உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தற்கொலை செய்த கான்ட்ராக்டர் சச்சின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம்!: ராஜினாமா செய்ய மாட்டேன் என பிரியங்க் கார்கே அடம்

தற்கொலை செய்த கான்ட்ராக்டர் சச்சின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம்!: ராஜினாமா செய்ய மாட்டேன் என பிரியங்க் கார்கே அடம்

பீதர்: ''தற்கொலை செய்து கொண்ட கான்ட்ராக்டர் சச்சின் குடும்பத்திற்கு, அரசு சார்பில் 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும்,'' என்று, பீதர் மாவட்ட பொறுப்பு அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே அறிவித்து உள்ளார். 'சச்சின் தற்கொலையில் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. ராஜினாமா செய்ய மாட்டேன்' என்று, அமைச்சர் பிரியங்க் கார்கே அடம் பிடித்து வருகிறார்.பீதர், பால்கி கட்டிடுங்காவ் கிராமத்தில் வசித்தவர் சச்சின் மோனப்பா பஞ்சால், 26; கான்ட்ராக்டர். கடந்த 26ம் தேதி ரயில் முன் பாய்ந்து, தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதி வைத்திருந்த ஏழு பக்க கடிதத்தில், 'கலபுரகி மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் ராஜு கப்பனுார், அரசு துறையில் ஒப்பந்த பணிகளை வாங்கி தருவதாக கூறி, என்னிடம் 15 லட்சம் ரூபாய் வாங்கி ஏமாற்றி விட்டார். மேலும் 1 கோடி ரூபாய் கேட்டு, கொலை மிரட்டல் விடுக்கிறார்' என்று எழுதி இருந்தார். சச்சின் தற்கொலை தொடர்பாக, பீதர் ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.ராஜு கப்பனுார், அவரது ஆதரவாளர்கள் ஏழு பேர் மீது, பால்கி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். ராஜு கப்பனுார், கிராம பஞ்சாயத்து ராஜ் வளர்ச்சி அமைச்சர் பிரியங்க் கார்கேயின் தீவிர ஆதரவாளர். இதனால் சச்சின் தற்கொலைக்கு பொறுப்பு ஏற்று, அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று, பா.ஜ., தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

சி.ஐ.டி., விசாரணை

இந்நிலையில் மாநில வன அமைச்சரும், பீதர் மாவட்ட பொறுப்பு அமைச்சருமான ஈஸ்வர் கன்ட்ரே, சச்சின் வீட்டிற்கு நேற்று சென்றார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அப்போது, 'ராஜு கப்பனுார் உட்பட யாரும் கைது செய்யப்படவில்லையே' என்று, சச்சினின் குடும்பத்தினர், ஈஸ்வர் கன்ட்ரேயிடம் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். ''இந்த வழக்கில் யாரையும் தப்பிக்க விட மாட்டோம். அரசு உங்களுடன் இருக்கிறது,'' என்று, ஈஸ்வர் கன்ட்ரே ஆறுதல் கூறினார்.பின், அவர் அளித்த பேட்டி:சச்சின் தற்கொலை குறித்து சுதந்திரமான விசாரணை நடைபெற வேண்டும் என்று, அமைச்சர் பிரியங்க் கார்கே ஏற்கனவே கூறி இருக்கிறார். நானும் அதை தான் சொல்கிறேன். சி.ஐ.டி., விசாரணைக்கு உத்தரவிடும்படி முதல்வர் சித்தராமையா, உள்துறை அமைச்சர் பரமேஸ்வரிடம் கோரிக்கை வைப்போம். சச்சின் குடும்பத்திற்கு அரசு துணை நிற்கும்.சச்சின் தற்கொலையில் அலட்சியமாக செயல்பட்ட, இரண்டு போலீஸ்காரர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர். சச்சின் குடும்பத்திற்கு அரசு சார்பில் 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும். இந்த மரணத்தில் கூட பா.ஜ., அரசியல் செய்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.

பிரச்னை இல்லை

ஈஸ்வர் கன்ட்ரே சென்றதும், விஜயேந்திரா தலைமையில் பா.ஜ.,வினர் சச்சின் வீட்டிற்கு சென்று, ஆறுதல் கூறினர். ''சச்சின் மரணத்திற்கு நியாயம் கிடைக்கும் வரை, நாங்கள் போராட்டம் நடத்துவோம். வழக்கை சி.பி.ஐ.,க்கு ஒப்படைக்க வலியுறுத்துவோம்,'' என்று விஜயேந்திரா கூறினார்.சித்ரதுர்கா பா.ஜ., - எம்.பி., கோவிந்த் கார்ஜோள் கூறுகையில், ''பிரியங்க் கார்கே இளைஞர். அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யட்டும். மற்றவர்களுக்கு முன்மாதிரியாக திகழட்டும்,'' என்றார்.இது குறித்து, அமைச்சர் பிரியங்க் கார்கே கூறுகையில், ''கான்ட்ராக்டர் சச்சின் தற்கொலை வழக்கில், என் மீது எந்த தவறும் இல்லை. அவர் எழுதிய கடிதத்தில் எனது பெயர் குறிப்பிடவில்லை. செய்யாத தவறுக்கு நான் ஏன் ராஜினாமா செய்ய வேண்டும். கண்டிப்பாக அதை செய்ய மாட்டேன். பா.ஜ.,வினர் மிரட்டலுக்கு பயப்பட மாட்டேன். அமலாக்கத் துறை, வருமானவரி, சி.பி.ஐ., அமைப்புகளை ஏவிவிட்டாலும் பயப்பட மாட்டேன். பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் சென்று, என் மீது புகார் அளித்தாலும் பிரச்னை இல்லை,'' என்றார்.

போலீசாருக்கு எதிர்ப்பு

சச்சின் வீட்டிற்கு அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே சென்ற போது, அவரது பாதுகாப்புக்காக போலீசாரும் வந்தனர். போலீசாரை பார்த்து கோபம் அடைந்த சச்சின் குடும்பத்தினர், 'நாங்கள் புகார் அளித்த போதே நீங்கள் நடவடிக்கை எடுத்து இருந்தால், சச்சினை காப்பாற்றி இருக்கலாம். உங்கள் அலட்சியத்தால் தான் உயிர் போனது. என்ன முகத்தை வைத்து கொண்டு இங்கு வருகிறீர்கள்' என்று ஆவேசமாக கேட்டனர். 'எங்கள் வீட்டில் இருந்து வெளியே செல்லுங்கள்' என்றனர். இதையடுத்து, வேறு வழியின்றி போலீசார் வெளியே சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை