இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட ரவுடிக்கு 11 நாள் என்ஐஏ காவல்
புதுடில்லி: மஹாராஷ்டிரா மாநில முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட ரவுடி அன்மோல் பிஷ்னோயை 11 நாள் காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏவுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.கடந்தாண்டு மும்பையில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீடருகே துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தது. இதற்கு , ரவுடி லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரன் அன்மோல் பிஷ்னோய் பொறுப்பேற்றுக் கொண்டான். இதைத் தொடர்ந்து, மஹாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கும் இவன் பொறுப்பேற்றுக் கொண்டான். இவன் மீது மேலும் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாக அந்நாட்டு போலீசார் கைது செய்து இந்தியாவுக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து அவனை நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகளில் மத்திய உள்துறை அமைச்சகம் ஈடுபட்டது.இந்திய அரசின் கோரிக்கையை ஏற்று அவனை அமெரிக்கா நாடு கடத்தியது. டில்லி சர்வதேச விமான நிலையத்தில் அன்மோல் பிஷ்னோயை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். தொடர்ந்து அவரை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய என்ஐஏ அதிகாரிகள், 15 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டனர். விசாரணை முடிவில் 11 நாள் காவலில் விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்தார்.