சந்தேஷ்காளி தாக்குதல் சம்பவம்; முக்கிய சாட்சியை கொல்ல முயற்சி
கொல்கட்டா: மேற்கு வங்கத்தின் சந்தேஷ்காளி குற்ற சம்பவங்களின் முக்கிய சாட்சியாக உள்ள போலாநாத் கோஷை, லாரி ஏற்றி கொல்ல நடந்த முயற்சியில், அவரது மகன் உயிரிழந்தார். மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள வடக்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில் உள்ளது சந்தேஷ்காளி. விசாரணை
ரேஷன் வினியோக மோசடி வழக்கு தொடர்பாக இந்தப் பகுதியின் திரிணமுல் காங்., பிரமுகர் ஷாஜஹான் ஷேக்கிடம் விசாரிக்க, கடந்த ஆண்டு ஜனவரி 5ல் அமலாக்கத் துறை அதிகாரிகள் சென்றனர். ஆனால், ஷேக்கின் ஆதரவாளர்கள், அமலாக்கத் துறை அதிகாரிகளை தாக்கினர். இதுதொடர்பாக சி.பி.ஐ., நடத்திய விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த போலாநாத் கோஷ் என்பவர் முக்கிய சாட்சியாக இருந்தார். இதையடுத்து, ஷாஜஹான் ஷேக் மற்றும் அவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டனர். இதுதவிர, சந்தேஷ்காளியில் அரங்கேறிய நில அபகரிப்பு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சம்பவங்கள் குறித்தும் போலாநாத் கோஷ் முக்கிய சாட்சியாக மாறினார். குற்றச்சாட்டு
இந்நிலையில், மேற்கு வங்கத்தின் பாசிர்ஹாட் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் நடந்த விசாரணைக்காக, கோஷ் தன் இளைய மகன் சத்யஜித்துடன் காரில் சென்றார். அப்போது இவர்கள் கார் மீது லாரி மோதியது. இதில், கோஷின் இளைய மகன் சத்யஜித் மற்றும் டிரைவர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட கோஷ், அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 'விபத்து ஏற்படுத்திய லாரியை ஓட்டி வந்தது ஷாஜஹான் ஷேக்கின் நெருங்கிய கூட்டாளி அலிம் மோலா' என, போலாநாத் குற்றஞ்சாட்டி உள்ளார்.