பாட்னா:மிக நீண்ட அரசியல் அனுபவம் உள்ள ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதீஷ் குமார், நேற்று காலையில் பீஹார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்து, மாலையில் பா.ஜ., ஆதரவுடன் மீண்டும் முதல்வராக பதவியேற்றார். கடந்த 18 மாதங்களில் இரண்டாவது முறையாக அணி மாறியுள்ள நிதீஷ், தற்போது ஒன்பதாவது முறையாக முதல்வராக பதவியேற்றுள்ளார். 'இண்டியா' கூட்டணியில் நினைத்தது நடக்கவில்லை என புகார் கூறியுள்ளார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=qj3avyzx&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பீஹார் மற்றும் தேசிய அரசியலில் மிக முக்கிய தலைவரான நிதீஷ் குமார், 72, மிக நீண்ட அரசியல் அனுபவம் உள்ளவர். மத்திய அமைச்சராகவும் நீண்ட காலம் பணியாற்றிய அவர், 2000ல் முதல் முறையாக பீஹார் முதல்வரானார். மகாகட்பந்தன்
ஆனால், சில நாட்கள் மட்டுமே அந்த பதவியில் இருந்தார். இதைத் தொடர்ந்து, 2005ல் இருந்து பீஹார் முதல்வராக உள்ளார். நடுவில் ஒன்பது மாதங்கள் கட்சியில் குழப்பம் ஏற்படுவதை தடுக்க, ஜிதன் ராம் மஞ்சியை முதல்வராக்கினார். ஆனால், மீண்டும் முதல்வர் பதவியில் நிதீஷ் அமர்ந்தார்.தன் அரசியல் பயணத்தில், 20 ஆண்டுகள் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்த அவர், இடையில் நான்கு ஆண்டுகள் லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்டவை அடங்கிய, 'மகாகட்பந்தன்' கூட்டணிக்கு சென்றார்.இத்தனை மாற்றங்களை சந்தித்தபோதும், அவர் தொடர்ந்து முதல்வராக இருந்து வருகிறார். கடந்த 2020 தேர்தலில், பா.ஜ.,வுடன் இணைந்து தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடித்தார்.ஆனால், 2022ல் கூட்டணியை முறித்து, மகாகட்பந்தன் கூட்டணிக்கு சென்றார்.இதற்கிடையே, லோக்சபா தேர்தலில் மத்தியில் ஆளும் பா.ஜ.,வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அவருடைய முயற்சிகளின் பலனாக உருவானதே, 28 கட்சிகள் அடங்கிய இண்டியா கூட்டணி. மரியாதை இல்லை
ஆனாலும், மகாகட்பந்தன் மற்றும் இண்டியா கூட்டணியில், தனக்கு சரியான மரியாதை தரப்படவில்லை என்ற ஆதங்கத்தில் இருந்தார். இதையடுத்து, மீண்டும் பா.ஜ.,வுடன் கூட்டணி சேருவதற்கான முயற்சிகளை துவக்கினார்.இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, நேற்று காலையில், மகாகட்பந்தன் கூட்டணி அரசின் முதல்வர் பதவியில் இருந்து விலகும் ராஜினாமா கடிதத்தை, கவர்னர் ராஜேந்திர அர்லேகரிடம்அளித்தார். பா.ஜ.,வின் ஆதரவோடு ஆட்சியமைக்க, மதியம் உரிமை கோரினார். அதைத் தொடர்ந்து நேற்று மாலையில், ஒன்பதாவது முறையாக அவர் முதல்வரானார்.அவருக்கு கவர்னர் ராஜேந்திர அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் எட்டு பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.பா.ஜ.,வைச் சேர்ந்த விஜய் குமார் சின்ஹா, சம்ரத் சவுத்ரி, பிரேம் குமார், ஐக்கிய ஜனதா தளத்தின் விஜய் குமார் சவுத்ரி, விஜயேந்திர யாதவ், சிராவண் குமார் அமைச்சர்களாக பதவியேற்றனர்.ஜிதன் ராம் மஞ்சியின் ஹிந்துஸ்தான் ஆவாம் மோர்ச்சாவைச் சேர்ந்த சந்தோஷ் குமார் சுமன், சுயேச்சை எம்.எல்.ஏ., சுமித் சிங் ஆகியோரும் அமைச்சர்களாக பதவியேற்றனர். மற்ற அமைச்சர்கள் தொடர்பான முடிவு, ஓரிரு நாட்களில் எடுக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.Galleryபா.ஜ., தேசிய தலைவர் நட்டா உள்ளிட்டோர் பதவியேற்பு விழாவில் பங்கேற்றனர்.முன்னதாக முதல்வர் பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தை கவர்னரிடம் அளித்து திரும்பிய அவர், நிருபர்களிடம் கூறியதாவது:இந்த கூட்டணியை உருவாக்க எவ்வளவு முயற்சிகள் செய்தேன் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், மகாகட்பந்தன் மற்றும் இண்டியா கூட்டணியில் நான் நினைத்தது நடக்கவில்லை.எங்கள் கட்சியின் மூத்த தலைவர்களும், நடந்து வரும் நிகழ்வுகளில் மன கசப்பு அடைந்தனர். இதனால், கூட்டணியில் இருந்து விலகும் முடிவை எடுத்தேன்; முதல்வர் பதவியையும் ராஜினாமா செய்தேன்.இவ்வாறு அவர் கூறினார்.இதற்கிடையே, நிதீஷ் குமாரின் இந்த அரசியல் மாற்றம் குறித்து, ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணியில் உள்ள கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன.
பச்சோந்தி -என காங்., விமர்சனம்
கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ள நிதீஷ் குமாரை, காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது. காங்கிரஸ் பொதுச்செயலர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளதாவது:எங்கள் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல், பாரத ஒற்றுமை நியாய யாத்திரை நடத்தி வருகிறார். மக்களிடையே அதற்கு பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் ஏற்பட்ட பயத்தால், பா.ஜ., இந்த அரசியல் நாடகத்தை நடத்தியுள்ளது.அடிக்கடி கூட்டணியை மாற்றுவதன் வாயிலாக, நிறம் மாறும் பச்சோந்திக்கு கடுமையான போட்டியை நிதீஷ் குமார் கொடுத்துள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.பீஹாரில் அமைந்துள்ள புதிய ஆட்சிக்கு வாழ்த்துக்கள். இந்த அரசு, பீஹார் மக்களுக்கு தன் முழுமையான சேவையை வழங்கும். மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் எந்த வாய்ப்பையும் தவற விடாது என்று நம்புகிறேன்.நரேந்திர மோடி, பிரதமர்இண்டியா கூட்டணியில் நீடிக்க வேண்டும் என விரும்பியிருந்தால், நிதீஷ் எங்களுடன் இருந்திருப்பார். அவர் இங்கிருந்து விலக வேண்டும் என முடிவு செய்து விட்டார். கூட்டணியில் இருந்து நிதீஷ் விலகுவார் என்பது ஐந்து நாட்களுக்கு முன்பே தெரியும்.மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் தலைவர்தேஜஸ்வி பாய்ச்சல்
ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி கூறியதாவது: பீஹார் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை, ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி நிறைவேற்றி உள்ளது. நிதீஷ் குமார் எங்களுடன் இருந்த போது ஏராளமான பணிகள் செய்துள்ளதாக ஒப்புக் கொண்டுள்ளார். அவர் மரியாதைக்குரிய தலைவர் தான். ஆனால் வயதாகி விட்டதால், மிகவும் சோர்வடைந்து விட்டார். அணி மாறியதற்கு என்ன காரணம் வேண்டுமானாலும் நிதீஷ் குமார் சொல்லட்டும். இந்த லோக்சபா தேர்தலுடன், ஐக்கிய ஜனதா தளத்தின் அரசியல் முடிவுக்கு வரும் என்பதில் சந்தேகமில்லை. இண்டியா கூட்டணி வலுவாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.'கூட்டணி மாறியது ஏன்?'
ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.பி., கே.சி.தியாகி நேற்று கூறியதாவது:இண்டியா கூட்டணியின் தலைமைப் பொறுப்பை திருட, காங்., முயற்சி செய்து வருகிறது. டிச., 19ல் நடந்த கூட்டத்தில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வாயிலாக, கூட்டணியின் தலைவராக மல்லிகார்ஜுன கார்கேவை காங்., அறிவிக்கச் செய்தது.மேலும், லோக்சபா தேர்தலுக்காக தொகுதிப் பங்கீட்டை விரைவாக முடிக்க வேண்டும் என பலமுறை வலியுறுத்தியும், அதில் அக்கறை செலுத்தாமல், காங்., நிர்வாகிகள் இழுத்தடித்து வந்தனர். உண்மையில் பா.ஜ.,வை எதிர்த்துப் போராட, இண்டியா கூட்டணிக்கு சரியான திட்டமிடல் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டணி மாறுவதில் கைதேர்ந்தவர்
பீஹாரில் நீண்டகாலமாக, 17 ஆண்டு, 151 நாட்கள் முதல்வராக இருப்பவர் நிதீஷ் குமார். கூட்டணி விட்டு கூட்டணி மாறுவதில் கைதேர்ந்தவர். ஒன்பது முறை முதல்வராக பதவியேற்றுள்ளார். இவரது அரசியல் பயணம்:1987: யுவ லோக் தளம் கட்சி தலைவரானார்1989: ஜனதா தளத்தில் சேர்ந்தார். பீஹார் ஜனதா தள பொதுச்செயலரானார்1994: ஜார்ஜ் பெர்ணான்டஸ் உடன் இணைந்து சமதா கட்சியை துவக்கினார்1996: பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணியில் சேர்ந்தார்2000 மார்ச் 3 - 10: முதன் முறையாக பீஹார் முதல்வரானார். ஏழு நாளில் பதவியை இழந்தார்2003: ஐக்கிய ஜனதா தளம் உதயமாகி, அதன் தலைவரானார்2005: தே.ஜ., கூட்டணி சார்பில் பீஹார் முதல்வரானார்2010: தே.ஜ., கூட்டணி சார்பில் பீஹார் முதல்வர்2013: பிரதமர் வேட்பாளராக மோடியை அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, 17 ஆண்டு கால தே.ஜ., கூட்டணியை முறித்தார்2014 மே 20: லோக்சபா தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று முதல்வர் பதவியில் இருந்து விலகினார். ஜிதன்ராம் மஞ்சியை முதல்வராக்கினார்2015 பிப்., 22: லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணியில் சேர்ந்து முதல்வரானார்2015 நவ., 20: ராஷ்ட்ரீய ஜனதா தளம் - காங்., ஆதரவுடன் மீண்டும் முதல்வர்2017 ஜூலை 27: லாலு கூட்டணியில் இருந்து விலகி, மீண்டும் பா.ஜ.,வுடன் இணைந்து தே.ஜ., கூட்டணி சார்பில் முதல்வர்2020 நவ., 16: தே.ஜ., கூட்டணி சார்பில் முதல்வர்2022 ஆக., 9: தே.ஜ., கூட்டணியில் இருந்து விலகல். மீண்டும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் - காங்., கூட்டணியில் இணைந்து முதல்வர்2024 ஜன., 28: ராஷ்ட்ரீய ஜனதா தளம் - காங்., கூட்டணியில் இருந்து விலகல். மீண்டும் தே.ஜ., கூட்டணி சார்பில் முதல்வர்.