உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பொய்யால் கோட்டை கட்டுபவர் ரெட்டி

பொய்யால் கோட்டை கட்டுபவர் ரெட்டி

பல்லாரி: ''பொய்யால் கோட்டை கட்டுபவர் ஜனார்த்தன ரெட்டி,'' என, பா.ஜ., முன்னாள் அமைச்சர் ஸ்ரீராமுலு சாடினார்.பல்லாரியில் ஸ்ரீராமுலு நேற்று அளித்த பேட்டி: எங்கள் கட்சியின் மேலிட பொறுப்பாளர் ராதாமோகன் தாஸ் தலைமையில், கோர் கமிட்டி கூட்டம் துவங்கியது. கூட்டம் துவங்கியதும் பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அடுத்த தேர்தலில் கட்சியை ஆட்சிக்கு கொண்டு வருவது பற்றி பேசினோம். அப்போது திடீரென ராதாமோகன் தாஸ் அகர்வால், என்னை ஒரு மாதிரி கீழ்தரமாக பார்த்தார். 'சண்டூர் தோல்விக்கு ஸ்ரீராமுலு நேரடி காரணம்' என்றார். இதனால் நான் அதிர்ச்சி அடைந்தேன். கடைசி நாள் வரை வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்தேன். ஏற்கனவே இரண்டு தேர்தலில் தோற்று விட்டேன். இப்போது என் மீது நீங்கள் கூறும் குற்றச்சாட்டு மனதிற்கு வேதனையாக உள்ளது என்று கூறினேன்.

கருத்து வாபஸ்

ஆனால் நான் கூறியதை கேட்காமல், ராதாமோகன் தாஸ் அகர்வால் ஹிந்தியில் ஏதோ பேசி கொண்டே இருந்தார். என்னை பார்த்து டபுள் கேம் ஆடுகிறீர்கள் என்று கூறினார். விஜயேந்திரா தவிர மற்றவர்கள் அனைவரும் எனக்கு ஆதரவாக பேசினர்.குறிப்பாக சதானந்த கவுடா, ராதாமோகன் தாஸ் அகர்வாலிடம், 'இடைத்தேர்தல் தோல்வி குறித்து எனது தலைமையில் அமைக்கப்பட்ட குழு விசாரிக்கிறது. நான் இன்னும் அறிக்கை தாக்கல் செய்யவில்லை. அதற்குள் ஒருவர் மீது பழிபோடுவது ஏன்' என்று கோபமாக கேட்டார். இதனால் மேலிட பொறுப்பாளர் எனது கருத்தை வாபஸ் பெறுகிறேன் என்று கூறினார்.அப்போது நான் விஜயேந்திராவை பார்த்து, 'எனக்கு ஆதரவாக ஏன் பேசவில்லை' என்று கேட்டேன். நான் என்ன செய்வது என்று கூறி கையை விரித்தார். ஜனார்த்தன ரெட்டி, பங்காரு ஹனுமந்த் பேச்சை கேட்டு, மேலிட பொறுப்பாளர் என்னை பற்றி பேசினார் என்று எனக்கு நன்கு தெரியும்.ஜனார்த்தன ரெட்டியால் நான் அரசியலில் வளரவில்லை. எனது குடும்பம் முன்பு இருந்தே அரசியலில் இருந்தது. கொலை செய்யப்பட்ட எனது மாமா ரயில்வே பாபு, காங்கிரசில் இருந்தவர். எம்.எல்.ஏ., வேட்பாளர் ஆகும் முயற்சியிலும் இருந்தார். எனது ரத்தத்தில் அரசியல் ஓடுகிறது. ஏழைகளுக்காக அரசியல் செய்து உள்ளேன். போராட்டத்தின் மூலம் மேலே வந்தவன் என்று அனைவருக்கும் தெரியும்.

சித்துவுக்கு போட்டி

பா.ஜ., வரலாறு சிறப்புமிக்க கட்சி. கடந்த 2014 லோக்சபா தேர்தலில் பல்லாரியில் வெற்றி பெற்றேன். பிரதமர் மோடி தலைமையில் எம்.பி.,யாக பணியாற்றினேன். 2018 சட்டசபை தேர்தலின் போது, மாநில அரசியலுக்கு செல்லும்படி எனக்கு மேலிடம் உத்தரவிட்டது.வால்மீகி சமூகத்தை சேர்ந்த எனக்கு பாதாமி, மொளகால்மூரு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தனர். பாதாமியில் எனது சமூக ஓட்டுகள் குறைவு. இதனால், அங்கு தோல்வி அடைய நேர்ந்தது. ஆனாலும், சித்தராமையாவுக்கு கடும் போட்டி கொடுத்தேன்.குஜராத் முதல்வராக இருந்தபோதே, பிரதமர் மோடி என் மீது தனிப்பட்ட அன்பு வைத்து உள்ளார். மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், நிதின் கட்கரி, பிரகாஷ் ஜாவடேகர் ஆகியோரும், என் மீது அன்பு காட்டினர். ஒருவேளை நான் கட்சியை விட்டு விலகினால், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்களிடம் சொல்லிவிட்டு தான் விலகுவேன்.காங்கிரசுக்கு செல்லும் அவசியம் எனக்கு ஏற்படவில்லை. சதீஷ், காங்கிரசில் வால்மீகி சமூக தலைவராக உள்ளார். நான் எனது கட்சியில் உள்ளேன். நான் அந்த கட்சிக்கு சென்றால் ஜீரோ ஆகிவிடுவேன். ஆனால் என்னை வைத்து சதீஷை முடிக்க சிவகுமார் முயற்சி செய்வதாக, ஜனார்த்தன ரெட்டி கூறுகிறார். பொய்யால் கோட்டை கட்டுவதில் அவர் வல்லவர்.எம்.எல்.ஏ., - எம்.பி., அமைச்சர் என பல பதவிகளில் இருந்து உள்ளேன். என்னை விட வயதில் இளையவர்களுக்கு கூட, மாநில தலைவர் பதவி கிடைக்கிறது. எனக்கு ஏன் தலைவர் பதவி கிடைக்க கூடாது. கட்சி எனக்கு தாய் போன்றது. ஒருபோதும் துரோகம் செய்ய மாட்டேன்.ஜனார்த்தன ரெட்டி பல்லாரிக்கு வர உச்ச நீதிமன்றம் தடை விதித்த போது, பல்லாரியில் கட்சியை வளர்த்து உள்ளேன். நான் ஆறு முறை எம்.எல்.ஏ.,. ரெட்டி சிறையில் இருந்த போது, அவரை வெளியில் எடுக்க நிறைய முயற்சி செய்து உள்ளேன். என்னை குற்றவாளியாக சித்தரிக்க அவர் முயற்சி செய்கிறார். என் மீது ஒரு கிரிமினல் வழக்கும் இல்லை. அவர் என்னென்ன செய்தார் என்று என்னிடம் உள்ளது. நேரம் வரும்போது வெளியே கொண்டு வருவேன்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி