உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஷாருக்கான் மகன் இயக்கிய வெப் சீரிஸ்: போதைப்பொருள் தடுப்புப் பிரிவு முன்னாள் அதிகாரி வழக்கு

ஷாருக்கான் மகன் இயக்கிய வெப் சீரிஸ்: போதைப்பொருள் தடுப்புப் பிரிவு முன்னாள் அதிகாரி வழக்கு

புதுடில்லி: பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் இயக்கத்தில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான சீரிஸ், தனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவு முன்னாள் அதிகாரி சமீர் வான்கடே டில்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.கடந்த 2021 அக்.2 ல் மும்பையில் இருந்து கோவாவுக்கு சென்ற சொகுசுக் கப்பல் கிளம்பியது. இதில் சாதாரண உடையில் பயணம் செய்த போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் பயணம் செய்தார். கேளிக்கை விருந்தின் போது போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர். ஆர்யன் கான் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் இருந்து அவரைக் காப்பாற்ற ரூ.25 கோடி லஞ்சம் வாங்கியதாக சமீர் வான்கடே மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு விசாரணை நடைபெற்ற நிலையில் சமீர் வான்கடே சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.இந்நிலையில், ஷாருக்கான் மற்றும் அவரது மனைவி கவுரி தயாரிப்பில் ரெட் சில்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம், ஆர்யன்கான் இயக்கத்தில் 'B***ds of Bollywood' என்ற சீரிஸ் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியானது.இந்நிலையில் இந்த சீரிஸில் தனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர்களான ஷாருக்கான், கவுரி மற்றும் அந்த சீரிஸை வெளியிட்ட நெட்பிளிக்ஸ்க்கு எதிராக டில்லி ஐகோர்ட்டில் சமீர் வான்கடே அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், இந்த சீரிஸில், ஒரு கதாபாத்திரம், ' சத்யமேவ ஜெயதே' என்ற தேசிய முழக்கத்தைச் சொல்லிவிட்டு தனது நடுவிரலை உயர்த்தி காட்டும் மிக கீழ்த்தரமான செய்கையை செய்வதும் காட்சிபடுத்தப்பட்டுள்ளது. இது தேசத்துக்கே அவமரியாதை எனக்கூறியுள்ளார்.அவர்களிடம் ரூ.2 கோடி நஷ்ட ஈடு கேட்டும், அதனை நேரடியாக டாடா புற்றுநோய் சிகிச்சை மையத்துக்கு அனுப்ப வேண்டும் எனவும் கூறியுள்ளார். டில்லி ஐகோர்ட்டில் நாளை இந்த வழக்கு நீதிபதி புருஷைந்திர குமார் கவுரவ் முன்பு விசாரணைக்கு வர உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !