மும்பை: ‛‛ மஹாராஷ்டிராவில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும்'' என மஹா விஹாஸ் அகாதி கூட்டணி கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர். லோக்சபா தேர்தலை தொடர்ந்து, மஷாராஷ்டிராவில் எதிர்க்கட்சிகளின் கூட்டணியான ‛ மஹாராஷ்டிரா விகாஸ் அகாதி' கூட்டணியில் விரிசல் ஏற்பட்டு உள்ளதாக தகவல் வெளியானது. இக்கூட்டணியில் காங்கிரஸ் , உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் காங்கிரசின் பிரத்விராஜ் சவான், உத்தவ் தாக்கரே, மற்றும் சரத்பவார் ஆகியோர் கூட்டாக நிருபர்களை சந்தித்தனர்.நம்பிக்கை
அப்போது பிரித்வி சவான் கூறியதாவது: மஹாராஷ்டிர மக்களுக்கு நன்றி தெரிவிக்கவே இன்று ஒன்று கூடி உள்ளோம். ‛ மஹாராஷ்டிரா விகாஸ் அகாடி' கூட்டணி வேட்பாளர்களை மக்கள் அமோக வெற்றி பெற வைத்து உள்ளனர். அதிக ஓட்டுகள் எங்களுக்கு கிடைத்து உள்ளது. ஜனநாயகத்தை காக்க நாங்கள் ஒன்று சேர்ந்துள்ளோம். லோக்சபா தேர்தலை போலவே, சட்டசபை தேர்தலிலும் மக்கள் எங்களுக்கு ஆதரவு அளிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இதன் பிறகு மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றார்.பிரதமருக்கு நன்றி
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறுகையில், பிரதமர் மோடி எங்கு எல்லாம் ரோடு ஷோ மற்றும் பேரணி நடத்தினாரோ அங்கு எல்லாம் நாங்கள் வெற்றி பெற்று உள்ளோம். இதற்காக நாங்கள் அவருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். 3 மாதத்தில் மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். எந்த வித காரணமும் இல்லாமல் பலர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர் என்றார். விரிசல் இல்லை
உத்தவ் தாக்கரே கூறுகையில், அரசியல்சாசனத்தையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்கும் போராட்டம் நடக்கிறது. சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. மோடியின் அரசு தேஜ கூட்டணி அரசாக மாறி உள்ளது. இன்னும் எத்தனை நாட்களுக்கும் நீடிக்கும். மஹா., விகாஸ் அகாதி கூட்டணியில் விரிசல் ஏதும் இல்லை. 400 இடங்களில் வெற்றி பெறுவோம் என பா.ஜ., கூறியது. மோடியின் கியாரண்டிகளுக்கு என்ன நிகழ்ந்தது. எங்களின் அரசு ரிக்ஷாவின் 3 சக்கரம் என துணை முதல்வர் பட்னாவிஸ் கூறினார். அதே நிலை தான் மோடி அரசுக்கும் ஏற்பட்டு உள்ளது. லோக்சபா தேர்தலில் எங்களுக்கு கிடைத்த வெற்றி முடிவு அல்ல.அது தான் ஆரம்பம் என்றார்.