதான இவர், ஆண்டு கணக்கில் சிறையில் இருந்தார். அதன்பின் உச்ச நீதிமன்றத்தில் ஜாமின் பெற்று விடுதலை ஆனார். சிறிது காலம் திரை மறைவில் இருந்த இவர், மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபட்டார். பா.ஜ.,வில் இணையவும் ஆர்வமாக இருந்தார். ஆனால் கட்சி பொருட்படுத்தவில்லை. 2023 சட்டசபை தேர்தலில் 'சீட்' எதிர்பார்த்தார். கிடைக்கவில்லை.எனவே 'கல்யாண ராஜ்ய பிரகதி' என்ற பெயரில், தனிக்கட்சி துவங்கினார். கொப்பாலின், கங்காவதி தொகுதியில் களமிறங்கினார். 50க்கும் மேற்பட்ட தொகுதிகளில், தன் கட்சி சார்பில் வேட்பாளர்களை நிறுத்தினார். இவர் மட்டுமே வெற்றி பெற்றார். ஆனால் பல தொகுதிகளில், பா.ஜ., வேட்பாளர்களின் தோல்விக்கு, இவரது கட்சியினர் காரணமாக இருந்தனர்.

பா.ஜ., ஈர்ப்பு

லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில், ஜனார்த்தன ரெட்டியை பா.ஜ.,வுக்கு இழுக்க முயற்சி நடக்கிறது. லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வுடன் கூட்டணி வைக்க தயாராக இருப்பதாகவும், ஆனால் எந்த காரணத்தை கொண்டும் அந்த கட்சியில் இணைய மாட்டேன் எனவும், கூறி வந்தார். ஆனால், ராஜ்யசபா தேர்தலில் இவர் காங்கிரசுக்கு ஆதரவாக ஓட்டு போட்டார். இந்நிலையில், டில்லிக்கு சென்ற ஜனார்த்தன ரெட்டி, நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியது, அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. லோக்சபா தேர்தலில் தன் வேட்பாளர்களை களமிறக்காமல், பா.ஜ.,வுக்கு ஆதரவளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.இவர் கோலோச்சிய பல்லாரி தொகுதியில், அவரது உயிர் நண்பரான ஸ்ரீராமுலு களம் இறக்கப்பட்டுள்ளார். அவர் யோசனையின்படி, அமித் ஷாவை சந்தித்ததாக தெரிகிறது. அமித் ஷாவும், தேர்தலை மனதில் கொண்டு, ஜனார்த்தன ரெட்டியை சந்திக்க உடனடியாக அப்பாயின்மென்ட் கொடுத்ததாக டில்லி தகவல்கள் கூறுகின்றன.

உத்தரவாதம்

இதனால், மனம் மாறிய ஜனார்த்தனரெட்டி, பல்லாரி, கொப்பால் தொகுதியில் பா.ஜ.,வுக்காக தீவிர பிரசாரத்தில் ஈடுபடுவதாக உத்தரவாதம் அளித்துள்ளாராம். இதற்கு பரிசாக பா.ஜ., தரப்பில் பெரிய பரிசு அவருக்கு கொடுக்கப்படலாம்- நமது நிருபர் -.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி