| ADDED : மே 24, 2024 08:45 PM
புனே : மஹாராஷ்டிராவில் மது போதையில் சொகுசு காரை ஓட்டி இருவர் பலியான சம்பவத்தில் 17 வயது சிறுவனுக்கு ராஜஉபச்சாரம் செய்துள்ளதாக எழுந்த புகாரில் 2 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.மஹாராஷ்டிர மாநிலம் புனேவில் கடந்த 20-ம் தேதி ரூ. 2.5 கோடி மதிப்பிலான 'பார்ஷ்' சொகுசு கார் மோதி பைக்கில் வந்த தம்பதியினர் இருவர் உயிரிழந்தனர்.விசாரணையில், காரை ஓட்டியது ரியல் எஸ்டேட் அதிபரின் 17 வயது மகன் வேதாந்த் என்பதும், குடிபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதும் தெரிந்தது. அவருடன் வந்த நண்பர்கள் தப்பி ஓடிவிட்டனர்.சிறுவன் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், மைனர் என்பதால் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி, பல்வேறு நிபந்தனைகளுடன் சிறுவனுக்கு ஜாமின் வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியது. பின் ஜாமினை ரத்து செய்து சிறார் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்ப உத்தரவிட்டார்.இந்நிலையில், விபத்தை ஏற்படுத்திய சிறுவனை கைது செய்த ஏர்வாடா போலீஸ் நிலைய போலீசார் சிறுவன் கோடீஸ்வரனின் மகன் என்பதால் அவனை தங்கள் காவலில் வைத்திருந்த போது அவனுக்கு பீட்சா, பர்க்கர் ஆகிய உயரக உணவு ஐயிட்டங்களை வாங்கி கொடுத்து ராஜ உபசரிப்பு செய்ததாக புகார் எழுந்தது.இது தொடர்பாக போலீஸ் கமிஷனர் விசாரணை நடத்த உத்தரவிட்டார். விசாரணையில் இரு காவல் ஆய்வாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.