காளி ஆற்றின் பழைய பாலத்தால் ஆபத்து
உத்தர கன்னடா : கார்வார் காளி நதியின் குறுக்கே கட்டப்பட்டிருந்த பாலம், கடந்தாண்டு இடிந்து விழுந்தது. இதை முழுதாக இடிக்கும் பணியின்போது, பாலத்தின் ஒரு துாண் மட்டும் திடீரென தானாக இடிந்தது.உத்தரகன்னடா மாவட்டம், காளி ஆற்றின் குறுக்கே 1983ல் 0.66 கி.மீ., நீளத்துக்கு பாலம் கட்டப்பட்டது. யூனியன் பிரதேசமான கோவாவை இணைக்க, இப்பாலம் மக்களுக்கு பெரும் உதவியாக இருந்தது. பல ஆண்டுகளுக்கு பின், போக்குவரத்தை சீர் செய்யும் வகையில் இரண்டாவது பாலம் கட்டப்பட்டது.பழைய பாலத்தை இடிக்க வேண்டும் என்று அப்பகுதியினர் வலியுறுத்தி வந்தனர். ஆனால், இதை ஆய்வு செய்த அதிகாரிகள், இரண்டு பாலங்களையும் ஒருவழிச்சாலையாக பயன்படுத்த அறிவுறுத்தினர். அதன்படியே பயன்பட்டன.இந்நிலையில், கடந்தாண்டு ஆகஸ்ட் 7ம் தேதி அதிகாலையில், இப்பாலம் இடிந்து விழுந்தது. அப்போது பாலத்தில் சென்று கொண்டிருந்த தமிழகத்தை சேர்ந்த லாரியும் விழுந்தது.அதில் இருந்த ஓட்டுநர், லாரியின் மேல் அமர்ந்து கொண்டதால் உயிர் தப்பினார். இதை பார்த்த அங்கிருந்த மீனவர்கள், உடனடியாக அங்கு சென்று ஓட்டுநரை மீட்டனர்.அதன் பின், இந்த பாலத்தை இடிக்க வேண்டும் மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி இடிக்கும் பணியை, ஐ.ஆர்.பி., நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. நேற்று முன்தினம் திடீரென பழைய பாலத்தின் துாண் ஒருபுறமாக சரிந்து விழுந்தது. அந்நேரத்தில் ஊழியர்கள் யாரும் பணி செய்யாததால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.இதை பார்த்த அப்பகுதியை சேர்ந்த விநாயக் நாயக் கூறுகையில், ''கார்வார் - கோவாவை தரை வழியில் இணைக்கும் ஒரே பாலம் இது தான். தற்போது இடிந்து விழுந்த பழைய பாலத்தின் துாண், புதிய பாலத்தின் மீது மோதியிருந்தால், அசம்பாவிதம் நிகழ்ந்திருக்கும். ''எனவே, இதை இடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள நிறுவனம், எச்சரிக்கையாக இடிக்க வேண்டும். இங்கு பணியாற்றும் ஊழியர்களும், உரிய பாதுகாப்பு இன்றி பணியாற்றி வருகின்றனர்,'' என்றார்.இவ்வழியாக வந்த பெரும்பாலான வாகன ஓட்டிகள், புதிய பாலத்தின் அருகில் பழைய பாலத்தின் துாண் நின்று கொண்டிருப்பதை அதிர்ச்சியுடன் பார்த்தபடி செல்கின்றனர்.அசம்பாவிதம் நடப்பதற்குள் ஆபத்தான நிலையில் உள்ள துாணை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.