| ADDED : நவ 28, 2025 09:04 AM
சபரிமலை: ச பரிமலை அன்னதானத்தில் இனி மதியம் வெரைட்டி ரைசுக்கு பதிலாக பாயாசத்துடன் கூடிய விருந்து வழங்கமுடிவு செய்யப்பட்டு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. சபரிமலை வரும் பக்தர்களுக்கு திருவிதாங்கூர் தேவசம்போர்டு சார்பில் மூன்று வேளையிலும் அன்னதானம் வழங்கப்படுகிறது. காலையில் உப்புமா, மதியம் வெரைட்டி ரைஸ், இரவு கஞ்சி அல்லது உப்புமா வழங்கப்பட்டு வந்தது. இதில் மதியம் வழங்கப்படும் வெரைட்டி ரைசுக்கு பதிலாக பாயாசத்துடன் கூடிய விருந்து வழங்க திருவிதாங்கூர் தேவசம்போர்டு முடிவு செய்தது. இது தொடர்பான ஏற்பாடுகளை செய்வதற்காக சபரிமலை செயல் அலுவலர் பிஜுவின் தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். மதிய உணவு என்பதை மதிய விருந்தாக மாற்றி பாயாசம், பப்படம், கூட்டு வகைகள், பருப்பு, சாம்பார், ரசம் போன்றவை வழங்குவதற்கு ஆலோசனை நடைபெற்று வருகிறது. தொடர்ந்து வழங்க வேண்டிய சூழ்நிலை இருப்பதால் அதற்கான முன்னேற்பாடுகளை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். கூடுதல் ஊழியர்கள் நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் ஜெயக்குமார் சன்னிதானத்தில் வந்து ஏற்பாடுகளை பார்வையிட்ட பின்னர் இந்த திட்டம் தொடங்கப்படும். மண்டல சீசன் தொடங்கிய பின்னர் நேற்று மாலை வரை தரிசனம் செய்த பக்தர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்தது.